
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.
பல்வேறு துறைகளில் சிறப்பான திறன் கொண்டவர்களுக்கு நீண்ட கால குடியுரிமை வழங்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் அந்நாட்டு பிரஜை போல வாழ்வதுடன், அங்கேயே தங்கி படிக்கலாம். அங்கேயே பணியும் புரியலாம். அத்துடன் வியாபாரங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் இந்த கோல்டன் விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது. துபாய் சென்ற நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கோல்டன் விசா வழங்கப்பட்டது. நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், சஞ்சய் தத், ஷாருக்கான், மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், சுராஜ் வெஞ்சரமூடு, இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் ஊர்வசி ரவுத்தலா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், காஜல் அகர்வால், பிரணிதா, த்ரிஷா, மீனா, ஆண்ட்ரியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.