ஆசிய விருது வென்ற குரு சோமசுந்தரம்: ‘மின்னல் முரளி’ தந்த அங்கீகாரம்!

ஆசிய விருது வென்ற குரு சோமசுந்தரம்: ‘மின்னல் முரளி’ தந்த அங்கீகாரம்!

'மின்னல் முரளி’ மலையாளப் படத்தில், எதிர் நாயகன் பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக, புகழ்பெற்ற ‘ஆசிய அகாடமி கிரியேட்டிவ்’ விருதை வென்றிருக்கிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.

பஸில் ஜோசப் இயக்கத்தில் கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ திரைப்படத்தில், ஷிபு எனும் பாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். ஊர் மக்களால் புறக்கணிக்கப்படும் சாமானியராக, நாயகன் மின்னல் முரளிக்குச் சவால் விடும் சூப்பர் வில்லனாக அவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தில் நடித்ததற்காக சைமா விருது, மழவில் என்டர்டெயின்மென்ட் விருது போன்ற விருதுகள் அவருக்குக் கிடைத்தன.

இந்நிலையில், சிங்கப்பூரில் நடந்த ஊடக விழாவில், சிறந்த நடிகருக்கான ஆசிய அகாடமி கிரியேட்டிவ் விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் குரு சோமசுந்தரத்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சினிமா மற்றும் சின்னத்திரையில் சிறப்பாகப் பங்களிக்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுகள், ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் 16 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் படைப்புகளுக்கும் வழங்கப்படுகின்றன.

’மின்னல் முரளி’ திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை வென்றிருக்கிறது.

அது மட்டுமல்ல, நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் இந்த முறை பல்வேறு பிரிவுகளில் விருதுகளைக் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in