'அடுத்த தலைமுறையையும் மகிழ்வித்ததில் மகிழ்ச்சி'- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

'அடுத்த தலைமுறையையும் மகிழ்வித்ததில் மகிழ்ச்சி'- கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

'விக்ரம்' திரைப்படத்தால் அடுத்த தலைமுறையையும் மகிழ்வித்து இருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியாக ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூலை உலக அளவில் பெற்று சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

நான்கு வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனின் படம் வெளியாகி இப்படி ஒரு சாதனையை பெற்றிருப்பது கமல்ஹாசனையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இந்த படத்தை கமலின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' தான் தயாரித்தது. அதனால், நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இந்த படம் கமல்ஹாசனுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்துள்ளது. இயக்குநர், உதவி இயக்குநர்கள், படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யா என பலருக்கும் பரிசு கொடுத்து அன்பையும் பகிர்ந்திருந்தார் கமல்.

திரையரங்குகளுக்கு பிறகு இந்த மாதம் 8ம் தேதி ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் வெளியாக இருக்கிறது.

குழந்தைகள், இளைஞர்கள், குடும்ப ரசிகர்கள் என பல தரப்பினருக்கும் இந்த படம் பிடித்திருக்கிறது என்ற விமர்சனங்களையே பெரும்பாலும் பார்க்க முடிந்தது. அந்த வகையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குழந்தை ஒன்று அவரை கொஞ்சுவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, 'அந்த குழந்தை என்னை 'விக்ரம்' என அழைத்தது. எனக்கு அடுத்த தலைமுறையையும் நான் படங்களின் மூலம் மகிழ்வித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு சந்தோஷம்' என அந்த புகைப்படத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார் கமல்ஹாசன்.

'விக்ரம்' படத்தை அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் இணைகிறார் கமல்ஹாசன். இவர் ஏற்கனவே கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்' படத்தின் திரைக்கதையில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கடுத்து, 'விக்ரம்3', இரஞ்சித்துடன் ஒரு படம் என அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் படங்களை கைவசம் வைத்துள்ளார் கமல்ஹாசன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in