புயலை கிளப்பக் காத்திருக்கும் ‘காந்தி கோட்சே யுத்தம்’

புயலை கிளப்பக் காத்திருக்கும் ‘காந்தி கோட்சே யுத்தம்’

கோட்சேவின் குண்டுக்கு பலியாகாது காந்தி உயிர் தப்புகிறார். அதன் பின்னர் அவர் கோட்சேவை சந்திக்கிறார். இப்படியொரு சுவாரசிய கற்பனையை தீவிரமான விவாதங்களுடம் சுமந்து வருகிறது ‘காந்தி கோட்சே: ஏக் யுத்’ என்ற திரைப்படம்.

ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் என, எதிரெதிர் சித்தாந்த துருவங்களுக்கு இடையிலான அரசியல் போர் சூடுபிடித்திருக்கும் சமகாலத்தில் இப்படியொரு அடர்த்தியான கதையுடன் ஒரு திரைப்படம் வருகிறது. சர்ச்சைக்குரிய ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படம் வெளியாகும் தினத்துக்கு மறுநாள், குடியரசு தினமான ஜன.26 அன்று ’காந்தி கோட்சே: ஏக் யுத்’ ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

சுதந்திர வேள்வி கொளுந்து விட்டெரியும் காலத்தில் கதை தொடங்குகிறது. காந்தியின் முன்னெடுப்பும் அதன் எதிர்திசையில், பெரிதும் திரைப்படங்கள் பேச மறந்த வலதுசாரி இந்துத்துவமும் போராக மூள்கின்றன. நிஜ சம்பவமான, காந்தியை நோக்கிய கோட்சேவின் துப்பாக்கி வெடிக்கிறது. ஆனால் நல்வாய்ப்பாக கோட்சேவின் தாக்குதலில், காந்தி உயிர் பிழைக்கிறார் என்பதுடன் கற்பனைக் கதை தொடங்குகிறது.

சிறையில் இருக்கும் கோட்சே அதிர்ச்சி அடைகிறார். அவரை காந்தி நேரில் சந்திக்கிறார். இருவேறு சிந்தாந்தவாதிகள் கருத்துமோதலில் ஈடுபடுகிறார்கள். சிறைக்கு வெளியேயும் காந்திக்கான சவால்கள் காத்திருக்கின்றன. காந்தி - கோட்சே இடையிலான யுத்தமும், சுதந்திர இந்தியாவில் காந்தி எதிர்கொள்ளும் புதிரான சவால்களுமே இந்த திரைப்படத்தின் கதை.

திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்குகிறார். இவரது மகள் தனிஷா சந்தோஷி மற்றும் அனுஜ் சைனி உள்ளிட்டோர் அறிமுகமாகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். சந்தோஷியின் குடும்ப நிறுவனம் தயாரித்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் விநியோகிக்கிறது.

காந்தியாக தீபக் அந்தானி மற்றும் கோட்சேவாக சின்மை மன்ட்லேகர் நடித்துள்ளனர். தாய் வழியில் தமிழ்நாட்டுடன் உறவுடைய, சென்னையில் பிறந்து மும்பையில் கொடி நாட்டிய ராஜ்குமார் சந்தோஷி, பத்தாண்டு இடைவெளியில் இயக்கும் திரைப்படம் என்பதாலும் ’காந்தி கோட்சே’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in