சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்: 'பத்து தல' படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்: 'பத்து தல' படத்துக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

'பத்து தல' படத்தில் சிம்புவுக்கு வில்லனாக, இயக்குநர் கவுதம் மேனன் நடிக்கவிருக்கிறார். இந்தத் தகவலை, படத்தின் இயக்குநர் கிருஷ்ணா உறுதிசெய்திருக்கிறார்.

சிம்புவை வைத்து கவுதம் மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது சிம்பு நடிக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் அவர் இயக்கிவருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கன்னடத்தில் மெகா ஹிட்டான ‘முப்தி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிவருகிறது. அதேசமயம், தமிழ் ரசிகர்களுக்கேற்ப பல மாற்றங்களை செய்திருப்பதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் டிசம்பரில் திரைக்கு வரவுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தைத் தொடர்ந்து ‘பத்து தல’ படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ‘பத்து தல’ படத்தின் வில்லனாக இயக்குநர் கவுதம் மேனன் நடிப்பதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எஃப்.ஐ.ஆர்’, ‘செல்ஃபி’, 'ட்ரான்ஸ்' (மலையாளம்) உள்ளிட்ட படங்களில் கவுதம் மேனன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் அவர் வில்லனாக நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in