எங்கே சுத்தினாலும் சென்னை மாதிரி வராது!

‘நரகாசுரன்’ ஆத்மிகா நறுக் பேட்டி
ஆத்மிகா
ஆத்மிகா

‘மீசைய முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக வந்து ஜொலித்தவர் சென்னைப் பெண் ஆத்மிகா. அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தவர், மீண்டும் ‘கோடியில் ஒருவன்’ மூலம் கோடம்பாக்கம் களத்துக்கு வந்தார். வசீகரத் தோற்றம், இயல்பை மீறாத நடிப்பு, அழகான தமிழ் உச்சரிப்பு என ஈர்க்கும் ஆத்மிகா, ‘கண்ணை நம்பாதே’, ‘காட்டேரி’, ‘நரகாசுரன்’ என மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து…

முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் 4 வருடங்கள் இடைவெளி விழுந்துவிட்டதே?

2 வருடம் கரோனாவிலேயே காலம் ஓடிவிட்டது. ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பிறகு, நடித்துக் கொண்டுதான் இருந்தேன். ‘நரகாசுரன்’ முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். மற்ற இரண்டு படங்களும் கூட ரிலீஸ் ஆக தாமதமாகிறது. ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதோடு நடிகரின் வேலை முடிந்துவிடுகிறது. ரிலீஸ் என்பது, இந்த காலகட்டத்தில் சரியான தேதி கிடைத்து அதைச் சரியாக வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் பெரும்பாடு படுகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

‘மீசைய முறுக்கு’ படத்துக்குப் பிறகு, உங்களுக்கு சரியான எண்ணிக்கையில் வாய்ப்புகள் அமையவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?

படங்களைத் தேர்வு செய்வதில் என்னிடம் எந்தப் பதற்றமும் இல்லை. பதற்றமாகி கண்ணாபின்னாவென்று படங்களைத் தேர்வு செய்து நடித்துவிட்டு, காணாமல்போக நான் விரும்பவில்லை. எனது படங்கள் ரசிகர்களைப் போய்ச் சேரவேண்டும். அதற்காக நல்ல கதையுடன் வரும் இயக்குநர்களை நான் மதிக்கிறேன். ‘கோடியில் ஒருவன்’ பட இயக்குநர் அனந்த கிருஷ்ணனிடம் ஒரு தெளிவு இருந்தது. கதை சொன்னபோதே, படத்தை அவர் சரியான பாதையில் எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது. அப்படியொரு நம்பிக்கை கிடைத்தால் மட்டுமே படம் செய்வது என்கிற முடிவில் தெளிவாக இருக்கிறேன். “நல்ல சம்பளம் தருகிறோம் வாருங்கள்” என்று சில படங்களுக்குக் கூப்பிட்டார்கள்; நான் ஏற்கவில்லை. ஏதோ வந்தோம், பணம் சம்பாதித்தோம் என்று நான் போகவிரும்பவில்லை. எனக்குப் படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை. நீடித்து நிற்கவேண்டும் என்பதுதான் இலக்கு.

உலகையே திருப்பிப் போட்டிருக்கும் கரோனா பெருந்தொற்று, சினிமா துறைக்கு என்னென்ன பாடங்களைக் கற்றுக்கொடுத்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

சினிமா இண்டஸ்ட்ரியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல... ரசிகர்களுக்கும்கூட நிறையக் கற்றுக்கொடுத்துவிட்டது கரோனா. மக்கள் விதவிதமான படங்களைப் பார்த்து நன்றாகவே எக்யூப் ஆகியிருக்கிறார்கள். ஆடியன்ஸுடைய எதிர்ப்பார்ப்பு முன்பைவிட அதிகரித்துவிட்டது. அதனால், கிரியேட்டர்களும் தங்களை மாற்றிக்கொண்டு புதுப் புதுக் கதைகளை கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறார்கள். இது ஆரோக்கியமான மாற்றம். இந்தத் தருணத்தில் என்னைப்போன்ற புதுமுகங்களுக்கு நிச்சயம் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும் என நம்புகிறேன்.

‘கோடியில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற கார் விபத்துக் காட்சியில் டூப் போடாமலேயே நீங்களும் விஜய் ஆண்டனியும் நடித்ததாக வெளியான செய்தி உண்மைதானா?

ஆமாம்! பலமுறை ரீடேக் போனது. விஜய் ஆண்டனி சார், “நீங்கள் வேண்டாம், டூப் வைத்துக்கொள்ளலாம்” என்றார். ஆனால் இயக்குநர் அனந்த கண்ணன் சார், “ஆத்மிகாவால முடியும் சார்” என்று எனக்கு தைரியம் கொடுத்தார். அப்போதும்கூட, “நம்ம டீமை நம்பி வந்த பெண்ணைக் கஷ்டப்படுத்த வேண்டுமா?” என்று விஜய் ஆண்டனி சார் தயங்கினார். “சார் நீங்கள் நடிக்கும்போது நான் நடிக்கக் கூடாதா... காயம் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு, பிடிவாதமாகக் காரில் ஏறி அவருடன் முன் சீட்டில் அமர்ந்துகொண்டேன்.

விஜய் ஆண்டனி சார் முதல் நாள் படப்பிடிப்பில், “ஹலோ ஆத்மிகா” என்று சொன்னதோடு சரி. அதன்பிறகு அவருடன் பேசுவதற்கு சரியான வாய்ப்பு அமையவில்லை. இந்தக் கார் விபத்து சீன் எடுக்கும்போது, ஒவ்வொரு ஷாட்டுக்கும் இடையில் 20 நிமிடம் அவகாசம் கிடைத்தது. அந்த சமயங்களில் நானும் அவரும் காரில் அமர்ந்தபடி ஃப்ரீயாகப் பேசிக்கொண்டோம்.

ஹீரோ என்பதைத் தாண்டி, அவருடைய சிந்தனைகள், சமூகம் சார்ந்து அவர் எதிர்பார்க்கும் மாற்றங்கள் என ஆச்சரியப்படுத்தும் விதமாக மனம் முழுக்க அவ்வளவு நல்லெண்ணங்களைச் சேமித்து வைத்திருக்கிறார். ‘கோடியில் ஒருவன்’ படப்பிடிப்பு முழுவதிலுமே அவரை ஒரு ஹீரோவாகவே நான் உணரவில்லை. அவ்வளவு சிம்பிள் பர்சன். எளிதில் அணுகக்கூடிய ஒரு மனிதர். அவருடைய சிம்ப்ளிசிட்டிதான் அவரை இத்தனை பெரிய ஆளாக மாற்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். அவரைப் புரிந்துகொள்ள வாய்ப்பளித்தது அந்தக் கார் விபத்துக் காட்சிதான். அதில் எனக்கும் அவருக்கும் சிராய்ப்புகள் ஏற்பட்டன. விஜய் ஆண்டனியுடன் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த ஊர்… பிடித்த வாழ்க்கை?

எங்கே சுத்தினாலும் சென்னை மாதிரி வராது. ஆனால், கோடியில் ஒருவனுக்காக கம்பம் மலைப்பகுதிக்குச் சென்றபோது அங்கே செல்போன் டவர் எதுவும் இல்லை. காலை 6 மணிக்கு மலை ஏறினால் மீண்டும் மாலை 7 மணிக்கு கீழே இறங்கினால்தான் சிக்னல் கிடைக்கும். செல்போன் தேவையே இல்லாமல், மரங்கள், செடி கொடிகள், அருவி என்று இயற்கையோடு இருந்த 12 மணி நேரமும் சொர்க்கம்தான். அப்படியொரு வாழ்க்கைக்கு ஏங்கவைத்துவிட்டது அந்த ஊர்.

நடிகர் விவேக் மறைந்தபோது வீட்டிலேயே மரம் நட்டீர்கள். அதை இன்னும் தொடர்கிறீர்களா?

என்னால் முடிந்த இடங்களில், குறிப்பாக, நண்பர்கள், உறவினர் வீடுகளில் அதைச் செய்துகொண்டிருக்கிறேன். இது தொடரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் உணர்ந்து, ஐயா அப்துல் கலாம் சொன்னதை தீவிரமாக பின்பற்றி செயல்வழியாக ரோல் மாடல் காட்டி வந்தார் விவேக் சார். ஒரு கோடி மரங்களை நடுவது அவருடைய கனவு. அதை நான் மட்டுமல்ல; நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றவேண்டும். மரம் நடுவதற்காக எங்கே எப்போது என்னை அழைத்தாலும் நிச்சயமாக வருவேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in