
“அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா’ படம் ஆபத்தான முன்னுதாரணத்தைத் தருகிறது” என்று, சமீபத்தில் பத்மஸ்ரீ விருதுபெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இலக்கியவாதி கரிகாபதி நரசிம்ம ராவ் விளாசியுள்ளார்.
அல்லு அர்ஜுன் நடித்து டிசம்பரில் வெளியான படம் ‘புஷ்பா’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்தனர். சுகுமார் இயக்கிய இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. கரோனா காலகட்டத்திலும் அதிக வசூலை குவித்த படம் இது. இந்தியிலும் வசூலைக் குவித்து வருகிறது. இதன் 2-ம் பாகம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கு இலக்கியவாதியும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான இலக்கியவாதி கரிகாபதி நரசிம்ம ராவ் விளாசியுள்ளார். சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“சமூகத்தில் நடக்கும் பல கொடுமைகளுக்கு ’புஷ்பா’ போன்ற படங்கள்தான் காரணம். புஷ்பராஜ் என்ன பகவான் ஸ்ரீராமரா, அல்லது ஹரிச்சந்திரனா? அவன் ஒரு கடத்தல்காரன். இந்தப் படம், ஒரு கடத்தல்காரனை மகிமைப்படுத்துகிறது. அவனை ஹீரோ என்கிறது. இந்தப் படத்தால் பாதிக்கப்பட்ட ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டால், படத்தின் இயக்குநரும் ஹீரோவும் பொறுப்பேற்பார்களா?
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் நாயகனின் ஸ்டைலை, பலர் பின்பற்றி புகைப்படங்கள், வீடியோ வெளியிடுகிறார்கள். அவரை போலவே மிமிக்ரி செய்கிறார்கள். இது மோசமான தாக்கம். அடுத்த பாகத்தில் அவரை ஒரு சீர்திருத்தவாதியாகக் காட்டலாம். ஆனால், 2 மணி நேரம் தீமையைச் சொல்லிவிட்டு, கடைசி 5 நிமிடங்களில் நல்ல விஷயங்களை சொல்லுவதால் என்ன பயன்? இந்தப் படம் மட்டுமல்ல, பல திரைப்படங்கள் பொழுதுபோக்கு என்ற பெயரில் முட்டாள்தனத்தை ஊக்குவிக்கின்றன”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.