விளம்பரத்துக்காக பூனம் பாண்டே அப்படிச் செய்தது தவறு...

தீப்ஷிகா பேட்டி
தீப்ஷிகா
தீப்ஷிகா

விஜய்சேதுபதி - சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான ‘மைக்கேல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான சென்னைப் பெண் தீப்ஷிகா. தற்போது விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ் படங்களில் இணைந்திருக்கிறார். தெலுங்கிலும் பிஸியாக இருக்கும் தீப்ஷிகா காமதேனு டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...

உங்களைப் பற்றி சின்னதாக ஓர் அறிமுகம்..?

நான் சென்னையில் பிறந்து வளர்ந்து வசிக்கும் தமிழ்ப் பெண். அப்பா உமாபதி பிசினஸ்மேன். அம்மா லட்சுமி குடும்பத் தலைவி. நியூஸ் ரீடர் ஆக வேண்டும் என்பதுதான் எனது லட்சியக் கனவு. அதற்காகப் பயிற்சிகூட எடுத்தேன். ஆனால், நான் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது அம்மா அப்பா சாய்ஸ். அதனால் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றினேன். படித்துக் கொண்டிருக்கும்போது மாடலிங் உலகம் எனக்கு விளம்பர வாய்ப்புகளை திறக்க, அதன் வழியாகச் சினிமாவுக்கு வந்தேன்.

தீப்ஷிகா
தீப்ஷிகா

‘மைக்கேல்’ படத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் பிசியாக இருக்கிறீர்கள் என்று செய்தி வந்தது... தமிழ் சினிமா உங்களை வருத்தமடையச் செய்துவிட்டதா?

நிச்சயமாக இல்லை. ‘மைக்கேல்’ படத்தைத் தொடர்ந்து, ‘புளூ ஸ்டார்’ படத்தை தயாரித்த லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரமேஷ் இயக்கத்தில் விக்ரம் பிரபு சார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை இயக்கியவர் இன்னாசி பாண்டியன். அவரது இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் சார் நடிக்கும் படம் ‘புல்லட்’. அதில் ஃபிளாஷ் பேக்கில் வரும் கதைதான் மிக முக்கியமானது. அதிலும் லீட் ரோலில் நடிக்கிறேன்.

தமிழ்ப் பெண்ணுக்குத் தமிழ் சினிமாவில் முன்பைவிட தற்போது மரியாதை அதிகம். உங்களுக்கு நன்றாகத் தமிழ் பேசத் தெரியும், படிக்கத் தெரியும், எழுதத் தெரியும் என்றால் தமிழ் சினிமாவில் சிலர் வேண்டுமானால் ஆச்சரியப்படலாம். பெரிய இயக்குநர்கள் அனைவரும் அதை முக்கியமான தகுதியாகப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் தாய்மொழி பேசி நடிப்பதே அலாதியான மகிழ்ச்சி தான்.

தீப்ஷிகா
தீப்ஷிகா

தெலுங்கில் நடித்துவரும் படங்களைப் பற்றி கூறுங்கள். தெலுங்கில் சரளமாகப் பேசி நடிக்க முடிந்ததா?

‘மைக்கேல்’ தெலுங்கிலும் வெளியானது. அதில் எனது நடிப்பைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் வந்தன. அதிலிருந்து இரண்டு படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறேன். அதில் ஒன்று ‘காஜல்’. அதில் மிகச் சவாலான பெண் மையக் கதாபாத்திரம். மற்றொன்று ‘மகதி’ இரண்டுமே முக்கியமான படங்களாக உருவாகியிருக்கின்றன. இந்த இரண்டு படங்களிலும் நடித்த அனுபவம் எனக்குத் தெலுங்கு மொழியைப் பரிச்சயமாக்கி விட்டது. இப்போது தெலுங்கில் என்னால் சரளமாக மாட்லாட முடிகிறது.

தீப்ஷிகா
தீப்ஷிகா

கதாநாயகியாக நடிப்பது, கதாபாத்திரங்களில் நடிப்பது இரண்டில் எதற்கு முதலிடம் தருவீர்கள்?

இரண்டுமே முக்கியம் என்று நினைக்கிறேன். ‘மைக்கேல்’ படத்தில் ஒரு சின்னக் கதாபாத்திரம் தான் செய்தேன். எனக்கு வயது 23 தான். ஆனால், அதில் மெச்சூர்டான கேரக்டர் செய்தேன். எனது திறமை என்ன என்பதைக் காட்ட, கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று காத்திருக்கவில்லை. எனது அந்த முடிவுக்கு இப்போது கைமேல் பலன் கிடைத்திருக்கிறதே...

தீப்ஷிகா
தீப்ஷிகா

நான் முன்பு சொன்னது போல ‘புல்லட்’ படத்திலும் எனது கதாபாத்திரம்தான் கதையை நகர்த்திச் செல்லும் என்பதால் அதை ஏற்று நடித்துள்ளேன். நம்மை நிரூபித்துக்கொண்டே இருந்தால்தான் இயக்குநர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஒரு படத்தில் ஜஸ்ட் வந்துவிட்டுப் போகும் வேடங்களைவிட இவைதான் நாளைக்கு இன்னும் சிறந்த, கனமான வேடங்களையும் என்னால் செய்யமுடியும் என்று சொல்ல வைக்கும். அதனால், கதாநாயகி என்பதைத் தாண்டி நடிகராக என்னை வளர்த்துக்கொள்ளும் கதாபாத்திரங்களில் நடிப்பதையும் விரும்புகிறேன்.

தீப்ஷிகா
தீப்ஷிகா

வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ கவிதைக் காணொலி ஆல்பத்தில் ‘பாதாதிகேசம்’ என்கிற பாடலின் மியூசிக் வீடியோவுக்கு எப்படித் தேர்வானீர்கள்?

பாடலின் வரிகளைப் புரிந்துகொண்டு நடிக்கிற, தென்னிந்தியச் சாயல் கொண்ட ஒரு பெண் வேண்டும் என்று அந்தப் பாடலுக்கான மியூசிக் வீடியோவை இயக்கிய பரதன் சார் தேடியிருக்கிறார். நான் தமிழ்ப் பெண் என்பதைத் தெரிந்துகொண்டு என்னை அழைத்தார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளில் உருவான கவிதைப் பாடலில் நடிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வீடியோவைப் பார்த்துவிட்டு வைரமுத்து அவர்களே என்னை ஆசீர்வதித்துப் பாராட்டினார். சினிமா நடிப்புக்கு வெளியே இதேபோல் பிற மீடியங்களிலும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தான் மரணமடைந்து விட்டதாக தகவல் பரப்பியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

செர்விக் கேன்சருக்கு தடுப்பூசி வந்துவிட்டது பற்றி கண்டிப்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், பூனம் பாண்டே தேர்ந்தெடுத்த வழிதான் தவறானது. அது அவருக்கான சுய விளம்பரமாகவும் அமைந்துவிட்டது இல்லையா? இது பொதுவெளியின் அமைதியின் மீது கல்லெறியும் செயல் என்பது என் நிலைப்பாடு.

தீப்ஷிகா
தீப்ஷிகா

சமூக ஊடகங்களை உங்களைப் போன்ற நடிகர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

என்னைப் போன்றவர்களுக்குச் சமூக ஊடகங்கள் பலம்தான். அதை நமது வளர்ச்சிக்காகப் பயன்படுத்திக்கொள்வது தவறில்லை. அவற்றை நாகரிகமான, ஆரோக்கியமான தகவல் பரிமாற்றத்துக்கான தளமாகப் பயன்படுத்திக் கொள்வது நமக்கும் நல்லது, நமது பிரபலத் தன்மைக்காக நம்மைப் பின் தொடர்பவர்களுக்கும் நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in