இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு! -ஒரு சின்ன ப்ளாஷ்பேக்

இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு
இளையராஜாவுடன் கங்கை அமரன் சந்திப்பு

பல ஆண்டுகளுக்கு பின்னர், தனது சகோதரர் இளையராஜாவை இன்று நேரில் சந்தித்த கங்கை அமரன் புகைப்படம் வைரலாகிக் கொண்டிருக்கும் சூழலில், இவர்களுக்குள் நடந்த உறவு குறித்து சின்ன ப்ளாஷ்பேக்.

கங்கை அமரன், இசைஞானியின் தம்பி என்கிற அடையாளத்தை தாண்டி, தனக்கென பல அடையாளங்களைக் கொண்டவர். பாடலாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. சகோதரர்களாய் வாய்ப்புகளை தேடி அவர்கள் வெற்றி பெற்ற கதை அனைவருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு கிடைத்த பிறகு, கங்கை அமரன் தனியாளாக போராடி ஜெயித்த கதை ஒன்றும் இருக்கிறது. அதிலும் இளையராஜாவிடம் இருந்த கங்கை அமரன், தன்னை அடையாளம் காட்ட போராட வேண்டியிருந்தது. அதுவும் வெளி ஆட்களுடன் இல்லை, அவரது அண்ணன் இளையராஜாவிடம் என்பதுதான் கடந்த கால உண்மை.

அதை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாமா?

மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் எல்லோரும் நண்பர்கள் என்பது நாம் அறிந்ததே. பொள்ளாச்சியிலிருந்து ஒருவர் தன் நிலங்களை விற்று படம் எடுக்க வருகிறார். மலேசியா வாசுதேவனை சந்திக்கிறார். ஏற்கெனவே வாசுவுக்கு கதை தாகம் உண்டு. தன்னிடம் ஒரு கதை இருப்பதை அவர் கூறுகிறார். குறைந்த பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க முடிவு செய்கிறார்கள்.‘ ஒரு சின்ன இயக்குநர் மூலம் மாஸ்டர் சேகர், சங்கீதாவை வைத்து படத்தை எடுக்கலாம்’ என ஐடியா தருகிறார் வாசு. இசைக்கு இளையராஜாவை போடலாம் என்கிறார் தயாரிப்பாளர். “வேணாங்க, அவர் நிறைய சம்பளம் வாங்குவாரு, அவர் உதவியாளர், அவரது தம்பி கங்கை அமரனை போடலாம்” என வாசு கூற, அவரும் முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறார். அதுவரை இளையராஜாவிடம் கித்தார் வாசித்துக் கொண்டிருக்கிறார் கங்கை அமரன். அவருக்கு இசையமைப்பாளர் ஆகும் ஆசையே இல்லை. எண்ணமும் இல்லை. மலேசியா அவரை மனம் மாற்றி, ஒப்புக்கொள்ள வைக்கிறார். சரி ஜாலியா பண்ணலாம் என கங்கை அமரனும் ஒப்புக்கொள்கிறார்.

அடுத்த ஒரு வாரத்தில் நாளிதழில் விளம்பரம் வருகிறது. புதியவர்கள் தயாரிக்கும் ‘மலர்களிலே மல்லிகை’. மலேசியா வாசுதேவன் கதை. இசையமைப்பாளர் கங்கை அமரன் என கொட்டை எழுத்தில் விளம்பரம். ஊரே பார்த்துவிட்டது. அன்றைய தினம் ஏவிஎம் ஆர்ஆர்-ல் வழக்கம்போல பணிக்குச் செல்கிறார் கங்கை அமரன். முகம் நிறைய கோபத்துடன் காத்திருக்கிறார் இளையராஜா. ‛‘உனக்கு இசையை பத்தி என்ன தெரியும்’’ என எடுத்த எடுப்பிலேயே கேட்கிறார். கங்கை அமரன் அதை எதிர்பார்க்கவில்லை. ஆடிப்போய் நிற்கிறார். சுற்றிலும் இசைக் கலைஞர்கள் நிற்கிறார்கள். கித்தாரும் கையுமாக என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போன கங்கை அமரனுக்கு, அடுத்தடுத்த வார்த்தையால் அடி விழுகிறது. “கித்தாரை வெச்சிட்டுப் போ” என்கிறார் இளையராஜா. ‛‘இல்லைண்ணே, சும்மா ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா தான்’’ என கங்கை அமரன் பேசி முடிப்பதற்குள், வெளியே போகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார் இளையராஜா. வெளியே வந்து நொந்துபோய் அமர்கிறார் கங்கை அமரன்.

இப்போ என்ன செய்வது என தெரியாமல், அங்கேயே உட்கார்ந்திருக்கிறார் கங்கை அமரன். அப்போ அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் (அவர்தான் இளையராஜாவிற்கு வாய்ப்பு தந்தவர்), ‛‘என்ன இங்கே உட்கார்ந்திருக்க’’ என கேட்டுள்ளார். கங்கை அமரன் விசயத்தை கூறியுள்ளார். ‛‘சரி வா... என் கூட...’’ என அவரை அழைத்துக் கொண்டு, ஸ்டுடியோ உள்ளே அழைத்துச் செல்கிறார் வெங்கடேஷ். உள்ளே கம்போசிங்கில் இருக்கிறார் இளையராஜா. அதை நிறுத்தச் சொன்ன வெங்கடேஷ், ‛’ஏன் இவனைப் போக சொல்ற... நீ அப்போ வந்தப்போ நான் உன்னை போகச் சொல்லியிருந்தா... இப்போ நீ வந்திருக்க முடியுமா?’’ என்று கேட்டுள்ளார். தன்னிடம் சொல்லாமல் கங்கை அமரன் இப்படி பண்ணிட்டானே என்கிற கோபம்தான் ராஜாவுக்கு. “இங்கே பாரு... இவன் இல்லாட்டி வேறு யாரோ மியூசிக் பண்ணப்போறாங்க... அதுக்கு இவனே பண்ணட்டுமே... அவனை எதுவும் சொல்லாத” என அறிவுரை சொல்லிவிட்டு கிளம்பினார், வெங்கடேஷ். அவர் பேச்சுக்கு எப்போதும் இளையராஜா மறுபேச்சு பேசுவதில்லை. அதிலிருந்த உண்மையையும் அவர் புரிந்திருந்தார். ஆனாலும், கங்கை அமரனால் அதற்கு முன் நடந்ததை அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லை.

இளையராஜாவுடன் கங்கை அமரன்
இளையராஜாவுடன் கங்கை அமரன்

இருந்தாலும் அதிலிருந்து மீண்டு, அந்த படத்துக்காக நல்ல இசையை தந்தார் கங்கை அமரன். ஆனால், படம் வெளியாகவில்லை. அதன்பின் அவருக்கு படங்கள் வரத்தொடங்கின. ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்கிற படம்தான் கங்கை அமரன் இசையமைத்து முதலில் வெளிவந்தது. அப்படி தனி இசையமைப்பாளராக இருந்தாலும், இளையராஜாவுக்கு கித்தார் வாசிப்பதை அவர் நிறுத்தவில்லை. இப்படிப் போய் கொண்டிருந்த நாளில்தான், திடீரென ஒருநாள் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியிடம் கங்கை அமரனுக்கு அழைப்பு. ‘வாழ்வே மாயம்’னு ஒரு படம். நீ தான் பண்ணனும் என கூறுகிறார் பாலாஜி. “இல்லண்ணே... அண்ணே இருக்கும்போது நான் எதுக்கு...” என தவிர்க்க முயற்சிக்கிறார் கங்கை அமரன். “இல்லப்பா... அவர் கொஞ்சம் அதிக சம்பளம் கேட்பாரு... ரீமேக் தானே... அதில் இருக்கிற பாட்டை போட்டுக்கலாம்... நீயே பண்ணேன்...” என கூறியுள்ளார் பாலாஜி.

அப்போது இளையராஜாவின் சம்பளம் ரூ.7,500. கங்கை அமரனுக்கும் அது தெரியும். இது பெரிய சம்பளமா... என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, சரி நம்மை தேடி வர்றாங்க... பண்ணுவோம் என ஒப்புக் கொண்டார். எம்எஸ்வி, பாலாஜியிடம் கேட்டுள்ளார். “ஏன் ராஜாவை போடலே” என. “இல்லைண்ணே... இது ரீமேக்... அதிலிருந்து பாடல்களை எடுக்கிறோம் அதுதான்” என அவரை சமாளித்துள்ளார் பாலாஜி. ஆனால், அனைத்துக்கும் புதிய ட்யூன் போட்டு பாடல்களை வேற லெவலுக்கு கொண்டு சென்றார் அமர்.

அந்த ‘வாழ்வே மாயம்’ பாடல்கள் சூறாவளி ஹிட். இன்றைக்கும் அதற்கு இசை இளையராஜா என்றுதான் பலரும் நினைச்சிக்கிட்டிருக்கிறாங்க. அது அக்மார்க் கங்கை அமரனின் ராகம். ‘வாழ்வே மாயம்’ எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது. தீபாவளி இரவு அன்று பஞ்சு அருணாச்சலத்திடம் இருந்து கங்கை அமரனுக்கு அழைப்பு. அவரும் ஓடுறார். அங்கு இளையராஜாவும் அமர்ந்திருக்கிறார். அங்கே அருணாச்சலம் கங்கை அமரனை திட்டுகிறார். கங்கை அமரனுக்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரம் கழித்துதான், அது கலாய்ப்பு என புரிந்து கொள்கிறார். “ஒன்னுமில்ல... கோழி கூவுதுனு ஒரு படம் பண்றோம்... நீ தான் டைரக்டர்னு...” சொல்றாரு பஞ்சு. கங்கை அமரனுக்கு ஒரே ஷாக். அதுவரை யாரிடமும் உதவியாளரா கூட அவர் வேலை பார்த்தது இல்லை. அதைப் பற்றி பெரிய புரிதலும் இல்லை. இசையாய் போய் கொண்டிருந்த வாழ்க்கை, இப்போ போய் டைரக் ஷன்... வாய்ப்பு. ‘வாழ்வே மாயம்’ தந்த வாழ்வில் சிவாஜி உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களின் படங்கள் பல குவிந்து கிடக்கின்றன. சரி இதையும் பார்க்கலாம் என அதிலும் கால் வைக்க முடிவு செஞ்சார் கங்கை அமரன்.

இப்போதைக்கு தேடாமல் இந்த பட வாய்ப்பு வந்திருக்கிறது. அதைப் பற்றி புரிதல் இல்லை என்றாலும் சினிமா தெரியும். யாரிடமும் எந்த ஆலோசனையும் செய்யாமல் களமிறங்கிட்டார் கங்கை அமரன். ‘கோழி கூவுது’ நல்ல ஹிட். எதுவுமே தெரியாமல் இயக்குநராக அறிமுகமான கங்கை அமரன், அதன் பின் 17 படங்களை டைரக்ட் செஞ்சிட்டார். அதில் வெற்றியும் பெற்றார் என்பதுதான் வரலாறு. இதற்கிடையில் பாடலாசிரியராகவும் ஜொலித்தார். அவரின் பாடல் திறமையைத் தொடர்ந்து அங்கீகரித்தவர் பாரதிராஜா. ராஜாக்கள் கூட்டத்தில் தனி ரோஜாவாக மணம் வீசியவர் அமர்.

இளையராஜா என்கிற கிரீடத்தை நாம் கொண்டாடுகிறோம். அதற்கு அவர் முழு தகுதியானவரும் கூட. அதே போல்தான் கங்கை அமரனும். கிரீடமாக இல்லை என்றாலும் அதிலுள்ள வைரமாக ஜொலித்தவர்.

நல்ல கித்தார் பிளேயர்... இசையோடு அசை போடுபவர். இதை எல்லாம் தாண்டி, கட்டிங் கண்ணையாவாகிய அடியேனுக்கு 83-ம் வருசம் ஒரு கேஷூவல் பேட்டி- அதுவும், எனக்கு தெரிந்த கல்லூரி மாணவர்கள் சிலரை அழைச்சுப் போய் திலகம் என்ற ஒரு இதழுக்காக பேட்டி எடுத்தபோது கொடுத்த அதே ரியாக்சனை இன்றும் அளிக்கும் வல்லமை படைத்தவர். ஆனால், “இளையராஜாவிடம் புதுமுகம் யாராவது கை குலுக்குவது போல ஒரு போட்டோ எடுத்து போடச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்று ஒரு சீனியர் டைரக்டர் சொன்னதை யோசித்தால், பொளேர் என்றிருக்கிறது.

ஆக.. இன்றைய சந்திப்பை அடைய கங்கை அமரனும் சில பல அவமானங்களை விலை கொடுக்க நேர்ந்தது என்பதும், அதற்கு விலை இல்லை என்பதும்தான் உண்மை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in