`140 மக்களுக்கு இதை கொடுத்தால் 365 நாளும் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள்'- வைரமுத்து அதிரடி

`140 மக்களுக்கு இதை கொடுத்தால் 365 நாளும் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவார்கள்'- வைரமுத்து அதிரடி

"140 கோடி மக்களின் பொருளாதாரம், கல்வி, சமூக அக்கறை ஆகியவற்றை இந்த நாடு வளர்த்துக் கொடுத்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனும் 365 நாளும் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவான்" என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

சென்னை கே.கே.நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டிஸ்கவரி புக் பேலஸ் மையத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, "டிஸ்கவரி புக் பேலஸ் என்ற ஒரு பரந்த வெளியில் இயங்குகின்ற ஒரு புத்தக மையத்தை தகைசால் தமிழர் நல்லக்கண்ணுவுடன் இணைந்து திறந்து வைத்திருக்கிறோம். புத்தக விற்பனை மையங்கள் என்பவை ஒரு மாநிலத்தின் தலை நகரத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் திகழ வேண்டும் என்பது தான் எங்கள் எண்ணம்.

இந்த நாட்டில் போதைப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று தமிழக அரசு கவலைப்படுகிறது. நாம் புதிய போதையை உருவாக்கினால் தவிர அந்தப் பழைய போதையை அழிக்க முடியும். அந்த புதிய போதை வாசித்தல், கற்றல், படித்தல். இந்த புதிய போதையை இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கல்வி கற்ற சமுதாயமும் கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான் ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழக்கூடும். வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று யாரும் கவலைப்பட வேண்டாம், குறைந்துவிட்டது என்று புலம்ப வேண்டாம், வாசிக்கும் பழக்கம் வேறு வேறு வடிவங்களில் மிகுதியாகி கொண்டிருக்கிறது.

அண்மையில் பத்திரிகையில் ஒன்றில் படித்தேன். உலக நாடுகள் வாரத்தில் எத்தனை மணி நேரம் வாசிப்புவிற்கு நேரத்தை செலவழிகின்றன என்ற புள்ளி விவரம் அது. அதில் ஜப்பான் வாரத்திற்கு 4.16 நிமிடங்கள் மட்டும் தான் வாசிக்க செலவழிக்கிறது என்றும் இங்கிலாந்து 5.18 மணி நேரம் வாசிக்க செலவிழிப்பதாகவும், அமெரிக்கா 5.48 மணி நேரம் செலவடுகிறது என்றும் இந்தியா வாரத்தில் வாசிப்புக்கு 10.4 மணி நேரம் செலவிட்டு உலகத்தில் வாசிப்பில் முன்னணியில் இந்தியா இருக்கிறது. இதை நாம் வளர்க்க வேண்டும்" என்றார்.

இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த வைரமுத்து, "இல்லம்தோறும் தேசியக்கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான். தேசியக்கொடியை சுதந்திர திருநாள் அன்று மட்டும் ஏற்றுவது சிறந்தது என்று கருதி விட முடியாது. ஆகஸ்ட் 15, ஜனவரி 26, மட்டும் தேசியக்கொடிக்கு நாம் வணக்கம் தெரிவித்து விட்டால் தேசத்தின் சிறந்த குடிமகனாகி விடமாட்டோம், 365 நாளும் நாம் தேசத்தின் குடிமகன் என்ற அக்கறையை மக்கள் மனதில் எழுப்புவது தான் இந்த தேசத்தின் முதற்கண் கடமையாக இருக்க கூடும்.

தேசியக்கொடியை இல்லம் தோறும் ஏற்றுவது என்பது மக்களின் பொருளாதாரத்தில் சம்பந்தப்பட்டதாக உள்ளது. மக்களின் கல்வியில் சம்பந்தப்பட்டதாக உள்ளது. மக்களின் தேசிய அக்கறையில் சம்பந்தப்பட்டதாக உள்ளது. 140 கோடி மக்களின் பொருளாதாரத்தையும், கல்வியையும் சமூக அக்கறையையும் இந்த நாடு வளர்த்துக் கொடுத்தால் கேட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லாமலே ஒவ்வொரு இந்திய குடிமகனும் 365 நாளும் தங்கள் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றுவான்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in