
'வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றால், ‘கப்பலோட்டிய தமிழன்’ என்றால், ‘பகத்சிங்’ என்றால், ‘வாஞ்சிநாதன்’ என்றால், ‘கர்ணன்’ என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வரும் முகம்... சிவாஜிகணேசனுடையது. அதேபோல், ‘ஒளவையார்’ என்றால், ‘நந்தனார்’ என்றால், ‘கவுந்தியடிகள்’ என்றால் நம் மனக்கண்ணுக்கு எதிரே வந்து நிற்பவர்... கே.பி.சுந்தராம்பாள்தான்!
ஒரு நடிகையாக நம்மை பத்துமடங்கு ஈர்த்தாரென்றால் பாடகியாக நம்மை முழுவதுமாக ஈர்த்துக்கொண்ட கணீர்க்குரல் நாயகி அவர். தமிழ்த்திரையுலகில் இவருக்கு முன்பும், இவருக்குப் பின்பும் இவருக்கு இணையானவர்கள் எவருமில்லை என்பதே கே.பி.எஸ். என்று அழைக்கப்படும் சுந்தராம்பாளின் வெற்றிச் சரித்திரம்.
கொடுமுடி. அதுதான் அவரின் சொந்த ஊர். கோயிலுக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் அருகில் இருந்தது வீடு. இரண்டு இடங்கள்தான் கொடுமுடியில் அதிகம் அவர் புழங்கிய இடமாக இருக்கும். சிறுவயதிலிருந்தே கோயிலில் சாமி கும்பிடுவதற்காகவும் விளையாடுவதற்காகவும் போய்க்கொண்டிருந்த அவர், அங்கு வரும் பக்தர்கள் சிலர் பாடுவதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்தார். நாமும் பாடினால் என்ன... என்று அவருக்குத் தோன்றியது. மழலைக்குரலில் சுந்தராம்பாள் பாட... ‘அட...’ என்று கேட்டவர்கள் வியந்தார்கள். ‘நம்ம சுந்தரம் நல்லாப் பாடுறா தெரியுமா’ என்று ஊரெங்கும் இதே பேச்சாக இருந்தது. யார் பார்த்தாலும் “ஒரு பாட்டு பாடு சுந்தரம்” என்பார்கள். அவரும் கூச்சப்படாமல், நாணிக்கோணி நிற்காமல், கணீரெனப் பாட ஆரம்பித்துவிடுவார்.
கரூர் தாத்தாவின் ஊர். கொடுமுடிக்கும் கரூருக்கும் தூரம் அதிகமில்லை. அடிக்கடி ரயிலில் கரூருக்குப் போவார்கள். அப்படி தன் தாய்மாமாவுடன் சிறுமி சுந்தராம்பாள் ரயிலில் செல்ல, கொடுமுடிக்காரர்கள் சிலர் உடன் பயணிக்க, “பயணத்துக்கு இதமா இருக்கும்... நீ பாடேன் சுந்தரம்” என்று கேட்க, தடதடக்கும் ரயில் சத்தத்தைக் கடந்தும் சுந்தராம்பாளின் கணீர்க்குரலில் அந்த ரயில்பெட்டியில் இருந்தவர்கள் அப்படியே கூடிநின்று கேட்டார்கள். மெய்மறந்துபோனார்கள்.
அந்தப் பெட்டியில் இருந்த வேலு நாயர் என்பவர், குரலைக் கேட்டு சிலிர்த்துப் போனார். சுந்தராம்பாளின் தாய்மாமாவுடன் பேசினார்.
“நாடகத்தில் நடிக்க வைக்கிறேன்” என்றார். சம்மதித்தார்கள். ‘நல்லதங்காள்’ நாடகத்தில் நல்லதங்காளின் மூத்தமகனாக, ஞானசேகரனாக நடித்தார். ஆமாம்... அதையடுத்து ஏகப்பட்ட நாடகங்களில் ஆண் வேடமிட்டு நடித்தார் கே.பி.சுந்தராம்பாள்.
1908-ம் ஆண்டு பிறந்தார் கே.பி.சுந்தராம்பாள். கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் என்பதுதான் பின்னாளில் கே.பி.சுந்தராம்பாள் என்றானது. ஒரு பக்கம் தமிழிசையில் பாடிக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் நாடகங்களில் நடித்து வந்தார். நடுவே தேசப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். முக்கியமாக, ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார்.
சிறுவயதில், வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பம் அவர்களுடையது. திருச்செந்தூர் கோயிலுக்குச் சாமி கும்பிட அம்மா அழைத்துச் சென்றுவிட்டு, அங்கேயே சிறுமி சுந்தராம்பாளை விட்டுவிட்டார். பிறகு அங்கே இருந்த குருக்கள் ஒருவர் ஆதரவு கொடுத்தார். நாடகக்குழுவினர் அவரின் பாடலைக் கேட்டார்கள். சேர்த்துக் கொண்டார்கள். ஆனாலும் ஏனோ எதுவும் பிடிபடவில்லை. அங்கிருந்து கிளம்பினார். எங்கே போவதென்று தெரியவில்லை. நாடகக் குழுவினர் தேடினார்கள். நாடகக் கம்பெனி முதலாளி மீண்டும் சுந்தராம்பாளை அழைத்து வந்தார். “உனக்கு மாதம் ஒருபவுன் தங்கக்காசு தருகிறேன்” என்று முதலாளி சொல்லி அழைத்துவந்தார். ‘பவளக்கொடி’ முதலான நாடகங்களில் நடித்தார். கிடைக்கும் தங்கக்காசை யாரிடம் கொடுத்துவைப்பது என்று தெரியவில்லை. நாடகக் கம்பெனி முதலாளி மனைவியிடம் கொடுத்துச் சேமித்தார். சில வருடங்கள் கழித்து, பூப்படைந்தார். யாருக்குச் சொல்வது, எப்படிச் சொல்வது என்பது தெரியாமல், முதலாளியும் அவர் குடும்பமும் குழுவினரும் சேர்ந்து, பூப்புனிதநீராட்டு விழா நடத்த, அங்கேயே அவர்களுடனேயே வாழ்ந்து வளர்ந்தார் சுந்தராம்பாள்.
திருநெல்வேலியில் நாடகம். யாரோ பார்த்துவிட்டு கொடுமுடிக்குச் சென்று அம்மாவிடம் சொல்ல, பதறியடித்துக்கொண்டு நெல்லைக்கு வந்தார் அம்மா. மகளைப் பார்த்தார். அதுவரை சேமித்து வைத்திருந்த 12 தங்கக்காசுகளை முதலாளியின் மனைவி கொடுக்க, அம்மாவும் மகளும் இணைந்தார்கள்.
மீண்டும் நாடகங்கள். கலைநிகழ்ச்சிகள். காங்கிரஸ் கட்சிக்காகப் பாடல்கள் என பிஸியாக இருந்தார் சுந்தராம்பாள். தமிழகத்தில் பல ஊர்களுக்கும் சென்று நடித்தார். இலங்கையின் கொழும்புக்குச் சென்றும் நாடகங்களில் நடித்தார்.
அப்போது நடிகர் கிட்டப்பாவும் கொழும்பில் நாடகம் போடுவதற்காக வந்தார். இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அப்போது காதல் மலர்ந்தது. 1926-ம் ஆண்டு ‘வள்ளி திருமணம்’ நாடகத்தில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். பின்னர் திருமணமும் செய்துகொண்டார்கள். சுந்தராம்பாள் நடிக்கிறாரென்றால், அவரின் நடிப்புக்காகவும் பாடல்களைக் கேட்பதற்காகவும் பெருங்கூட்டம் கூடியது!
’கோவலன்’, ‘ஞானசெளந்தரி’ முதலான நாடகங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. 33-ம் ஆண்டு கிட்டப்பா காலமானார். அதன் பின்னர் வெறுமை சூழ தனித்திருந்தார். நடிக்க அழைப்பு வந்துகொண்டே இருந்தது. “இனி நடிப்பேன். ஆனால் யாருடனும் ஜோடி சேர மாட்டேன்” என உறுதிகொண்டார் சுந்தராம்பாள். அதன்படி இறுதிவரை, எவருக்கும் ஜோடியாக நடிக்கவில்லை சுந்தராம்பாள்! அதேபோல் இன்னொரு விஷயத்திலும் உறுதியாக இருந்தார். கிட்டப்பா இறந்த பிறகு பொதுவெளிகளில், வெள்ளைப்புடவை அணிந்தபடியே வலம் வந்தார்!
சுந்தராம்பாள் குரல்... இளம் வயதிலேயே தனித்துவம் மிக்கதாகத்தான் இருந்தது. கணீரென இருந்தது. வெண்கலக் குரல் போல் இருந்தது. உச்சஸ்தாயியில் இருந்தது. கேட்டவர்கள், சிலிர்த்து உலகையே மறக்கும் வகையில் இருந்தது. நாடகங்களுக்கு ரிசர்வேஷன் செய்யப்பட்டு, ரிசர்வேஷனிலேயே ‘ஹவுஸ்புல்’ போர்டு போட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான், ‘நந்தனார்’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நந்தன் எனும் ஆண் கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருப்பார் சுந்தராம்பாள். படம் பார்த்தவர்கள் அவரின் நடிப்பைக் கண்டு கண்ணீர்விட்டார்கள். பாடல்களைக் கேட்டு சொக்கிப் போனார்கள்.
சுந்தராம்பாள் நடிப்பில், உச்சம் தொட்டார். ’இந்த மாதிரி கேரக்டர்தான் பண்ணமுடியும்’ என்று முத்திரை குத்தப்படுகிற உலகில், பால பார்ட், ஸ்த்ரீபார்ட், ராஜபார்ட் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து, புகழ்பெற்றார். ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அந்தக் காலத்திலேயே முப்பது லட்ச ரூபாய் செலவில், ‘ஒளவையார்’ படமெடுத்தார். சுந்தராம்பாள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என உறுதியாக இருந்தார். ஆனால், அவருக்கு நேரமே இல்லை அப்போது. விஷயத்தைச் சொல்ல, லட்ச ரூபாய்க்கான செக் உடனே கொடுத்து புக் செய்தார் வாசன். அதுவரை எந்த நடிகருக்கும் நடிகைக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்ததில்லை!
‘ஒளவையார்’ படத்தில் ஒளவைக் கிழவியாகவே வாழ்ந்தார் சுந்தராம்பாள். உடல் மொழியாலும் பேசும் மொழியாலும் ஒளவையாகவே மாறியிருந்தார். படம் பார்த்துவிட்டு, ஒளவையார் என்பவர் இப்படித்தான் இருப்பார் போல என்று மக்கள் நம்பினார்கள். கூட்டம் கூட்டமாக வந்து, திரும்பத்திரும்பப் பார்த்தார்கள். கே.பி.எஸ். என்று எல்லோரும் சொல்லிவந்த நிலையில், ‘ஒளவையார்’ என்றே போகுமிடங்களிலெல்லாம் அழைத்தார்கள்.
ஐம்பதுகளில் இவரின் கச்சேரி ஒருபக்கம், தேசப்பணிக்காக பாடல்கள் பாடுவது ஒருபக்கம், பக்திக்காக இசைக்கச்சேரி பாடுவது இன்னொரு பக்கம், நடிப்பது ஒருபக்கம் என்று தொடர்ந்து தன் பங்களிப்பில் முழுமையாக ஈடுபட்டார்.
இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘திருவிளையாடல்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மீண்டும் ‘ஒளவையார்’ கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில், ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை ஒரே கதாபாத்திரத்தை, ‘ஒளவையார்’ மாதிரியான புராணக் கதாபாத்திரத்தை இரண்டாவது முறை நடித்தது என்பது பெரிய அளவில் பேசப்பட்டது. காவி உடையும் கையில் கழியும் நெற்றியில் விபூதிப்பட்டையும் கழுத்தில் ருத்திராட்சமும் அணிந்து, பக்திப் பாடல்களை அவர் பாட, சிலிர்த்து மெய்ம்மறந்தார்கள் ரசிகர்கள்.
’நந்தனார்’ படத்தில் மொத்தம் 41 பாடல்கள். அதில் சுந்தராம்பாள் 19 பாடல்கள் பாடினார். அதேபோல், ’மணிமேகலை’ படத்தில் 11 பாடல்கள் பாடினார். 53-ம் ஆண்டு வந்த ‘ஒளவையார்’ படத்தில் மொத்தமுள்ள 48 பாடல்களில் 30 பாடல்களை சுந்தராம்பாள் பாடினார். மகாத்மா காந்தி மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார். நேரு மீதும் அப்படித்தான் இருந்தார். காங்கிரஸ் பேரியக்கத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். கலைஞர் கதை, வசனம் எழுதிய ‘பூம்புகார்’ படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது, ஆத்திக நாத்திக வித்தியாசங்களையெல்லாம் பார்க்காமல், ‘கவுந்தியடிகள்’ எனும் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இவருடைய பக்தி இசைப்பாடல்களைக் கேட்டுத்தான் அந்தக் காலத்தில் பக்தி செழித்தது. மகாத்மா பற்றியும் மோதிலால் நேரு பற்றியும் ஜவஹர்லால் நேரு பற்றியும் இவர் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான் காங்கிரஸ் வளர்ந்தது.
மகாத்மா காந்தி ஒருமுறை கொடுமுடிக்கு வந்தபோது, சுந்தராம்பாள் வீட்டில் உணவருந்தினார். தங்கத்தட்டில் உணவு பரிமாறினார் சுந்தராம்பாள். சாப்பிட்டு முடித்ததும், “சாப்பாடு மட்டும்தானா எனக்கு... தட்டு எனக்கில்லையா?” என்று மகாத்மா கேட்க, “இதோ... தருகிறேன்” என்று தங்கத்தட்டை வழங்க, அந்த தட்டை ஏலம் விட்டு, அதில் கிடைத்த தொகையை காங்கிரஸ் கட்சிக்கு நிதியாக வழங்கினார் காந்தியடிகள்.
’மகாகவி காளிதாஸ்’, ‘கந்தன் கருணை’, ’துணைவன்’, ‘உயிர் மேல் ஆசை’, ’சக்தி லீலை’, ‘காரைக்கால் அம்மையார்’, ‘திருமலை தெய்வம்’ முதலான படங்களில் நடித்தார் சுந்தராம்பாள். அவர் நடித்தால் அவருக்காகவே பாடல்கள் வைக்கப்பட்டன. அவர் பாடினால், அதற்காகவே படங்கள் ஓடின.
‘ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ’ என்று இன்று வரை ஆலயங்களில் இவரின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ‘ஞானப்பழத்தைப் பிழிந்து’ என்ற பாட்டுக்கு உருகாதவர்களே இல்லை. ‘பழம் நீயப்பா...’ என்ற பாடலைக் கேட்டு மெய்சிலிர்க்காதவர்கள் இருக்கிறார்களா என்ன? ’வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’ என்ற பாடலைக் கேட்டு கோவலன் - கண்ணகி கதையைக் கடந்தும், தங்கள் வாழ்க்கைக்குள் பொருத்திக் கொண்டு அழுத ரசிகர்கள் தலைமுறை கடந்தும் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
சுந்தராம்பாள் உச்சஸ்தாயி குரலுக்குச் சொந்தக்காரர். பெண்களின் குரலுக்குக் கட்டுக்குள் அடங்காத ஸ்ருதியும் லயமும் கொண்டவர் இவர். தனித்துவம் மிக்க தன் குரலால், மொத்த தமிழகத்தை கட்டிப்போட்ட சாதனைப் பாடகி.
1908-ல் பிறந்த கே.பி.சுந்தராம்பாள், 1980-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி காலமானார். மறைந்து 42 ஆண்டுகளாகி விட்டன. இன்னும் நூறாண்டுகளானாலும் கே.பி.எஸ். என்று அழைக்கப்படும் சுந்தராம்பாளின் குரலுக்கும் பாடல்களுக்கும் மறைவே இல்லை. இதைத்தான் மரணமில்லாப் பெருவாழ்வு என்று சொல்கிறார்களோ என்னவோ!