ஹாரிஸ் ஜெயராஜ்: தமிழ்த் திரையிசையின் தனி ராஜபாட்டை

ஹாரிஸ் ஜெயராஜ்: தமிழ்த் திரையிசையின் தனி ராஜபாட்டை

ஜனவரி 8: ஹாரிஸ் ஜெயராஜ் பிறந்தநாள்

தமிழ் சினிமாவில் புகழ்பெற்றிருக்கும் இசையமைப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. கறுப்பு-வெள்ளை காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், 1970-களின் பிற்பகுதியிலிருந்து இளையராஜா, 90-களிலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் என மூன்று இசை மேதைகள் தமிழ் சினிமா இசை ரசிகர்களை ஆக்கிரமித்திருந்தாலும், இவர்கள் மூவரைத் தவிர மற்ற இசையமைப்பாளர்களும் தமது இசையால் ரசிகர்கள் மனங்களில் ஆட்சி செலுத்திக்கொண்டுதான் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ரஹ்மானுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஜெயராஜ் திரைத் துறையில் அடியெடுத்து வைத்த காலத்தில் ரஹ்மான் பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு சர்வதேச திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியிருந்தார். தமிழிலும் அவருக்கான முக்கியத்துவம் துளியும் குறைந்திருக்கவில்லை. இளையராஜாவும் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தார். தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், வித்யாசாகர், பரத்வாஜ், மணி ஷர்மா, சிற்பி என பலர் தொடர்ந்து வெற்றிப் பாடல்களைக் கொடுத்துவந்தார்கள்.

'மின்னலே’ திரைப்படத்திலிருந்து...
'மின்னலே’ திரைப்படத்திலிருந்து...

கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா போன்ற இளையோரும் இசையுலகில் தம் முதல் பாதச் சுவடுகளை ஆழமாகப் பதித்துக்கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் தாண்டி ஹாரிஸ் ஜெயராஜ் தனக்கென்று ஒரு தனி ராஜபாட்டையை அமைத்துக்கொண்டார். எப்படி ‘ரோஜா’ படத்தின் காலத்தால் அழியாத பாடல்களால் ரஹ்மான் தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் வியந்து பார்க்க வைத்தாரோ அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் ‘மின்னலே’ படத்தின் பாடல்களின் மூலம் தமிழ்த் திரையிசை உலகில் ஒரு பிரம்மாண்ட வருகையை நிகழ்த்தினார்.

ஹாரிஸ், அதற்கு முன்பே ஒரு சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தாலும் வெளியான முதல் படம் ‘மின்னலே’. அந்தப் காதல் படத்துக்குத் தேவையான அனைத்து வகையான பாடல்களையும் அதகளமாகக் கொடுத்திருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். அதோடு மட்டுமல்லாமல் அந்தப் படத்தில் அங்கங்கே ஒலிக்கும் ’நெஞ்சைப் பூப்போல் கொய்தவளே’, ‘பூப்போல் பூப்போல் என் நெஞ்சைக் கொய்தவள்’ உள்ளிட்ட சிறு பாடல்களும் தீம் இசைத் துணுக்குகளும் பின்னணி இசையும்கூட பார்வையாளர்கள் அனைவரையும் காதல் ரசத்தில் ஆழ்த்தின. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் மிக வேகமாக பெரும் உயரங்களுக்கு முன்னேறிக்கொண்டிருந்தார்.

‘காக்க காக்க’ திரைப்படத்திலிருந்து...
‘காக்க காக்க’ திரைப்படத்திலிருந்து...

‘மஜ்னு’, ‘12பி’, ‘லேசா லேசா’ போன்ற காதல் படங்களுக்கு மட்டுமல்லாமல் ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற ஸ்டைலிஷான ஆக்‌ஷன் படங்களுக்கும் ‘சாமி’, ‘ஆதவன்’ போன்ற பரபரப்பான மிகைநாயக படங்களுக்கும், ‘அயன்’ போன்ற இடைநிலைக் கமர்ஷியல் மாஸ் மசாலா படங்களுக்கும் சிறப்பாக இசையமைத்து திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றார். இவற்றுக்கிடையே ‘கோவில்’ எனும் கிராமிய மணம் கமழும் படத்துக்கும் ‘வாரணம் ஆயிரம்’ போன்ற சற்றே அரிதான கதைக்களத்தைக் கொண்ட படங்களுக்கும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கினார்.

ஹாரிஸின் வெற்றிப் பாடல்களில் காலம் கடந்து ரசிகர்கள் மனங்களில் இடம்பிடிக்கும் பாடல்களின் எண்ணிக்கை அதிகம். அவருடைய உயர்தரமான மெலடிப் பாடல்களுக்கென்றே ஒரு தனிப் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. குறிப்பாக ‘வசீகரா’, ‘கலாபக் காதலா’ என பெண் குரலில் (பெரும்பாலும் பாம்பே ஜெயஸ்ரீ பாடியவை) ஒலிக்கும் மெலடிப் பாடல்கள்; திரையிசைப் பாடல்களில் இந்த வகைமையை புத்தாயிரத்தில் அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று அத்தகைய பாடல்களுக்கான ரசனையைச் செழுமைப்படுத்தி அவற்றுக்கான ரசிகர் கூட்டத்தைத் தக்கவைத்திருக்கும் பெருமை ஹாரிஸையே சாரும்.

பிரம்மாண்ட இயக்குநரும் தேசிய அளவில் புகழ்பெற்றவருமான ஷங்கர் ‘அந்நியன்’ படத்தின்போது முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டபோது ஹாரிஸ் ஜெயராஜுடன்தான் கைகோத்தார் என்பதிலிருந்து ரஹ்மானுக்கான சரியான மாற்றாக ஹாரிஸ் திகழ்ந்தார் என்பதையும் அதை வைத்து தமிழ்த் திரையுலகில் அவருடைய முக்கியத்துவத்தையும் உணர்ந்துகொள்ளலாம். அதையும் தாண்டி யோசித்தால் ரஹ்மானுக்கான மாற்று என்பதுடன் ஹாரிஸின் முக்கியத்துவம் முடிந்துவிடவில்லை. தமிழ்த் திரையிசையில் புதிய ஒலிகளைக் கொண்டுவந்தவர் ரஹ்மான் என்றால், சர்வதேசத் தரமும் ஒலித் துல்லியமும் வாய்ந்த இசைக் கருவிகளைக் கொண்டு ஆர்க்கெஸ்ட்ரேஷனின் தரத்தை முன்னெப்போதும் இல்லாத தரத்துக்கு உயர்த்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஒரு இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜின் பயணம் இருபது ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘மின்னலே’, ‘மஜ்னு’, ‘12பி’, ‘காக்க காக்க’, ‘உள்ளம் கேட்குமே’, ‘அந்நியன்’, ‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’, ’அனேகன்’ எனப் பல படங்களின் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றவை என்பதோடு எப்போதும் ரசிகர்களின் பிளேலிஸ்ட்டில் நீங்கா இடம்பிடித்தவை. பிற படங்களிலும் ஒரு சில பாடல்களாவது அத்தகையஅந்தஸ்தைப் பெற்றிருப்பவை.

அவர் பணியாற்றும் திரைப்படங்களின் எண்ணிக்கையை அவராகவே குறைத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. திரையுலகிலோ ரசிகர்கள் மத்தியிலோ அவருக்கான மரியாதையும் முக்கியத்துவமும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. இப்போதும் அவரிடமிருந்து வரப்போகும் அடுத்த மெலடிக்கு வாழ்வு முழுவதும் மனமுருகவும் அடுத்த தீம் இசையைக் கேட்டு ஊக்கம் பெறவும் வேகநடைப் பாடலுக்கு உற்சாகமாக ஆட்டம்போடவும் ஒரு பெரும் இசை ரசிகர் பட்டாளம் காத்திருக்கிறது. ஏனென்றால் ஹாரிஸ் ஜெயராஜ் என்றைக்குமே தரமான இசையைத் தருவார் என்னும் நம்பிக்கை ரசிகர்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இசையுலகில் இன்னும் பல சாதனைகளைச் செய்து ரசிகர்களை மகிழ்விக்க ஹாரிஸ் ஜெயராஜை வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.