‘புதுசா ஒரு வெட்கம் முளைக்குது..’

ஹன்சிகாவின் திருமண ‘தம்.. தம்’
‘புதுசா ஒரு வெட்கம் முளைக்குது..’

விடிந்தால் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஹன்சிகா மோத்வானி அதற்கான கொண்டாட்டங்களில் மகிழ்ந்திருப்பதோடு, அந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்.

தமிழ் உள்ளிட்ட அனைத்து தென்னக மொழிகளிலும் பாலிவுட்டிலும் கொடி பறக்கவிட்டவர் ஹன்சிகா மோத்வானி. பூசின வாகிலிருக்கும் நடிகையருக்கு கோயில் கட்டத் தயங்காத கோல்வுட் ரசிகர்கள், குஷ்பூவுக்கு பின்னர் ஹன்சிகாவை கொண்டாடினார்கள்.

குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பிரவேசத்தை தொடங்கிய ஹன்சிகா, ’ஷக்கலக்கா பூம் பூம்’ தொலைக்காட்சி தொடர் வாயிலாக சகல வயது ரசிகர்கள் நெஞ்சிலும் சம்மணமிட்டு அமர்ந்தார். ’கோய் மில் கயா’ படம் வாயிலாக பாலிவுட் பிரவேசமும் செய்தார். குமரியானதும் அல்லு அர்ஜூன் ஜோடியாக தென்னகம் வந்தார். தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளையில் அறிமுகமானதும், இளம் ஹீரோக்களுடன் பரவலாய் வலம் வந்தார். அவற்றில் ’எங்கேயும் காதல்’ மற்றும் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களுக்காக இன்றைக்கும் இளம் ரசிகர்களை இம்சித்து வருகிறார். பேய் பட வரிசையான ’அரண்மனை’யில் கூட ஹன்சிகாவை ரசித்தவர்கள், அவர் ஆள் இளைத்ததும் நொந்தார்கள்.

ரசிகர்கள் மத்தியில் அவரா இவரா என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஹன்சிகா எதிர்கால கணவர் குறித்த ஊகங்கள் அண்மையில் உறுதியானது. ஈபிள் டவர் முன்பாக முன்மொழியப்பட்ட காதலை, ஜெய்ப்பூர் அரண்மனை கோட்டையில் நாளை மணமக்கள் வழிமொழிய இருக்கிறார்கள். தோழியின் கணவராக அறிமுகமான சோஹைல் கதூரியா என்ற மும்பை தொழிலதிபர், அந்த உறவிலிருந்து விடுபட்டு தற்போது ஹன்சிகாவை கரம் பிடிக்க இருக்கிறார்.

திருமணத்துக்கு 4 நாள் முன்பிருந்தே ஆட்டம் பாட்டம் என, உறவினர் நண்பர்கள் புடைசூழ ஹன்சிகா - கதூரியா ஜோடி கொண்டாடி வருகிறது. அதற்கான வெட்கப் பூரிப்பில் இன்னொரு சுற்று பூசியிருக்கும் ஹன்சிகா, கொண்டாட்ட நிகழ்வுகளை ரசிகர்கள் காண ஏதுவாக உடனுக்குடன் இன்ஸ்டாவில் அப்டேட் செய்து வருகிறார். அப்படி மாப்பிள்ளையும் பெண்ணுமாக சேர்ந்து வாயசைக்கும் பாடல்கள் தற்போது ஹன்சிகாவின் இன்ஸ்டாவில் நிறைந்திருக்கின்றன.

அதிலும், வட இந்திய மணவிழாவில் ’புதுசா ஒரு வெட்கம் முளைக்குது..’ என்ற தமிழ் பாடலுக்கு ஹன்சிகா போடும் சந்தோஷ ஆட்டத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த பாடல் உட்பட அவரது இன்ஸ்டா பகிர்வுகளில் பெரும்பாலும் தமிழ் திரையிசையே ஒலிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in