இதற்கு மேல் குழந்தைகளை என் பொறுப்பில் எடுத்துக்கொள்வது இயலாத காரியம்!

‘பார்ட்னர்’ ஹனிசிகா பளிச் பேட்டி
ஹன்சிகா
ஹன்சிகா

நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியைப் பெரும் நட்சத்திரக் கொண்டாட்டமாக நெட் ஃப்ளிக்ஸ் ஒளிப்பதிவு செய்து கன்டென்ட் ஆக்கியதைப் போல, ஹன்சிகாவின் திருமணத்தை டிஸ்னி ஹாட் ஸ்டார் உள்ளடக்கமாக்கியது. அந்த அளவுக்கு ஹன்சிகா ஒரு நட்சத்திரமா என்கிற சந்தேகம் வரலாம். ஆனால், குழந்தை நட்சத்திரமாக இந்தி சினிமாவில் காலூன்றிய ஹன்சிகா, கதாநாயகியாக தெலுங்கு, தமிழ், கன்னம், மலையாளம் சினிமாக்களில் இன்னமும் மார்க்கெட் குறையாத நட்சத்திரமாக வலம் வருகிறார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது நீண்ட கால நண்பர் சோகையில் கத்தூரியாவைத் திருமணம் செய்தபோது, அவர் ஏற்கெனவே மணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதை அவர் மறைத்துவிட்டார் என சர்ச்சை எழுந்தது. அதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாத ஹன்சிகா, திருமணத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்கள், இணைய தொடர்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘பார்ட்னர்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தபோது காமதேனுவுக்காக அவரிடம் பேசினோம். அதிலிருந்து...

திருமணத்துக்குப் பிறகு 3 மாத காலமாவது விடுப்பு எடுத்துக்கொள்வது கதாநாயகிகளின் வழக்கம்... நீங்கள் எப்படி?

எதற்கு விடுப்பு? திருமணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக படப்பிடிப்பில் இருந்தேன். திருமணம் முடிந்த ஐந்தாவது நாள் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டேன். என்ன நடந்தாலும் செட்டுக்கு வந்து ‘ஷாட் ரெடி’ என்கிற சத்தத்தைக் கேட்பதுதான் எனக்குப் பிடிக்கும். பத்து வயதிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாதான் எனது முதல் கணவர்.

உங்கள் கணவர், நண்பராக இருந்த கால கட்டத்தில் எப்போது முதல் முறையாக அவரிடம் ‘ஐ லவ் யூ’ சொன்னீர்கள்... ஆள் எப்படி?

முதல் ஐ லவ் யூ என்னுடைய ‘மோஸ்ட் பர்செனல்’. ஆனால், நாங்கள் காதலர்கள் ஆனபிறகு அவருடன் எத்தனை முறை போனில் பேசினாலும், சில வார்த்தைகள் பேசினாலும் பேசி முடித்தவுடன் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டுத்தான் போனை வைப்பேன். அவரும் ‘லவ் யூ டூ’ சொல்வார். நான் சில சமயம், ‘ஐ லவ் யூ’ சொல்லாமல் வைத்துவிட்டால், அதை நான் சொல்ல வேண்டும் என்று எனக்கு போன் செய்துகொண்டே இருப்பார்.

அவரை சில மணி நேரம் டீலில் விட்டு மனதுக்குள்ளேயே ரசிப்பேன். திருமணத்துக்குப் பிறகும் இந்த ‘லவ் பிளே’ தொடர்கிறது. சொகையில் நான் எப்படியெல்லாம் எதிர்பார்த்தேனோ... அப்படியே அமைந்துவிட்டார். அவர் எனக்கு மட்டுமல்ல... எனது சகோதரனுக்கும் நல்ல நண்பர். அவரது அமைதி, புரிந்துகொள்ளும் தன்மை அனைத்தும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

13 வருடங்களாக தமிழில் நடிக்கிறீர்கள்... ஆனால், இன்னும் உங்களுக்குத் தமிழ் சரியாகப் பேச வரவில்லையே?

யார் சொன்னது? நான் நன்றாக தமிழ் பேசுவேன். ஆனால், எனது உச்சரிப்பைக் கேட்டுப் படப்பிடிப்பில் பலரும் சிரிக்கிறார்கள். அதனால் நான் தமிழில் பேசுவதில்லை. ஆனால், படப்பிடிப்பில் சொல்லிக்கொடுக்கும் வசனத்தைக் கேட்டுக்கொண்டு சரியாகப் பேசுவேன். ப்ராம்டிங்கும் செய்வார்கள். ஆனால், ‘லிப் சிங்’ சரியில்லை என்று இதுவரை ரசிகர்களோ, விமர்சகர்களோ, இயக்குநர்களோ சொன்னதில்லை.

‘பார்ட்னர்’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறீர்கள். கதையைக் கேட்டதும் என்ன தோன்றியது?

நகைச்சுவைக் காட்சிகளில் நான் நிறைய நடித்திருக்கிறேன் என்றாலும் இப்படி முழு நீள நகைச்சுவை கேரக்டரில் நடித்ததில்லை. கதையைக் கேட்டதுமே எனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. யோகி பாபுவின் பாடி லாங்குவேஜ் எல்லாம் செய்ய வேண்டுமா என்று திடீரென தயக்கம் வந்தது.

ஆனால், இயக்குநர், “ஆண் பெண்ணாக மாறிய பிறகு ஆணின் உடல்மொழி தேவையில்லை. ஆனால், ஒரு டாம் பாய் போல் நாட்டி வேலைகள் அனைத்தும் செய்ய வேண்டும்” என்று சொல்லிவிட்டார். நாட்டி வேலைகள் செய்வதென்றால் எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்பவே பிடிக்கும். அதன்பிறகு படப்பிடிப்பில் எனக்கே வேற லெவல் உற்சாகம் வந்துவிட்டது.

திருமணத்துக்குப் பிறகு வரும் வெற்றிப் படமாக ‘பார்ட்னர்’ அமையும் என்று எதிர்பார்க்கிறேன். படப்பிடிப்பு முழுவதும் ஆதியின் ஒத்துழைப்பை மறக்க முடியாது. அவர் இனிமையான கதாநாயகன். என்னைப்போல் காதல் திருமணம் செய்துகொண்டவர்.

இந்தப் படத்தில் மது அருந்தும் காட்சியில் சிறப்பாக நடித்தீர்கள் என்று ட்ரைலர் வெளியீட்டில் படத்தின் இயக்குநர் பேசினாரே..?

அவர் என்னைக் கிண்டல் அடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் இதுவரை ஒரு சொட்டு மது கூட அருந்தியதில்லை. அதனால், போதை எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், படத்தில் ஆதியின் நண்பனாக அறையில் மது அருந்தும் காட்சிகளில் என் நடிப்பு இயல்பாக இல்லை என்றார் இயக்குநர். ரீடேக் வாங்கிக்கொண்டே இருந்தேன். போதை ஏறியது போல் நடிப்பது கொஞ்சம் சிரமம்தான். இருந்தாலும் சமாளித்திருக்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

குழந்தைகள் காப்பகம் நடத்தும் உங்கள் சமூக சேவை எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது?

திருத்திக் கொள்ளுங்கள் நான் குழந்தைகள் காப்பகம் எதுவும் நடத்தவில்லை. 5 வயது முதல் 21 வயது வரையுள்ள 31 சிறார்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, அவர்களின் பாதுகாப்பு, எதிர்காலம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு, மும்பையில் கல்விக்கான செலவு பல மடங்கு அதிகரித்து விட்டதால், இதற்கு மேல் குழந்தைகளை என் பொறுப்பில் எடுத்துக்கொள்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்துவிட்டேன். தற்போது இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த ஒரு தங்குமிடம் அமைக்க, இடம் வாங்கியிருக்கிறேன். அதில் கட்டிடம் கட்டுவதுதான் அடுத்த இலக்கு.

தற்போது எதிர்பார்ப்புடன் நடித்துவரும் படம்..?

ஹாட் ஸ்டார் வெப் சீரீஸில் நடித்து வருகிறேன். ‘மேன்’, ‘கார்டியன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கில் 2 படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். தற்போது நடித்துவரும் ‘காந்தாரி’ படம் மிரட்டலாக இருக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரத்துக்கு மேக் அப் போடவே 5 மணி நேரம் ஆகிறது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மிச்சம். இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு ஹன்சிகாவைப் பார்ப்பீர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in