'இது காதல் கல்யாணம் அல்ல!' - நடிகர் ஹரீஷ் கல்யாண் சிறப்புப் பேட்டி

'இது காதல் கல்யாணம் அல்ல!' - நடிகர் ஹரீஷ் கல்யாண் சிறப்புப் பேட்டி

தமிழ்த் திரையுலகின் இளம் கதாநாயகனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண், சில நாட்களுக்கு முன்பு தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். நாளை அவரது திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து, திருமணம் குறித்து பேசினார். பின்னர் திருமணத்துக்குப் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். திருமண வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு ‘காமதேனு’ இணையதளத்துக்காக அவரிடம் பேசினோம். அவரது பேட்டி:

திடீரென கல்யாண அறிவிப்பு சொல்லி இருக்கிறீர்களே?

எனக்கு தற்போது திருமணத்திற்கான வயதுதான். பலரும் நான் திருமணம் எனச் சொன்னதும் காதல் திருமணமா என்று விசாரித்தார்கள். நிச்சயம் இல்லை! இது  இருதரப்பிலும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். நாளை திருவேற்காட்டில் திருமணம் வைத்திருக்கிறோம். ரிசப்ஷன் தனியாக நடக்கிறது. 

உங்கள் மனைவி பற்றி சொல்லுங்கள்?

அவர் பெயர் நர்மதா. ஸ்டார்ட்-அப் நிறுவனம் நடத்திக் கொண்டிருக்கிறார். என்னுடைய தொழில் பற்றி அவருக்கு நல்ல புரிதல் இருக்கிறது. என்னுடைய எல்லாப் படங்களையும் அவர் பார்த்திருக்கிறார். நான் நடித்த 'ஓ மணப் பெண்ணே' படம் அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்!

என்ன கிஃப்ட் கொடுத்தீர்கள்?

திருமணம் நிச்சயம் ஆனது ஜூன் 29-ம் தேதி. அன்றுதான் என்னுடைய பிறந்தநாள். அடுத்தநாள் அவருடைய பிறந்தநாள். எனவே, அவருக்குப் பிடித்த விஷயங்கள் எல்லாம் சேர்த்து பரிசு கொடுத்தேன்.

புதுமாப்பிள்ளை பதற்றம் இருக்கிறதா?

நிச்சயமாக! நாளை திருமணம் நடக்க இருக்கும் நிலையில் இன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிற்காக வந்திருக்கிறேன். கடந்த ஒரு வாரமாக உங்கள் எல்லோரையும் சந்திக்க நினைத்து இப்போதுதான் அதற்கான நேரம் வந்திருக்கிறது. அடுத்து வட சென்னையை மையப்படுத்தி படம், இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்' மற்றும் இன்னும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் இந்த தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணத்திற்குக் கூட தாடியை ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்திருக்கிறேன். தாடி ட்ரிம் செய்ய இப்போது என் மனைவியின் அனுமதியைவிட இயக்குநர் அனுமதிதான் முக்கியம்.

திருமணம் முடித்ததும் பத்து நாட்கள் கழித்து அடுத்து படப்பிடிப்பில் பிஸியாகி விடுவேன். ஹனிமூன் கூட இன்னும் திட்டமிடவில்லை. 

கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் படத்தில் நீங்கள் கதாநாயகன் எனும் செய்தி வெளியாகியிருக்கிறதே?

அது பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. நீங்கள் சொல்லக் கூடிய செய்தி உறுதியானால் நிச்சயம் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிப்பார்கள். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in