‘ஹேமா குழுவின் அறிக்கை வரட்டும்’ - மலையாள நடிகர்களுக்கு பார்வதி எச்சரிக்கை!

‘ஹேமா குழுவின் அறிக்கை வரட்டும்’ - மலையாள நடிகர்களுக்கு பார்வதி எச்சரிக்கை!

2017-ல் மலையாள நடிகர் திலீப்பின் ஆட்கள் பிரபல மலையாள நடிகையை நள்ளிரவில் காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மலையாளத் திரையுலகை உலுக்கியது. அதுதொடர்பான விசாரணை தற்போது வரை நடந்துவருகிறது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாலியல் குற்றங்களுக்கு எதிராக நடிகைகள் ரேவதி, பார்வதி திருவோத்து, ரம்யா நம்பீசன், இயக்குநர் அஞ்சலி மேனன் உள்ளிட்டோர் இணைந்து ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ எனும் அமைப்பைத் தொடங்கினர். மலையாளத் திரையுலகில் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் இக்குழு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்த அறிக்கை, 2019 டிசம்பரிலேயே கேரள அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது. எனினும், பொதுவெளியில் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. சமீபத்தில் கேரள சட்டப்பேரவையில் இது தொடர்பாக விளக்கமளித்த அரசு, திரையுலகில் பெண்கள் எதிர்கொண்ட தனிப்பட்ட பிரச்சினைகள் அடங்கிய அறிக்கை என்பதால், அதைப் பொதுவெளியில் வெளியிட முடியாது எனக் கூறியிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கையை வெளியிடுவதற்குப் பதிலாக, இதில் உள்ள பரிந்துரைகளை ஆராய இன்னொரு குழுவையும் கேரள அரசு நியமித்தது சர்ச்சையானது. அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்' அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில், சூரியா மேடை மற்றும் திரைப்படக் கழகம் நடத்திய விழாவில் கலந்துகொண்ட பார்வதி திருவோத்து, ஹேமா குழு அறிக்கை வெளியாவதில் தாமதம் நிலவுவதாகக் கண்டனம் தெரிவித்தார்.

“தேர்தல் காலத்துக்காகக் காத்திருப்போம். ஒருவேளை தேர்தல் நேரத்தில் திடீரென இந்த அறிக்கை வெளியிடப்படலாம். இது எனது ஊகம்தான். திடீரென மகளிர் நல அரசாக இது மாறலாம்” என்று பேசிய அவர், “இந்த அறிக்கை வெளியானால், நாம் வழிபடும் பல சிலைகள் (ஆளுமைகள்) உடைந்து சிதறலாம்” என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.