
மும்பை புறநகர் ரயில் ஒன்றில் இளம்பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களின் முக்கிய போக்குவரத்து ஆதாரமாக உள்ளூர் புறநகர் ரயில்கள் இருந்து வருகின்றன. மெட்ரோ அளவிற்கு வசதிகள் இல்லாவிட்டாலும் கூட, நகரின் வாகன நெரிசலுக்கு இவைதான் மிகப்பெரிய தீர்வாக இருப்பதாலும், விரைவாக முக்கிய இடங்களுக்கு செல்லலாம் என்பதாலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் ரயில்கள், அடிக்கடி சினிமாக்களிலும், குறும்படங்களிலும் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது ரீல்ஸ் காலம் என்பதால் இளைஞர்களிடையே பயணத்தின் போது வீடியோக்கள் எடுப்பதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் மும்பை புறநகர் ரயிலில் பெண் ஒருவர் பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆலியாமிர்ஜா என்ற பெயரில் அந்தப்பெண் பதிவிட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருவதோடு, ரயில்வேத்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தையும் டேக் செய்து வருகின்றனர். பலரும் அந்த பெண்ணின் நடனமாடும் நளினத்தைப் பாராட்டி வரும் அதே வேளையில், ரயில்களில் இது போன்ற வீடியோக்கள் எடுப்பதால் சக பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும், பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் அனுமதி பெறாமல் வீடியோக்களையும், புகைப்படங்களையும் எடுக்க ரயில்வே நிர்வாகம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.