கங்கை அமரன் 75: சினிமாவின் பல துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகன்!

- பவளவிழா பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
கங்கை அமரன் 75: சினிமாவின் பல துறைகளிலும் முத்திரை பதித்த வித்தகன்!

ஒரு துறைக்குள் கிளைகிளையாக பல துறைகள் இருக்கின்றன. அந்தத் துறைகளின் ஒவ்வொன்றிலும் தனித்திறமையுடன் திகழ்பவர் என்று ஒருவர் இருப்பார். ஒரு இயக்குநராக இருந்துகொண்டு எல்லோரையும் தான் மனதில் நினைத்தபடி வேலை வாங்க, மிகப்பெரிய சாமர்த்தியம் வேண்டும்.

பாடலாசிரியரிடம் பாடலை சரியாகக் கேட்க வேண்டும். அதைச் சரியாகப் பாடுவதற்கு தேர்வு செய்யவேண்டும். அட்டகாசமான டியூனில் பாடல் ஹிட்டடிக்கவேண்டும். படத்தின் பின்னணி இசையில் தேர்ந்த ஞானம் இருக்கவேண்டும். நடிகர்களையெல்லாம் அச்சு அசலாக, கதைக்குள்ளும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்திப் பார்க்கிற நடிகர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, பாடலாசிரியரை, பாடகர்களை, இசையமைப்பாளர்களை மிகச்சரியாக வேலை வாங்குகிற இயக்குநர்தான், ஒரு படத்தின் தலைவன். இவை அனைத்தையும் செய்கிற, சகல துறைகளிலும் தன் வித்தையைக் காட்டுகிற கங்கை அமரனிடம் கேட்டால்... ‘’பாண்டிச்சேரி அன்னையின் அருள்’’ என்று ஒரு பதிலைச் சொல்லுவார். இன்னொரு பதில்... ‘’எங்கள் அண்ணன் இளையராஜாதான் காரணம்’’ என்று அவரைக் கைகாட்டி வணங்குவார். திறமைகள் அனைத்தையும் புத்திக்குள் வைத்துக்கொண்டு, கர்வம் மொத்தத்தையும் வெளியே தள்ளிவிடுகிற இயல்பான படைப்பாளி, கங்கை அமரன்!

தமிழகத்தின் பல ஊர்களுக்கு நாம் போயிருக்கிறோமோ இல்லையோ... ஆனால், அந்த ஊர் நமக்குப் பரிச்சயமாகி இருக்கும். ஆனால், அந்த அளவுக்கு குக்கிராமங்கள் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சொல்லப்போனால், ‘அப்படியொரு ஊர் இருக்கிறதா என்ன?’ என்று கேட்டுவிட்டுக் கடந்துசெல்வோம். ஆனால், தமிழகத்தின் தெற்கே, கேரளத்துக்கு முன்னே, இயற்கையும் எழிலும் கொஞ்சி விளையாடுகிற அப்போதைய மதுரை ஜில்லாவுக்குள், இப்போதைய தேனி மாவட்டத்துக்குள் இருக்கிற ‘பண்ணைபுரம்’ யாருக்குத்தான் தெரியாது?

சொல்லப்போனால், தேனி என்றதும் நமக்கு மூன்று ஊர்கள் நினைவுக்கு வரும். பாரதிராஜாவின் ‘அல்லிநகரம்’, இளையராஜா, கங்கை அமரனின் ‘பண்ணைபுரம்’, கவிஞர் வைரமுத்துவின் ‘வடுகபட்டி’.

அப்பாவோ அம்மாவோ மிகப்பெரிய சங்கீத வித்வான் என்றால் அவர்களின் மகனும் மகளும் புகழ் பெற்ற இசை வல்லுநர்களிடம் கற்றுக்கொள்வார்கள். மேடையேறுவார்கள். சென்னையின் முக்கியமான மஹாலில், கச்சேரி நடக்கும். புகழ்பெறுவார்கள். ஆனால், இப்படியான எந்த அடையாளமோ, பாதையோ இல்லாமல், பாவலர் சகோதரர்கள் திகழ்ந்தார்கள். அந்த சகோதரர்களில் பாவலர் வரதராஜன் அந்தக் காலத்தில் எல்லோராலும் அறியப்பட்டார். அவரின் ஆர்மோனியம்தான் இவர்களுக்கு காதலி. அவரின் பாடல்கள்தான் இவர்களுக்கு திருப்பள்ளியெழுச்சி. இப்படியாக வளர்ந்தவர்களுக்குள் பாட்டும் இசையும் தானாகவே வந்து அரைநிஜார் பாக்கெட்டுக்குள் வந்து ஒளிந்துகொண்டது.

இவர்களில் அமர்சிங், மூத்த அண்ணனைப் போலவே பாட்டெல்லாம் எழுதினார். அடுத்த அண்ணனைப் போலவே ஆர்மோனியமெல்லாம் வாசித்தார். இன்னொரு அண்ணனைப் போலவே குழுவை நிர்வகிப்பதைக் கவனித்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரங்களுக்குப் பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போதே கவனம் ஈர்த்தார்கள். கேரள கம்யூனிஸ்ட் சரித்திரத்தில், பாவலர் சகோதரர்களுக்கு தனியிடம் உண்டு.

இன்றைக்கு எஃப்.எம்., டிவி சேனல்கள், ஸ்பாட்டிஃபை என்றெல்லாம் வந்துவிட்டன. இவற்றில், ஒருநாளில் ஒருமுறையென்ன பல நூறுமுறை, இளையராஜாவின் இசையோ பாடலோ குரலோ கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் அமர்சிங் என்கிற கங்கை அமரனின் இசையோ பாடலோ குரலோ கேட்டுக் கிறங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அன்றைக்கு வீட்டில் இருந்த ரேடியோ பெட்டியை விற்றுத்தான் சென்னைக்கு பஸ் ஏறினார்கள் பாவலர் சகோதரர்கள்.

இயக்குநராவதற்கு முன்பே பாரதிராஜா பழக்கம். இங்கு வந்ததும் சங்கிலிமுருகன் நட்பானார். சேர்ந்து மகிழ்ந்தார்கள். சேர்ந்து சாப்பிட்டார்கள். பலமுறை சேர்ந்து சாப்பிடாமலேயே இருந்தார்கள். சென்னையிலும் இவர்களின் கச்சேரிகள் நடந்தன. அமர்சிங் பாட்டெழுதுவார். ராசய்யா டியூன் போடுவார். இருவரில் யாராவது பாடுவார்கள். சில சமயங்களில் எஸ்பிபி-யும் இந்தக் கூட்டணியில் இணைந்து பாடினார். மலேசியா வாசுதேவனும் பாடினார்.

உலகில் யாராவது வழிகாட்டுவார்கள். கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்படியான வழியைக் காட்டியதும் உடன் வந்து ஒரு இடத்தில் நிறுத்தினார். உலகில் யாராவது கைதூக்கி விடுவார்கள். அப்படி கைதூக்கிவிட்டவர் பஞ்சு அருணாசலம். ராசய்யா இளையராஜாவானார். அமர்சிங் கங்கை அமரனானார். ‘அன்னக்கிளி’ வந்தது. மொத்தத் தமிழகத்தையும் புயலென மையம் கொண்டது இவர்களின் இசை.

அதையடுத்து பாரதிராஜாவும் இயக்குவதற்கு வந்தார். ‘16 வயதினிலே’ எடுத்தார். இளையராஜாவின் இசை. கங்கை அமரனுக்கு பாடல் எழுத வாய்ப்பு. அந்தப் பாடலைப் பாடிய எஸ்.ஜானகிக்குக் கிடைத்தது பாராட்டும் கைத்தட்டலுடனுமான விருது! அந்தப் பாடல் ‘செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே நீ கொஞ்சம் சொல்வாயோ’ பாட்டு.

இங்கே ‘செந்தூரப்பூவே’ எழுதினார். பாரதிராஜா கிழக்கே விட்ட ரயிலில், ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ என்று சேதி சொல்லி எழுதினார். இளையராஜா டியூன் போட்டால் அதுதான் ஹிட். கங்கை அமரன் பாட்டு எழுதினால், அதுதான் சூப்பர் ஹிட் பாடல் என அண்ணனும் தம்பியும் இணைந்து கலக்கினார்கள். தொடர்ந்து பாடல்கள் எழுதிக்கொண்டிருந்த கங்கை அமரனுக்கு, ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ எனும் படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பாடல்களைக் கேட்டுப்பாருங்கள். ‘ஒரு நாயகன் ஒரு நாயகி’ என்ற பாடலில், நாமே நாயகனாகவும் நாயகியாகவும் உருமாறிக் கிறங்குவோம். மலேசியா வாசுதேவன் படமெடுத்தார். அதற்கும் இசையமைத்தார். பாரதிராஜா எனும் குருகுலத்தில் இருந்து வந்த கே.பாக்யராஜ், தன் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். ‘காதல் வைபோகமே காணும் நன்னாளிதே’ பாடல், இன்றைக்கும் காதலின் உயிரை நமக்குள் உணர்த்திப் பூரிக்கச் செய்யும்.

1977-ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகம். 1979-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகம். நடுவே பாடகராகவும் அறிமுகம். இப்படி, இசை என்கிற வாசலின் வழியே புகுந்து, திரைப்படத்தின் சகல சந்துபொந்துகளுக்குள்ளும் பயணித்தார் கங்கை அமரன்.

இதுவா... அதுவா... அப்படியா... இப்படியா... என்று இங்கும் அங்குமாகப் பயணித்துக் கொண்டிருந்த கங்கை அமரனை அண்ணன் இளையராஜா அழைத்தார். ‘’டேய் அமர். நாம ஒரு படம் தயாரிக்கிறோம். நீதான் டைரக்ட் பண்றே’’ என்று சொன்னார். ‘டைரக்‌ஷனா, நமக்கா, வரவே வராதே’ என்றெல்லாம் பின்வாங்கவில்லை அவர். ‘அண்ணன் காட்டிய வழி’ என்று, அடுத்த விடியலைப் பார்த்தார். அதுதான் ‘கோழி கூவுது’. அந்தப் படத்தில் இளையராஜா போட்ட பாட்டெல்லாம் ஹிட்டு. படம் சூப்பரோ சூப்பர் ஹிட்டு. விஜி எனும் நடிகையை அறிமுகப்படுத்தினார். முன்னதாக ‘சங்கிலி’யில் தொடங்கி சில படங்களில் நடித்திருந்தாலும் பிரபுவுக்கு, ‘கோழி கூவுதுதான்’ முதல் நூறுநாள் படம்; முதல் வெள்ளிவிழா படம்.

‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பார்கள். புதுமை இயக்குநர் ஸ்ரீதரிடம் உதவியாளர்களாக இருந்த சந்தானபாரதியையும் வாசு பீதாம்பரத்தையும் இணைத்து ‘பாரதி வாசு’வாக்கி, ‘பன்னீர் புஷ்பங்கள்’ இயக்கவைத்தார். தயாரிப்புக்கான முழு பங்களிப்பை கங்கை அமரன் செய்தார். இளையராஜாவோ சம்பளமே வாங்காமல் படத்துக்கு இசையமைத்துக் கொடுத்தார்.

‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ‘மெளன கீதங்களில்’ ‘மூக்குத்திப்பூவை’ கொண்டுவந்தார். அடுத்தடுத்து படங்கள் இசையமைக்க வந்தன. பாடல்களை வெற்றியாக்கித் தந்தார். பாடக் கூப்பிடுவார்கள். பாடினார். பாடலை எழுத அழைப்பார்கள். அந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாக அது இருக்கும். போதாக்குறைக்கு, இயக்குநர் பணி வேறு! இத்தனையும் கடந்து அண்ணனுக்கு அசிஸ்டென்ட், பி.ஏ., மேனேஜர், செயலாளர் என ஏகப்பட்ட பணிகள்.

‘கோழி கூவுது’ படத்துக்குப் பிறகு ‘கொக்கரக்கோ’. ’பொழுது விடிஞ்சாச்சு’ என்று வரிசையாக விடியல் சம்பந்தப்பட்ட நல்ல எண்ணங்களை, நல்லதிர்வுகளை விதைத்தார் அமரன். ’நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தில் அறிமுகமான இயக்குநர் ராமராஜனை, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ என்றாக்கினார். கங்கை அமரனாலும் இளையராஜாவாலும் ராமராஜன் தொட்ட உச்சம் என்பது அசாதாரண சரித்திரம்!

ஏவி.எம்மின் ‘வெள்ளைப்புறா ஒன்று’ என விஜயகாந்தை வைத்து இயக்கினார். சரண்ராஜ், பாண்டியன், அர்ஜூன் என பல நடிகர்களை வைத்து படம் இயக்கினார். தயாரிப்பாளர் கே.பாலாஜி தெலுங்கில் இருந்து ஒரு படத்தை ரீமேக் செய்யும் போது, கங்கை அமரனை அழைத்து ‘’அதே டியூனைக் கூட பயன்படுத்திக்கங்க’’ என்று சொன்னார்.

‘’அதெல்லாம் வேணாம் சார். புதுசாவே பண்ணுவோம்’’ என்று போட்டுக்கொடுத்த டியூன்களும் இசைத்துக் கொடுத்த பாடல்களும் இன்றைக்கும் நம் மனதில் தனித்துவம் வாய்ந்த பாடல்களாக இருக்கின்றன. ‘வாழ்வே மாயம்’ படத்தின் ‘தேவி ஸ்ரீதேவி’, ‘ஏ ராதாவே’, ‘நீலவான ஓடையில்’, ‘வந்தனம் என் வந்தனம்’, ‘வாழ்வே மாயம்’, ‘மழைக்கால மேகம் ஒன்று’ என எல்லாப் பாடல்களையும் இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்! கமலும் கே.பாலாஜியும் இணைந்த ‘சட்டம்’ படத்திலும் தன் இசைத்திறனை வெகுவாக வெளிப்படுத்தினார் கங்கை அமரன்.

1988-ம் ஆண்டு, தமிழ் சினிமாவுக்கு மறக்க முடியாத ஆண்டு. அந்த வருடம் கமல், ரஜினி, மோகன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என ஏகப்பட்ட பேரின் படங்கள் வந்தன. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தியேட்டரில் ஒரு வருடத்துக்கும் மேலே ஓடி சாதனை செய்த ‘கரகாட்டக்காரன்’ எப்போது டிவியில் போட்டாலும் பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. ‘வாழைப்பழ காமெடி’, ‘சொப்பன சுந்தரி’ போன்ற விஷயங்களை யாரால் மறக்கமுடியும்?

’’ராஜா அண்ணாமலைபுரத்தில் இருந்தோம். நானும் மனைவியும் வாக்கிங் செல்வோம். நடிகை தேவிகாம்மாவும் அவரின் மகள் கனகாவும் வாக்கிங் வருவார்கள். சில சமயங்கள் எங்கள் வீட்டில் அவர்கள் காபி சாப்பிடுவார்கள். சில சமயம் நாங்கள் அவர்கள் வீட்டில் டீ குடிப்போம். ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு புதுமுக நடிகை வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோதுதான், என் மனைவி, ‘தேவிகாம்மாவோட மகளை ஹீரோயினாக் கொண்டு வாங்க’ என்று ஐடியா கொடுத்தார்” என்று முன்பொரு முறை நமக்கு பேட்டியளித்த தருணத்தில் கங்கை அமரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

சங்கிலிமுருகன் தயாரிப்பில், 'கும்பக்கரை தங்கய்யா’ 200 நாள் ஓடி சாதனை படைத்தது. அமரனின் இயக்கத்தில் நல்ல கதை அமைந்திருக்கும். நீரோடை போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இயல்பான வசனங்களை எழுதுவதிலும் தேர்ந்தவர். மருந்துக்கும் கூட டபுள் மீனிங் வசனங்கள் இருக்காது. கிளாமர் விஷயங்களையெல்லாம் பல மைல் தூரத்துக்குத் தள்ளிவைத்துவிடுவார் கங்கை அமரன். ‘கோழி கூவுது’ படத்தில் சில்க் ஸ்மிதாவுக்கு அப்படியொரு வாழ்நாள் கதாபாத்திரம் கொடுத்திருப்பார் கங்கை அமரன்.

பிரபுவையும் கஸ்தூரியும் வைத்து, ‘சின்னவர்’ படத்தை எடுத்தார். மாபெரும் வெற்றியைக் கொடுத்தார். விஜயகாந்த், கனகாவை வைத்து ‘கோயில் காளை’ கொடுத்தார். அதிரிபுதிரி சக்ஸஸ் கிடைத்தது. ’ஊரு விட்டு ஊரு வந்து’, ‘தெம்மாங்கு பாட்டுக்காரன்’, ’வில்லுப்பாட்டுக்காரன்’ என்று ராமராஜனின் மார்க்கெட் வேல்யூவை தொடர்ந்து உச்சத்தில் வைக்கும்படியான படங்களை வழங்கிய அட்டகாசமான இயக்குநர் கங்கை அமரன்.

சினிமா என்பது பொழுதுபோக்கு. அதில் நம் குடும்ப உறவுகளை, கிராமத்துப் பண்பாடுகளை, நம் நாட்டின் கலாசாரங்களை உணர்த்திக் கொண்டே இருக்கவேண்டும் என நினைத்தார் கங்கை அமரன். இதை ஒவ்வொரு முறை நம்மிடம் பேசும்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

பி.வாசுவுக்கு கங்கை அமரன் மீது தனி அன்பும் பிரியமும் உண்டு. அதனால்தான் ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தில் நாயகனுக்கு வெங்கட்பிரபுவின் நினைவாகப் பெயர் வைத்திருப்பார். அதேபோல தனியே படம் இயக்கியபோது முதல் படமான ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்துக் கொடுத்தார்.

முப்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார் கங்கை அமரன். இருநூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார். ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். பாடினார்.

கவிஞர் வாலி எழுதிய பல பாடல்களை, கண்ணதாசன் பாடல்கள் என தப்புக்கணக்குப் போட்டு, தப்பாமல் சொல்லிக் கொண்டே இருப்போம். அதேபோல், இவர் எழுதிய பல பாடல்களை வைரமுத்து என சொல்லிக்கொண்டிருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

’அவள் அப்படித்தான்’ படத்தில் ’உறவுகள் தொடர்கதை’, இளையராஜாவின் 100-வது படமான ‘மூடுபனி’ படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’, பாரதிராஜா முதன்முதலில் நடித்த ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தின் ‘சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’. மகேந்திரனின் இயக்கத்தில் ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’, மணிவண்ணன் கதை வசனத்தில் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ படத்தின் ‘பூங்கதவே தாழ் திறவாய்’, 'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெறாத, பல வருடங்கள் கழித்து இடம்பெற்ற, அப்போதிருந்தே நமக்குப் பரிச்சயமான ‘புத்தம்புது காலை’, இயக்குநர் செந்தில்நாதன் அறிமுகமான விஜயகாந்த், ராதிகாவை வைத்து எடுத்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படத்தின் ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’, ’பூத்துப்பூத்துக் குலுங்குதடி பூவு’, ‘அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’, ‘உன் பார்வையில் ஓராயிரம்’ என்று கங்கை அமரனின் பாட்டுப் பட்டியல் கோடம்பாக்கம் தொடங்கி பண்ணைபுரம் வரை நீளும்!

சாலையில் செல்லும் ஆயிரம் பேரை நிறுத்தி, அவர்களின் செல்போன்களில் உள்ள பாடல்களைத் துழாவினால், இந்தப் பாடல்களில் பாதியாவது இருக்கும். பலரின் ரிங்டோனாகவும் காலர் டியூனாகவும் இருக்கும். என் நண்பர் ஒருவர், தன் மனைவி அழைப்பதை அறிந்துகொள்வதற்கு ‘என் வானிலே ஒரே வெண்ணிலா’வை வைத்திருக்கிறார். அதேபோல், இன்னொருவர் ‘என் இனிய பொன் நிலாவே’ என்று வைத்திருக்கிறார். இதைப் பல வருடங்களாக வைத்திருக்கிறீர்களே... வேறு பாடலை வைக்கக்கூடாதா என்றெல்லாம் பலரும் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், “இந்தப் பாட்டுக்கும் எனக்கும் என் மனைவிக்கும் அப்படியொரு கனெக்‌ஷன் வந்துருச்சு. அதனால மாத்த மனசே வரலீங்க” என்று சிரித்தபடி சொல்லியிருக்கிறார்கள்.

கங்கை அமரனின் மற்றொரு ஆச்சரியம்... கலகலப் பேச்சு. சிரித்த முகம். இருக்கும் இடத்தை கொண்டாட்ட மூடுக்குக் கொண்டுவருவதில் அசகாயசூரர்.

1947-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி பிறந்த கங்கை அமரனுக்கு, 75 வயது. காலையில் போன் செய்து வாழ்த்தினோம். ‘’திருப்பதிலே இருக்கேன். இப்பதான் தரிசனம் முடிச்சிட்டு வந்தேன். பாலாஜியைத் தரிசிச்ச கையோட ராம்ஜிகிட்டேருந்து வாழ்த்து. ரொம்ப நன்றி ரொம்ப நன்றி’’ என்று ஆசீர்வதித்தார்.

‘’கங்கை அமரன் மட்டும் எல்லாத்துறைலயும் நுழையாம, ஏதாவது ஒரு துறைல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணிருந்தார்னா, பெரிய டைரக்டராவோ, பெரிய கவிஞராவோ, பெரிய பாடகராவோ, பெரிய இசையமைப்பாளராவோ ஆகியிருப்பார்னு தோணும் ராம்ஜி சார்’’ இது எனக்குப் பரிச்சயமான மருத்துவர் ஒருவர் என்னிடம் சொன்ன வார்த்தைகள்.

அவரிடம் சொன்னதைத்தான் இங்கேயும் சொல்ல நினைக்கிறேன்.

‘கங்கை வெள்ளம் சொம்புக்குள்ளே அடங்கிவிடாது’ என்று கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியிருப்பார். கண்ணதாசனிடம் உதவியாளராக சிலகாலம் இருந்து, பிறகு இத்தனை துறைகளுக்குள்ளும் புகுந்து, முத்திரையைப் பதித்த கங்கை அமரனின் திறமைகளையும் எந்த சொம்புக்குள்ளேயும் அடைத்துவைத்துவிடமுடியாது!

பல்துறை வித்தகர் கங்கை அமரன் சாருக்கு பவளவிழா வாழ்த்துகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in