ஆண்ட்ரியாவின் பெரிய மனசு யாருக்கு வரும்?

’வட்டம்’ அதுல்யா ரவி பேட்டி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி

கரோனா முடக்கம் முடிவுக்கு வந்து சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டபிறகு ‘நாடோடிகள் 2’, ’என் பெயர் ஆனந்தன்’, ’முருங்கைக்காய் சிப்ஸ்’ படங்களின் மூலம் தனது பயணத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து வருகிறார் அதுல்யா ரவி. ’நெக்ஸ்ட் டோர் கேர்ள்’ தோற்றம், மாடர்ன் தோற்றம் என அனைத்திலும் பொருந்திக்கொள்ளும் அதுல்யா, சிபிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘வட்டம்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதையொட்டி அவர், காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.

கோவையின் மகளான நீங்கள் ‘வட்டம்’ படத்திலும் கோவைப் பெண்ணாகவே நடித்திருப்பது இயல்பாக அமைந்ததா?

ஆமாம்! ஒரு உண்மையைச் சொல்லட்டுமா... 2017-ல் என்னுடைய அறிமுகப்படமான ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்து முடித்து ஆறு மாதம் ஆகியிருந்தது. அந்தப் படம் ரிலீஸாக தாமதமாகிக் கொண்டே இருந்த நிலையில், நான் கோவையில் பிறந்து, வளர்ந்து அங்கேயே வாழ்ந்து கொண்டிருப்பவள் என்கிற ஒரே காரணத்துக்காக ‘வட்டம்’ படத்தில் நடிக்க எஸ்.ஆர்.பிரபு சாரும் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு சாரும் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்களிடம் என்னை பரிந்துரை செய்தவர் இயக்குநர் கமலக்கண்ணன். இந்த மூவருக்கும் முதலில் என்னுடைய ‘கிரேட்ஃபுல் தேங்க்ஸ்’.

இயக்குநர் கமலக்கண்ணனுக்கு நீங்கள் வேண்டப்பட்டவர் என்பது உண்மையா?

நான் மிகவும் மதிக்கும் ஒருவர். கோவையில் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களாக சேர்ந்து எடுத்த படம்தான் ‘காதல் கண் கட்டுதே’. ஷார்ட் ஃபிலிம் எடுக்க முயற்சித்து, கொஞ்சம் கொஞ்சமாக நான்கு வருடம் எடுத்து, எடிட் செய்து பார்த்தால், முழு நீளப் படமாகவே வந்துவிட்டது. சனி, ஞாயிறில்தான் படப்பிடிப்பு நடக்கும். படப்பிடிப்பு முடிந்தபோது நானும் எம்.டெக்., படித்து முடித்திருந்தேன். அந்தப் படத்தைக் கமலக்கண்ணன் சார்தான் ரிலீஸ் செய்தார். அவர் மட்டும் ரிலீஸ் செய்யாமல் போயிருந்தால், நான் நடிக்க வந்ததே வெளியில் தெரிந்திருக்காது.

கமலக்கண்ணன் சார் இயக்கத்தில் ‘வட்டம்’ படத்தில் மீண்டும் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தின் கதையும் கோவையில் நடக்கும் ஒன்று. செமையான த்ரில்லர். அதேநேரம், த்ரில்லர் படத்துக்குள் நிறைய எமொஷனல் விஷயங்களை வைத்திருக்கிறார். இதில் தொழிலதிபராக உயர நினைக்கும் பெண்ணாக நான் நடித்துள்ளேன். கல்லூரியில் படிக்கும்போது நிஜத்திலேயே நான் அப்படி நினைத்திருக்கிறேன். அதனால், அந்த பாத்திரத்தில் நடிப்பது மிகவும் ஈஸியாக இருந்தது. கோவையிலேயே படப்பிடிப்பு நடந்தது மட்டுமல்ல... இன்னொரு கோயமுத்தூர்காரரான சிபிராஜுக்கு ஜோடியாக நடித்திருப்பதும் கூடுதல் சிறப்பு. தயாரிப்பாளர், இயக்குநர் என பலரும் கோயமுத்தூர் என்பதால், இந்தப் படம் ஒரு கோவை ஸ்பெஷல்.

இன்னொரு பெரிய கதாநாயகியான ஆண்ட்ரியா இந்தப் படத்தில் இருக்கிறாரே..?

ஆண்ட்ரியாவின் குரலுக்கும் நடிப்புக்கும் நான் பெரிய ஃபேன். இதை அவரிடமே சொல்லியிருக்கிறேன். அவருக்கு இந்தப் படத்தில் ஒரு போல்டான கேரக்டர். ஒரு காட்சியில் சில கெட்ட வார்த்தைகள்கூடப் பேசியிருக்கிறார். ‘வட்டம்’ படத்தின் பிரஸ் மீட்டில், படத்தில் நான் க்யூட்டாக இருப்பதாக மேடையில் பேசினார் ஆண்ட்ரியா. அந்தப் பெரிய மனசு யாருக்கு வரும். இந்தப் படத்தில் அவரும் நானும் இணைந்து வருவதுபோன்ற காட்சிகள் எதுவும் இல்லை. அதனால் என்ன... ஐ லவ் ஆண்ட்ரியா!

அதுல்யா முக அழகை பொலிவூட்ட பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்தனவே... அது உண்மையா?

சத்தியமா இல்லை. இயற்கையான அழகு நமக்கு அம்மா - அப்பாவிடமிருந்து வந்திருக்கிறது. பிறகு எதற்கு செயற்கையான அழகு? அப்படியே நான் செய்துகொள்ள நினைத்தாலும் அப்பா அனுமதிக்கமாட்டார். நான் அப்பா பொண்ணு. என் மீது பாசம் அதிகம். எனக்கு சின்னதாக ஒரு கீறல் என்றாலும் துடித்துவிடுவார். தற்போது வரும் என்னுடைய போட்டோ ஷூட்களில் என் முகமும் மூக்கும் முன்பைவிட அழகாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அதன் ரகசியம் வேறொன்றும் இல்லை... காய்ச்சாத பாலில் காட்டனை நனைத்து தினமும் காலை 6 மாணிக்கு ‘மில்க் மாஸ்க்’ அப்ளை செய்துகொள்வேன். அரை மணிநேரம் கழித்து ஃபேஸ் வாஷ் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவிவிடுவேன். தினசரி வொர்க் அவுட்டும் யோகாவும் உண்டு. இது தவிர, உணவில் வறுத்த, பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுகிறேன். இவ்வளவுதான் எனது அழகின் ரகசியம்.

அப்பா அஜித் ரசிகர் என்றும் நீங்கள் விஜய் ரசிகர் என்று இன்ஸ்டாவில் கூறியிருந்தீர்களே..! அப்படியானால், உங்கள் வீட்டில் தினசரி சண்டை நடக்குமே?

சண்டைக்கு வாய்ப்பே இல்லை. நான் அவருடைய ஏஞ்சல். அப்பா மிகவும் ஜாலியான ஆள். நானும் அப்பாவும் சேர்ந்து அம்மாவைத் தான் வெறுப்பேற்றுவோம். அதேசமயம், அஜித்தை அவரும் விஜயை நானும் விட்டுக்கொடுக்கமாட்டோம்.

விஜய் கூட நடிக்க எப்போ சான்ஸ் வரும்ன்னு நினைக்கிறீங்க?

எப்பன்னு என்னால் சொல்ல முடியாது. ஆனா, நிச்சயமா அமையும்னு நம்பறேன். ‘காதல் கண் கட்டுதே’ படத்துல அது படம் என்று கூட தெரியாமல் நடித்த நான், இன்றைக்கு நல்ல கதைகள், கேரக்டர்கள் கேட்டு நடிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கிறேன். அதுவும் நடக்காமலா போய்விடும்?

உங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பல ரசிகர்கள் உங்களை ‘அக்கா’ எனப் பாசமாக அழைப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

எனக்கு ரொம்பவே அது பிடித்திருக்கிறது. ஊர் பாசம், நம்ம வீட்டுப் பெண்போல நான் இருப்பதால்தான் இப்படி அழைக்கிறார்கள். ஒரு சிலர் கொஞ்சம் ஓவராகப் போய், “அக்கா உங்களை நான் பெண் பார்க்க வரலாமா?” என்று ஜாலியாகக் கேட்கிறார்கள். அதையும் கூட நான் பாசிட்டீவ் ஆகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in