நடிகர் யோகி பாபு நடித்த படத்தின் ஹார்டிஸ்க் திருட்டு: தலைப்பை மாற்றி மோசடி என போலீஸில் பரபரப்பு புகார்

நடிகர் யோகி பாபு நடித்த படத்தின் ஹார்டிஸ்க் திருட்டு:  தலைப்பை மாற்றி மோசடி என போலீஸில் பரபரப்பு புகார்

யோகிபாபு நடித்த திரைப்படத்தின் ஹார்டிஸ்கை திருடி, படத்தின் பெயரை மாற்றி தணிக்கைச் சான்றிதழ் பெற்று மோசடியில் ஈடுபட்ட தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு உதவிய சங்க நிர்வாகிகள் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் துரைராஜன். இவர் ஆர்.ஆர் சினி புரொடக்‌ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இணை தயாரிப்பாளர் விஜய் போஸ் கூறுகையில், "ஆர்.ஆர் சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு 5 கோடி ரூபாய் செலவில் நடிகர் நிதின் சத்யா மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் 'மணி' என்ற திரைப்படத்தைத் தயாரித்தோம். அப்போது எங்கள் படத்தயாரிப்பு நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா பட தயாரிப்பாளர் கின்னஸ் கிஷோர் குமார் என்பவர் தயாரிப்பு நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்தார்.

இதனால் அவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தோம். இவ்வழக்கு தொடர்பான விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணை இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கிஷோர் குமார், குண்டர்கள் சிலருடன் எங்கள் பட நிறுவன அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்து பொருட்களை அடித்து நொறுக்கியதுடன் 'மணி' திரைப்படத்தின் மொத்தக்காட்சி அடங்கிய ஹார்டிஸ்கை திருடிச் சென்றதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது" என்றார்.

மேலும் அவர் கூறுகையில்," இதனைத் தொடர்ந்து கிஷோர் குமார் உயர்நீதிமன்றத்தில் அன்னை தெரசா பட பேனரில் 'மணி' என்ற படத்தை தான் தயாரித்ததாக பொய் வழக்கு தொடந்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடைசி கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் கிஷோர் குமார் திருடிய ‘மணி’ படத்தின் ஹார்டிஸ்கை பயன்படுத்தி, எனி டைம் மணி பிலிம்ஸ் என்ற பேனரில் ‘மணி’ தலைப்பை ‘தாதா’ என்று பெயர் மாற்றம் செய்து சென்சார் போர்டில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து படத்தில் நடித்த காமெடி நடிகர் யோகி பாபுவும் கண்டனம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சென்சார் போர்டில் பதிவு செய்த படத்தை பெயர் மாற்றி வெளியிட அனுமதித்த சென்சார் போர்டு மற்றும் இதற்கு உதவிய தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘தாதா’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து ‘மணி’ திரைப்படத்தின் ஹார்டுடிஸ்கைப் பெற்று தந்து கிஷோர் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in