
`எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையரங்குகளில் திரையிடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் திரையரங்க உரிமையாளர்களிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது காடுவெட்டி குருவின் மகனும் படத்தை திரையிடக்கூடாது என எச்சரித்துள்ளார்.
மறைந்த காடுவெட்டி குருவின் மகனும் மாவீரன் மஞ்சள் படை தலைவருமான ஜெ குரு கணலரசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெய் பீம் படத்தில் வன்னிய சமுதாயத்திற்கும் இருளருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக காட்சிகள் காண்பிக்கப்பட்டன. ஆகவே நடிகர் சூர்யா வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் அவர் நடித்து வெளியாகும் எந்த படமும் திரையிடக் கூடாது.
தற்போது வெளியாக உள்ள `எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தை திரையரங்கு உரிமையாளர்கள் தமிழ்நாடு முழுவதிலும் வெளியிடக்கூடாது என்று மாவீரன் மஞ்சள் படை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மீறினால் அதன்பிறகு நடக்கின்ற செயல்களுக்கு நாங்கள் பொறுப்பில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.