மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கார்கி’ - மகிழ்ச்சியில் துள்ளும் படக்குழு!

மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கார்கி’ - மகிழ்ச்சியில் துள்ளும் படக்குழு!

சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ திரைப்படம், 44-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்திருந்த படம் 'கார்கி.' இந்தப் படத்தில் ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட், கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் சக்தி ஃபிலிம்ஸுடன் இணைந்து வெளியிட்டது. ஜூலை 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கனமான கதையமைப்பு கொண்ட இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர். இந்நிலையில், இத்திரைப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 2 வரை ரஷ்யாவில் நடைபெற்ற 44-வது மாஸ்கோ சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. குறிப்பாக ‘உலகமெங்கும் இருந்து தேர்வுசெய்யப்பட்ட வெற்றிப்படங்கள்’ எனும் பிரிவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

இதனால் ‘கார்கி’ படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். இந்தப் படத்தில் பணிபுரிந்த நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பெரும் உற்சாகமடைந்திருக்கின்றனர். இந்தத் திரையிடலுக்குப் பின்னர், 'கார்கி' படம் சர்வதேச அளவில் கவனம் பெரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல், அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படமும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in