ஜெமினி கணேசன்: நெஞ்சம் தொட்ட வஞ்சிக்கோட்டை வாலிபன்!

102-வது பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
ஜெமினி கணேசன்: நெஞ்சம் தொட்ட வஞ்சிக்கோட்டை வாலிபன்!

தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு நடிப்பவர்கள் உண்டு. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அந்தக் கேரக்டராக மாறிவிடுகிற வல்லமை பெற்ற நடிகர்களும் இருக்கிறார்கள். கதைக்குத் தகுந்தபடி, நம்மைப் போல் இருக்கிற இயல்பான மனிதர்களைக் காட்சிப்படுத்துகிற, நடிப்பது தெரியாமல், இயல்பாக, பாந்தமாக நடிக்கிற நடிகர்களும் சாதித்திருக்கிறார்கள். ஜெமினி கணேசன், அப்படிப்பட்ட அசகாய நடிகர்.

நடிப்பு என்பதே மிகைப்படுத்துதல்தான் என்று சொன்ன காலம் அது. மேலும் நாடகங்களில் இருந்து திரைக்கு வந்தவர்களே அப்போது அதிகம். எனவே, நாடகத்தில் கடைசி பெஞ்ச் ரசிகருக்கும் தெரிவது போலவும் பேசுவது போலவும் நடித்தார்கள். ‘நாதா... தேவி’ என்றிருந்த காலங்களைக் கடந்து, இளங்கோவன், கலைஞர் கருணாநிதி வசனங்களெல்லாம் வந்து சினிமாவைப் புதுப்பாதைக்கு அழைத்துச் சென்றபோது, ராஜாக்கள் படம் பெருமளவில் எடுக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்படங்களின் பக்கம் வந்தார்கள். அப்படி சமூகப் படங்கள் வந்தபோது, எம்ஜிஆரும் சிவாஜியும் அதற்கும் பொருந்திப்போனார்கள். கூடவே, அச்சு அசலாக, நம் தெருவில் உலவுகிற, நம்மைப் போல உடல்மொழி கொண்ட நடிகராக ஜெமினி கணேசனை ரசிகர்கள் பார்த்தார்கள். குறிப்பாக, அன்றைக்கு இயல்பான கதைகளை, இன்னும் மக்களுக்கு நெருக்கமாகச் சொன்ன இயக்குநர்கள் அனைவரும் ஜெமினி கணேசனை வாரியணைத்து கதைகளுக்குள் பொருத்திக்கொண்டார்கள்.

புதுக்கோட்டைதான் பூர்விகம். அப்பாவின் வளர்ப்பிலும் சிறுவயதிலேயே அப்பா இறந்துவிட சித்தப்பாவின் பராமரிப்பிலும் வளர்ந்து, படிப்பில் கெட்டி என்று பேரெடுத்தார் கணேசன். ஜெமினி ஸ்டூடியோவில், நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து, ‘இவர் ஓ.கே., இவர் வேண்டாம்’ என்று தேர்வு செய்பவராகப் பணியாற்றினார். இப்படி எத்தனையோ பேரை நடிப்பதற்குத் தேர்வு செய்த கணேசனை, காலம் நடிகனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

27-வது வயதில், ‘மிஸ் மாலினி’ என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். படத்தில் சிறிய வேடம்தான். அடுத்து கிடைத்த வாய்ப்புகளும் வில்லன் வேஷம்தான். கொடூரமான வில்லனாக நமக்குள் கிலி ஏற்படுத்திய ஆர்.எஸ்.மனோகர் நாயகனாக நடித்த படத்தில், அட்டகாசமான வில்லன் ரோல் செய்தார் கணேசன். அப்போதெல்லாம் ஆர்.கணேசன் என்றுதான் திரையில் இவர் பெயரை போட்டுக்கொண்டிருந்தார்கள். 1952-ம் ஆண்டு, ’பராசக்தி’ படத்தின் மூலம் வி.சி.கணேசன் என்கிற சிவாஜி கணேசன் வந்தாரல்லவா. இப்போது பெயர்க் குழப்பம் ஏகத்துக்கும் உருவானது. அப்போது இந்த கணேசன் சிவாஜி கணேசன் ஆனார். அந்த கணேசன், ஜெமினி கணேசன் என்று அழைக்கப்பட்டார். இருவருக்கும் இந்தப் பெயர் இன்றுவரைக்கும் நிலைத்து நிமிர்ந்து கம்பீரம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

1953-ம் ஆண்டு, ‘பெண்’ என்ற படத்தில் நாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார். அதற்கு அடுத்த வருடம் ‘மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் கவனம் ஈர்த்தன. ’மனம் போல் மாங்கல்யம்’ படத்தில் இரட்டை வேடம் செய்தார். வில்லன் கேரக்டர் பண்ணும்போதே, இவர் செய்த வில்லத்தனங்களையெல்லாம் மறந்து, இவரின் அழகையே பேசிக்கொண்டிருந்தது தமிழ் ரசிகர் கூட்டம். கொஞ்சம் கொஞ்சமாக, அன்றைக்கு இருந்த பெரிய இயக்குநர்களெல்லாம் ஜெமினி கணேசனைத் தேர்ந்தெடுத்தார்கள்.

கறார் பண்ணமாட்டார். காசு அதிகம் கேட்கமாட்டார். கால்ஷீட் சொதப்பமாட்டார். சிவாஜிக்கோ அல்லது வேறொரு ஹீரோவுக்கே முக்கியத்துவம் என்றாலும் சண்டைபோடமாட்டார். படமே நாயகி சப்ஜெக்ட்தான். நாயகன் என்பது அடுத்தகட்டம்தான் என்றாலும் காட்சிகளைத் திருத்துங்கள், மாற்றுங்கள், கூடுதலாக்குங்கள் என்றெல்லாம் வம்படி செய்யமாட்டார். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், ஜெமினி கணேசன் அங்கே பார்ப்பது... ‘நாம் இந்தக் கதைக்கு ஓரளவேனும் பயன்படுகிறோமா இல்லையா’ என்பதைத்தான்!

சிவாஜியும் ஜெமினியும் இணைந்து நடித்த படங்களைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவிஷயம் கவனிப்பேன். இருவரும் நடிப்பது போலவே இருக்காது. நல்ல நண்பர்கள், ஒரு மேடையில், நமக்கு எதிரில் இருந்தால் எப்படி இருக்குமோ... அப்படித்தான் இருக்கும். நடிகைகளைத்தான் நல்ல ஜோடி என்று சொல்லவேண்டுமா, என்ன? சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் கூட சூப்பர் ஜோடிதான்!

எல்.வி.பிரசாத், ஏ.பீம்சிங், பி.ஆர்.பந்துலு என்று ஜாம்பவான்கள் ஜெமினியை வைத்து இயக்க ஆசைப்பட்டார்கள். அடுத்து வந்த திரையுலகையின் போக்கையே மாற்றிய ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதலானோர் ஜெமினியை நாயகனாகக் கொண்டு பல படங்கள் கொடுத்தார்கள்.

ஸ்ரீதரின் முதல் படமே ஜெமினி நாயகனாக நடித்த ‘கல்யாண பரிசு’தான். சொல்லப் போனால், ஜெமினியை ஒருபக்கமும் சிவாஜியை இன்னொரு பக்கமும் கொண்டு நிறைய படங்களை எடுத்தார் ஸ்ரீதர். அதேபோல இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஜெமினி கணேசனை வைத்து பல படங்களைக் கொடுத்தார். ‘சித்தி’ படத்தில் பத்மினியும் எம்.ஆர்.ராதாவும்தான் பிரதானம். ஆனாலும் ஜெமினி தன் தனித்துவ நடிப்பால் கவர்ந்திருப்பார். ‘கற்பகம்’ படத்திலும் ‘பணமா பாசமா’ படத்திலும் அப்படித்தான்!

ஆக, அடுத்தடுத்த கட்டங்களில் வந்த இயக்குநர்கள் ஜெமினியையே அணுகினார்கள். நல்ல நல்ல கதாபாத்திரங்களைக் கொடுத்தார்கள். காதலில் மனம் கனத்து உருகினார். அவருடன் சேர்ந்து ரசிகர்களும் உருகினார்கள். காதலில் அவர் ஜெயித்தால், அதைத் தங்கள் கொண்டாட்டமாகவே பார்த்தார்கள். ஜெமினியை எல்லோருக்குமே பிடித்தது. எல்லா ஆண்களுக்கும் அவரைப் பிடித்தது. குறிப்பாக ஜெமினியின் அழகு, மிரட்டலில்லாத இயல்பான அழகு. ஆகவே எல்லாப் பெண்களுக்கும் பிடித்தது. நாயக பிம்பமில்லாமல், ஹீரோயிஸ ஜிகினாக்கள் இல்லாமல், ஜெமினி கணேசனை பலரும் கொண்டாடினார்கள். என்ன... சத்தமில்லாமல் ரசித்து, வியந்து, கொண்டாடினார்கள்!

‘சுமைதாங்கி’ படம் மாதிரியும் நடிப்பார். ‘மிஸ்ஸியம்மா’ மாதிரியான படத்திலும் நடிப்பார். ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ மாதிரியும் பண்ணுவார். ‘கொஞ்சும் சலங்கை’யிலும் அற்புதம் பண்ணுவார். ’பார்த்தால் பசி தீரும்’ படத்தில் அவருக்காக நாமே நொந்துகொள்வோம். ‘மாமன் மகள்’ படத்தில் ‘இப்படியொரு அப்பாவியா’ என இரக்கப்படுவோம்.

எல்லாவிதமான கதாபாத்திரத்துக்குள்ளேயும் கதைக்குள்ளேயும் தன்னைப் பொருத்திக்கொள்கிறவரை இதற்கு அடுத்த தலைமுறை இயக்குநராக வந்து, தமிழ் சினிமாவின் அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச் சென்ற இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஜெமினியை தன் பல படங்களில் பயன்படுத்திக்கொண்டார்.

‘’ஜெமினி, நாகேஷ், கமல்... இந்த மூவரும் என் வாழ்வில் மறக்க முடியாத கலைஞர்கள்’’ என்று பல பேட்டிகளில் சொல்லிப் பூரித்திருக்கிறார் கே.பாலசந்தர். ‘இரு கோடுகள்’ படத்தில் ஜெமினியின் மிகச்சிறந்த நடிப்பைப் பார்க்கலாம். ‘காவியத்தலைவி’யில் அற்புதமான ஜெமினியைக் காணலாம். ‘பூவா தலையா’ படத்தில், மாமியாருக்கு அடங்கிப் போகிற அப்பாவி மருமகனை அப்படியே அச்சு அசலாக இவரின் ரூபத்தில் பார்க்கலாம். சத்தியமும் நேர்மையும் உண்மையும் ஒழுக்கமுமே முக்கியம் என்பதை ‘புன்னகை’ படத்தில் சத்யா எனும் கேரக்டராகவே வாழ்ந்து காட்டிய மகா கலைஞனாகத்தான் பார்க்கிறேன் ஜெமினி கணேசனை!

‘ஜாடிக்கேத்த மூடி’ போல ஜெமினியின் அழகிய குரலுக்கு பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எம்.ராஜா அட்டகாசமாகப் பொருந்தினார்கள். இவர்கள் கூட்டணியில் அமைந்த பாடல்கள் அனைத்துமே இரவை நீளமாக்குவதற்கான பாடல்கள். அதேசமயம், ‘மதுரையில் பறந்த மீன் கொடியை' என்று டி.எம்.எஸ்.ஸும் ஜெமினிக்கென ஜாலம் காட்டியிருப்பார்.

‘களத்தூர் கண்ணம்மா’வில் இருந்தே கமல் மீது அத்தனை பிரியம். இவர்கள் இருவரும் விளையாட்டு செய்துகொண்டார்கள். அதாவது, ‘காதல் மன்னனெல்லாம் யாருமில்லை; நான் தான் காதல் இளவரசன்; இனி காதல் மன்னன்’ என்று கமல் ஜெமினியை திட்டி வாரப்பத்திரிகை ஒன்றில் எழுதினார். அடுத்த வாரம், அதற்கு ஜெமினி காரசாரமாக, கமல்ஹாசனைக் கிண்டலடித்து எழுதினார். மூன்றாவது வாரத்தில், இருவரும் சந்தித்துக் கட்டித்தழுவிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் கட்டுரையும் உரையாடலுமாக வந்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படியான ஜாலியும் கேலியுமாக, ரசனையும் ரகளையுமான மனிதர்தான் ஜெமினி கணேசன்.

ஜெமினி கணேசன் தயாரிப்பில், கே.பாலசந்தர் இயக்கிய ‘நான் அவனில்லை’ படத்தை நிறைய பேர் மிஸ் பண்ணியிருப்பார்கள். அந்தப் படத்தைப் பார்த்தால் ஜெமினியின் இன்னொரு நடிப்புச் சாகசம் புரியும். ஏன் இதை ரீமேக் செய்தார்கள் என்பதும் தெரியும்.

நீண்டகாலம் கழித்து, தன் ’வாடா போடா’ நண்பனான ஜெமினி கணேசனை, ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில், பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை கேரக்டர் கொடுத்து அற்புதம் பண்ணவைத்திருப்பார் கேபி. தெலுங்கு ‘ருத்ரவீணா’விலும் இதே கேரக்டரில் ஜெமினி நடித்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வல்லவனுக்கு வல்லவன்’ உண்மையிலேயே வித்தியாசமான படம். அதுவரை வில்லனாக நடித்த அசோகன் நாயகன். வில்லனாக நடித்த ஆர்.எஸ்.மனோகர் போலீஸ். நாயகனாக, மென்மையான நாயகனாக நடித்த ஜெமினி கணேசன் கொள்ளைக்கூட்ட பாஸ்! கோட்டும்சூட்டுமாக, சிகரெட் பற்றவைத்துக்கொண்டு, அதிக வசனம் பேசாமல், பார்வையால் மிரட்டும் வில்லனைப் பார்த்தால், அசந்துபோவீர்கள்!

நகைச்சுவைக்கும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் இயக்குநர் சுந்தர்.சி., ‘மேட்டுக்குடி’ படத்தில் கவுண்டமணியையும் சேர்த்துக்கொண்டு ஜெமினியை ரகளை பண்ணவிட்டிருப்பார். ‘அவ்வை சண்முகி’ படத்தில், சண்முகி மாமிக்கு அடுத்து ஸ்கோர் செய்பவர் ஜெமினி கணேசன்தான்! இதுவே அவரின் கடைசிப்படமாகவும் அமைந்ததுதான் சோகம்.

நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருக்கும் போது, கோடை விடுமுறையில் என் தாத்தா ஊரான கோட்டையூருக்குச் சென்றிருந்தேன். அப்போது திருமண விழாவுக்கு என்னையும் அழைத்துச் சென்றார் தாத்தார். ‘டேய்...’ என்று என் தாத்தாவின் பெயரைச் சொல்லி அழைத்தார் யாரோ ஒருவர். அப்படி அழைத்தவர் ஜெமினி கணேசன். இருவரும் தோளிலும் முதுகிலும் செல்லமாக அடித்துக்கொண்டார்கள். ‘சிகரெட் இருக்காடா’ என்று தாத்தாவிடம் கேட்டவர், இருவரும் பற்றவைத்துக்கொண்டு பழகியதையெல்லாம் பேசிக்கொண்டார்கள். இருவரும் நல்ல நண்பர்களாம்! ஜெமினி கணேசன் குறித்தும் சினிமாக்கள் குறித்தும் என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார் தாத்தா.

‘இவன் யாரு தெரியுமாடா?’ என்று ஜெமினி கணேசனைக் காட்டி தாத்தா என்னிடம் கேட்டார். ‘தெரியுமே... ஜெமினி கணேசன்’ என்று சொன்னேன். ‘எங்கே பாத்துருக்கே?’ என்று கன்னம் தடவிக் கேட்டார் ஜெமினி கணேசன். ‘நிறைய தியேட்டர்ல பாத்தேன். உங்க தோள்ல ஒரு பை இருக்குமே. அதைக் காணோம். ராமு எங்கே? அந்த நாயைக் கூட்டிட்டு வந்திருக்கீங்களா?’ என்று கேட்டேன். ‘ராமு’ படம் அந்த அளவுக்கு எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஜெமினி கணேசனை எழுதும்போது இவையெல்லாம் நினைவுக்கு வருகின்றன.

1920 நவம்பர் 17-ம் தேதி பிறந்த ஜெமினி கணேசன், 2005 மார்ச் 5-ம் தேதி காலமானார். அவரின் நூற்றாண்டைத் தாண்டி இரண்டு ஆண்டுகள் கடந்தும் ஜெமினி கணேசனை நினைவுகூர்கிறோம் என்றால், அவர் வெறும் காதல் மன்னனா? காவிய மன்னன்! மிக மிக எளிமையான கதாபாத்திரங்களால் நம் நெஞ்சம் தொட்ட வஞ்சிக்கோட்டை வாலிபன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in