இமேஜ் பற்றி நான் கவலைப்படுவதில்லை!

‘வாத்தி’ சம்யுக்தா மேனன் பேட்டி
சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனன்

மலையாளத்தில் சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சம்யுக்தா மேனன், இப்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தனுஷ் நடிப்பில் உருவாகும் ’வாத்தி’ படத்தில் இவர்தான் ஹீரோயின். தெலுங்கில் பவன் கல்யாணுடன் நடித்துள்ள மேனன், பிருத்விராஜுடன் நடித்த ‘கடுவா’ சமீபத்தில் ரிலீஸ் ஆனது. “நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்து” என்று சொல்லும் நாயகிகளுக்கு மத்தியில், “நான் விரும்பித்தான் சினிமாவுக்கு வந்தேன்” என்று சொல்லும் சம்யுக்தா மேனன் காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து...

உண்மையிலேயே விரும்பித்தான் இந்தத் தொழிலுக்கு வந்தீர்களா?

”இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை... விருப்பமில்லாமல் எந்தத் தொழிலிலும் இறங்க முடியாது. நான் ஆசைப்பட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். ஆனால், நடிப்புத் துறையில் என்னை வழிநடத்த யாரும் இல்லை. மலையாளத்தில் ’லில்லி’ என்ற பழிவாங்கும் த்ரில்லர் படத்தில் நடித்த பிறகு, சினிமா மீது ஆர்வம் இன்னும் அதிகமானது. அதற்கு என்ன காரணம் என்று தெரியாது. சரியாகத் திட்டமிட்டு, நல்ல கதைகளை தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படியே என் திட்டங்கள் இருந்தன. அப்படித்தான் இதுவரைக்கும் போய்க் கொண்டிருக்கிறது.

’கடுவா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்திருக்கிறீர்கள்..?

இந்த வாய்ப்பு வந்தபோது தெலுங்கில் இரண்டு படங்கள் எனக்கு இருந்தன. இருந்தாலும் இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஏனென்றால், நடிகர் பிருத்விராஜ், இயக்குநர் ஷாஜி கைலாஷ் - இந்த இருவரது படங்களையும் பார்த்து வளர்ந்தவள் நான். பிருத்விராஜ், சினிமாவைப் பற்றி அனைத்தும் அறிந்தவர். அவருடைய தீவிர ரசிகை நான். அவரை நடமாடும் சினிமா ஸ்கூல் என்றுதான் அழைப்பேன். அப்படிப்பட்டவருடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது அதை விட்டுவிட முடியவில்லை; உடனே ஒப்புக்கொண்டேன்.

இது உண்மைச் சம்பவக் கதையாச்சே..?

உண்மைச் சம்பவம் என்றாலும் அப்படியே பயோபிக் மாதிரி இல்லை. கடுவாகுன்னல் குருவச்சன் என்ற கேரக்டருக்கும் ஜோசப் சண்டி என்ற போலீஸ் அதிகாரிக்கும் இடையேயான ஈகோதான் கதை. அதை மாஸ் என்டர்டெய்னர் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். மோதல்தான் கதை என்றாலும் இரண்டு பேருக்கும் குடும்பம் இருக்கிறது. அந்த முக்கியத்துவத்தையும் கதை சொல்கிறது. நான் பிருத்விராஜ் மனைவியாக நடித்திருக்கிறேன். அந்தவகையில் பெரிய மாஸ் என்டர்டெயின்மென்ட் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர் படங்கள் மாதிரி மலையாளத்தில் உருவான மாஸ் படம் இது.

தெலுங்கில் ’பீம்லா நாயக்’ படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்தான் அது. ஒரிஜினல் படம் பார்த்தபோது, இது போன்ற ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை, ஒரு நடிகையாக எனக்கு ஏற்பட்டது. அது தெலுங்கில் கிடைத்ததில் மகிழ்ச்சி. ராணாவின் மனைவியாக நடித்திருந்தேன். படத்துக்கு நல்ல வரவேற்பு. என் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது. இப்போதும் எங்காவது தெலுங்கு ரசிகர்கள் பார்த்தால், அந்த கேரக்டரை சொல்லித்தான் கேட்கிறார்கள்.

தெலுங்கு, மலையாளம், தமிழ் - இந்த மூன்று சினிமாக்களில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

தெலுங்கு வாய்ப்பு உடனடியாக கிடைக்கும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. ‘பீம்லா நாயக்’ வாய்ப்பு கிடைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மலையாளத்தில் படப்பிடிப்புக்கு முன், எனது வசனங்களை படித்து உள்வாங்கிக் கொண்டு, கொஞ்சம் மேக்கப்போடு ஷாட்டுக்கு செல்வேன். தெலுங்கில் என்னை புதுமுகமாகவே உணர்ந்தேன். ஏனென்றால், அங்கு எல்லாமே சரியாக இருக்க வேண்டும். ஹேர் ஸ்டைலில் இருந்து மேக்கப், டிரெஸ்சிங் எல்லாமே துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு ஷாட்டுக்கு முன் நிறைய திருத்தங்கள் நடக்கும். முன் தயாரிப்பு வேலைகள் நடக்கும். பிறகுதான் டேக்கிற்கு செல்கிறார்கள். இது கடினமானதுதான். இருந்தாலும் நான் படிப்படியாக அவர்கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டேன். தமிழ் கலாச்சாரம் புதிதில்லை என்பதால் வித்தியாசமாக ஏதும் தெரியவில்லை.

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறீர்கள்..?

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பில் தனுஷ், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். சில நேரங்களில் புத்தகம் வாசித்துக்கொண்டு இருப்பார். சினிமா பற்றி அனைத்து விஷயங்களும் அறிந்தவர் அவர். ஷாட் ரெடி என்றதுமே அந்த கேரக்டராகவே மாறிவிடும் சிறந்த நடிகர். அவருடன் நடிப்பது எனக்கும் உற்சாகமாக இருக்கிறது.

முன்பு, இந்தப் படத்திலிருந்து நீங்கள் விலகுவதாக செய்தி வந்ததே?

என்னைப் பற்றி வந்த முதல் வதந்தி அதுவாகத்தான் இருக்கும். ஆதாரமற்ற இந்தச் செய்தி எப்படி வைரலானது என்றே தெரியவில்லை. இதற்குப் பிறகு, பேசுவதிலும் கருத்துச் சொல்வதிலும் அதிக கவனத்துடன் இருக்கிறேன்.

கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

நான் இதுவரை நடிக்காத கேரக்டர்களை விரும்புகிறேன். அந்த கேரக்டரில் என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கிறேன். வழக்கமான கதைகளில் இருந்து விலகி, வித்தியாசமான, வலுவான கேரக்டர்களை எதிர்பார்க்கிறேன். அப்படி கதைகள் கிடைத்தால் உடனே சம்மதிக்கிறேன். இதுவரை அப்படித்தான் நடித்து வந்திருக்கிறேன். தொடர்ந்து அதையே பின்பற்றுவேன்.

ஒரு நடிகையாக இமேஜ் பற்றி கவலைப்படுகிறீர்களா?

அப்படி ஏதுமில்லை. மலையாளத்தில் நான் நடித்த ‘லில்லி’, ‘தீவண்டி’ படங்களுக்குப் பிறகு கிராமத்து வேடங்களுக்கு மட்டுமே நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்தார்கள். அதனால் அதுமாதிரியான கதைகளாகவே வந்தன. அதை உடைக்க விரும்பினேன். தனுஷின் ’வாத்தி’ படத்தில் ரொமான்ஸ் கேரக்டரில் நடிக்கிறேன். தேவைப்படும் போது அவரோடு நடனமாடும் ஆசிரியையாக நடிக்கிறேன். சாய் தரம் தேஜ் நடிக்கும் படத்தில் 20 வயது கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறேன். இதுபோன்று மாறி மாறி நடிக்க விரும்புகிறேன். ’பீம்லா நாயக்’ படத்தில் நடிக்க முடிவானபோது, அதில் நடிக்க வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். என் கேரக்டருக்கான நடிப்பு அதில் குறைவுதான் என்றதால், அப்படிச் சொன்னார்கள். இருந்தாலும் அந்தப் படம் என் நடிப்பை அடையாளப்படுத்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in