உதய் சாருடன் நடிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால்...

‘நெஞ்சுக்கு நீதி’ தான்யா ரவிச்சந்திரன் பேட்டி
தான்யா ரவிச்சந்திரன்
தான்யா ரவிச்சந்திரன்

சசிகுமார், அருள்நிதி, விஜய்சேதுபதி உள்ளிட்டவர்களுக்கு அடுத்தடுத்து ஜோடியாக நடித்து கவனம் ஈர்த்த தான்யா ரவிச்சந்திரன், இப்போது ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்ட தான்யா, அங்கே சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் வருகிறார். காமதேனு மின்னிதழுக்காக அவருடன் உரையாடியதிலிருந்து...

ஐந்து வருடங்களில் ஐந்து படங்களில் மட்டுமே நடித்திருக்கிறீர்களே..?

இரண்டு வருடம் கரோனாவுக்குப் போய்விட்டது. அதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் மூன்று வருடங்களில் ஐந்து படம் என்பது எனக்கு பெரிய அதிர்ஷ்டம். முதலிரண்டு படங்கள் நடித்து முடித்ததும், முதுகலைப் படிப்பை முடிக்கும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று வீட்டில் ஸ்டிரிக்ட்டாக உத்தரவு போட்டுவிட்டார்கள். அதனால், ’ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட்’ டிகிரியை முடிக்கும் வரை அப்ஸ்காண்டிங்கில் இருந்தேன்.

முதுபெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதில் எப்படி பெருமை கொள்கிறீர்கள்?

சினிமாவில் எனக்கு அவர்தான் அடையாளம். அதில் பெருமைதான். அவர் உயிரோடு இந்தபோது, நடிக்கிறாயா என என்னைக் கேட்டுக்கொண்டேயிருப்பார். ஆசை இருந்தாலும் அம்மா - அப்பாவுக்காக அவரிடம் என் ஆசையைக் கூறியதில்லை. அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போனதில்லை. ஆனால், வீட்டுக்கு வருகிறவர்களிடம், “என்னோட பேத்தி... என்னோட ஏஞ்சல்”ன்னு சொல்லிப் பெருமைபட்டுக்குவார். அவரது படங்களைக் குடும்பமாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். தாத்தாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவருடைய நேரம் தவறாமையும், கடின உழைப்பும் தான்.

நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது தாத்தா இறந்துவிட்டார். இப்போது அவர் உயிரோடு இருந்தால் என்னை நிச்சயம் பாராட்டியிருப்பார். என்றாலும் பூஜையறையில் அவரது படத்தைத் தொட்டு வணங்கிவிட்டே படப்பிடிப்புக்குக் கிளம்புவேன்.

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் உங்களுக்கு என்ன கதாபாத்திரம்?

உதயநிதியின் மனைவியாக அதிதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சாதிப் பாகுபாடு காரணமாக நிகழ்த்தப்படும் குற்றங்களைப் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் ஜர்னலிஸ்ட்டாக வருகிறேன். உதயநிதி அவருடைய வழக்கில் பின்னடைவைச் சந்திக்கும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் கேரக்டர். வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவருக்கு இந்தியச் சமூகம் பற்றி எடுத்துச் சொல்லும் கேரக்டர் என்றும் சொல்லலாம். நிறைய பவர் ஃபுல்லான வசனங்களும் பேசியிருக்கிறேன்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

அருண்ராஜா சார் இயக்கின ‘கனா’ என்னோட ஃபேவரைட் படங்களில் ஒன்று. தனக்கு என்ன வேண்டும் என்பதில் ரொம்பவே தெளிவாக இருப்பார். கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக நடித்தாலும் அது வேண்டாம் என்று சொல்லி ரீடேக் போயிடுவார். உதயநிதி சார் சூப்பரா நடிச்சாலும் நிறைய ரீடேக் கேட்டு வாங்குவார். எதுக்கு ரீடேக் என்று கேட்காமல் பொறுமையாக நடித்துக் கொடுப்பார். போலீஸ் உடையில் உதய் சார் அவ்வளவு பர்ஃபெக்ட் ஃபிட்டா இருந்தார். அந்தக் கேரக்டருக்கு பக்காவா ஸ்டைலா பொருந்தியும் இருந்தார். அவருடன் நடிக்க மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் உடனே ஓகே சொல்லிடுவேன்.

சிரஞ்சீவியுடன் ‘காட் ஃபாதர்’ படத்தில் நடிக்கிறீர்கள்... ஏற்கெனவே அதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறாரே?

நான் போய் சிரஞ்சீவி சாருக்கு ஜோடியாக நடிக்க முடியுமா? மலையாளத்தில் வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்தான் ‘காட்ஃபாதர்’. அதில் நான் சிரஞ்சீவி சாருக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். அவ்வளவு இனிமையான மனிதர். தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ராஜா சாருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். ‘லூசிஃபர்’ படத்தை நான் பார்த்தேன். அதில் தங்கை கேரக்டர் கிடையாது. தெலுங்கு ரீமேக்கில் மோகன் ராஜா சார் அட்டகாசமாக மாற்றங்கள் செய்திருக்கிறார்.

தெலுங்கில் உங்களுடைய அறிமுகப் படத்துக்கு வரவேற்பு எப்படியிருந்தது?

ஸ்ரீ சரிப்பள்ளி இயக்கத்தில் ‘ராஜா விக்ரமார்கா’ படத்தில் கார்த்திகேயா ஜோடியாக அறிமுகமானேன். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. பெரிய வெற்றி என்று இல்லாவிட்டாலும் எனக்கு நல்ல அறிமுகமாக அமைந்துவிட்டது. அங்கிருந்து நிறைய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன.

நகரத்தில் பிறந்து வளர்ந்துவிட்டு, தொடக்கத்தில் அடுத்தடுத்து கிராமத்துப் பெண்ணாக நடித்தபோது எப்படியிருந்தது?

நகரத்தில் வளர்ந்தாலும் கிராமம் எனக்கு அந்நியம் கிடையாது. கொடைக்கானல், ஊட்டிக்கு அப்பா - அம்மாவுடன் செல்லும்போதெல்லாம் நிறைய கிராமங்களைக் கடந்துதான் சென்றேன். அங்கங்கே அப்பா காரை நிறுத்தி வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் கிராமத்து மனிதர்களுடன் பேச்சுக்கொடுப்பார். நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பேன். மதுரை அருகில் ஒரு ஊரில் மாலை நேரத்தில் பரோட்டாவும் ஆம்லேட்டும் சாப்பிட்டோம். அவ்வளவு ருசி. இப்படி கிராமத்து அனுபவம் நிறைய. நடிக்க என்று வந்தபிறகு எனக்குப் பொருத்தமாகவும் கதையில் ஓரளவுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டராகவும் இருந்தால் போதும். டைப் காஸ்ட் பற்றியெல்லாம் கவலைப்படாமல் நடிப்பேன்.

தற்போது தமிழில் நடித்துவரும் படங்கள் பற்றி கூறுங்கள்

அதர்வா ஜோடியாக ‘ட்ரிகர்’ படத்திலும் ஜெயம் ரவி ஜோடியாக ‘அகிலன்’ படத்திலும் கிருத்திகா உதயநிதி மேடம் இயக்கும் ‘பேப்பர் போட்’ இணையத் தொடரில் காளிதாஸ் ஜெயராமுடனும் நடித்து முடித்துள்ளேன். இது தவிர, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இறக்கை முளைத்தேன்’ படத்தில் அண்டர்கவர் சிபிஐ புலன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறேன். அதில் போலீஸ் டிரெஸ் எல்லாம் எனக்குக் கிடையாது. சாதாரண உடையில் துப்பறிவது போன்ற கேரக்டர் அது.

அட்டை மற்றும் படங்கள்: பிரவீன் பி.கே

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in