அஸ்வின் பேசியதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்திவிட்டன!

அவந்திகா மிஸ்ரா பேட்டி
அவந்திகா மிஸ்ரா
அவந்திகா மிஸ்ரா

பொங்கல் ரிலீஸான ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறார் அவந்திகா மிஸ்ரா. அறிமுகப் படம் அவ்வளவாய் பேசப்படாவிட்டாலும் அடுத்து அசோக் செல்வனுடன் ‘நெஞ்சமெல்லாம் காதல்’, அருள்நிதியுடன் ‘டி-பிளாக்’ ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தெலுங்கிலிருந்து தமிழ் சினிமாவுக்குள் இறக்குமதியாகி இருக்கும் இந்தக் கன்னடத்துப் பைங்கிளியிடம் காமதேனுவுக்காக உரையாடியதிலிருந்து...

உங்களைப் பற்றி கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாமா?

நான் பெங்களூரு பெண். இன்ஜினியரிங் இரண்டாமாண்டு படித்துக்கொண்டே மாடலிங் செய்துகொண்டிருந்தேன். அப்போது, இரண்டு முறை தேசிய விருதுபெற்ற தெலுங்குப்பட இயக்குநரான நீலகண்டா, ’மாயா’ என்கிற தெலுங்கு படத்தில் நடிக்க என்னை அழைத்தார். ஹர்ஷவர்தன் ஹீரோ. நான் ஹீரோயின். அந்தப் படம் சூப்பர் ஹிட் . ஆனால், படிப்பை முடிப்பதில் எனது முழு கவனமும் இருந்ததால், அடுத்தடுத்து என்னால் படங்களில் நடிக்கமுடியவில்லை. இருந்தாலும் அறிமுகப் படத்துக்குப் பிறகு, வரிசையாக விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தன. அதுவும் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.

தமிழில் அறிமுகப்படம் அவ்வளவாய் பேசப்படாமல் போனதற்கு என்ன காரணம்?

தோல்விக்குக் காரணம் கரோனா மூன்றாம் அலைதான். தினமும் சராசரியாக 25 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று என்றால், மக்கள் எப்படி தைரியமாக தியேட்டருக்கு வருவார்கள். படத்துக்குக் கிடைத்த மோசமான விமர்சனங்களும் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வராமல் போனதற்குக் முக்கியமான காரணம். என்றாலும் படத்தில் எனது ‘காதல் கதை எழுத்தாளர்’ கேரக்டருக்கு நிறையப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. படம் தோல்வி என்று வெளியில் பேசப்பட்டாலும் எனக்கும் அஸ்வின், தேஜு, புகழ் ஆகியோருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்துவிட்டன. மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து நான் நடித்துள்ள இரண்டு படங்களும் வெளியான பிறகு, தமிழில் உறுதியாக பிஸியாகிவிடுவேன்.

‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்துக்கு முன்பே நீங்களும் அஸ்வினும் இணைந்து ‘ஷேட்ஸ் ஆஃப் லவ்’ மியூசிக் வீடியோவிலும் சென்னை சில்க்ஸ் விளம்பரத்திலும் நடித்திருந்தீர்களே..?

ஆமாம்... அஸ்வின் நல்ல திறமைசாலி. படத்தின் இசை வெளியீட்டில் அவர் பேசியதை ஊடகங்கள்தான் பெரிதுபடுத்திவிட்டன. ‘ஷேட்ஸ் ஆஃப் லவ்’ மியூசிக் வீடியோவின் வெற்றியால், சோனி மியூசிக் நிறுவனம் என்னை அழைத்துப் பாராட்டியது. அதன்பிறகு நிறைய மியூசிக் வீடியோக்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்பு அமைந்ததும், தமிழ் விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அமைந்ததும் இந்த ஆல்பத்தின் வெற்றியால்தான். இதைச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

வீடியோ ஆல்பத்துக்குப் பிறகு முதலில் அருள்நிதியுடன் ‘டி-பிளாக்’ படத்துக்குத்தான் ஒப்பந்தமானேன். முதலில் விளம்பரங்கள், பிறகு மியூசிக் வீடியோ, இப்போது திரைப்படங்கள் என்று படிப்படியாக வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறியிருக்கிறேன். நடித்தால் சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என்று சும்மா உட்கார்ந்திருக்கவில்லை.

அருள்நிதியுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அவர் ஒரு ஜென்டில்மேன். நல்ல நடிப்புத் திறமை உள்ளவர். படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அடக்கமாக இருப்பார். ‘டி-பிளாக்’ அடுத்து என்ன நடக்கும் என்று பதறவைக்கும் ‘சீட் ஆஃப் எட்ஜ்’ த்ரில்லர் படம். அதில் என்னை வைத்து கதை நகர்வதும் எனக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதும் அதிர்ஷ்டம். ஒன்றைக் கவனித்தீர்களா... நான் இதுவரை நடித்துள்ள மூன்று கதாநாயகர்களுடைய பெயர்களின் முதல் எழுத்தும் ‘A’ என்ற அல்பபெட்டில் ஆரம்பிக்கிறது. என்னுடைய பெயரும் ‘A’ வில்தான் தொடங்கும். எங்கள் அனைவருக்குமே திரையுலகில் சாதிக்க வேண்டும் என்கிற ‘எய்ம்’ (AIM) உண்டு.

அசோக் செல்வனுடன் ’நெஞ்சமெல்லாம் காதல்’ எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

இப்போதைக்கு அந்தப் படம் பற்றி நான் எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்பது படக்குழுவினரின் உத்தரவு. விரைவில் தயாரிப்பாளரே அறிவிப்பார்.

பிற மாநிலத்திலிருந்து வரும் உங்களைப் போன்ற கதாநாயகிகள், தமிழ் சினிமாவில் நடிக்க வரும்போது தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதில்லையே ஏன்?

தமிழ் எனக்குப் பிரச்சினை கிடையாது. 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த யாராக இருந்தாலும் இரண்டு மாதங்களுக்குள் மற்ற மொழிகளை எளிதில் கற்றுக்கொள்ள முடியும். வடமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு ஒரு வருடம் ஆகலாம். ஆனால், எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியின் தனித்துவத்தையும் உச்சரிப்பையும் கற்றுகொண்டு பேசி நடிப்பதுதான் நமக்கு வளர்ச்சியாக அமையும். அழகை மட்டும் வைத்து சமாளித்துவிடலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

தமிழில் யாருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறீர்கள்?

மணிரத்னம் சார் படங்களை சிறுவயது முதல் பார்த்து அவருடையை ரசிகையாக மாறிப்போனவள் நான். அவரது இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது என் லட்சியம். கிராமத்துக் கதைகளுக்கு நான் பொருந்தமாட்டேன் என்று நினைக்கவேண்டாம். நான் எந்த சவாலுக்கும் தயார். சோதனைகளைச் செய்து பார்க்காமல் வெற்றிபெற முடியாது.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துகொள்ள என்ன செய்கிறீர்கள்?

தினசரி 30 நிமிடம் யோகா செய்கிறேன். உணவுக் கட்டுப்பாடு உண்டு. படப்பிடிப்பு இடைவேளைகள் மற்றும் படப்பிடிப்பிலிருந்து அறைக்குத் திரும்பும் வழியில் காருக்கு வெளியே வேடிக்கை பார்க்காமல் சிறந்த ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கிறேன். இரவு உணவுக்கு முன், நேரம் அமைந்தால் 1 மணி நேரம் நடனப் பயிற்சியும் உண்டு. தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் குளிர்ந்த நீரில் குளிப்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in