‘காந்தக் கண்ணழகி’ டி.ஆர்.ராஜகுமாரி!

சினிமா தியேட்டர் கட்டிய முதல் நடிகை
’காந்தக் கண்ணழகி’ டி.ஆர்.ராஜகுமாரி
’காந்தக் கண்ணழகி’ டி.ஆர்.ராஜகுமாரி

’மன்மதலீலையை வென்றார் உண்டோ?’ என்ற பாடல், தலைமுறை பல கடந்தபோதும் இன்றைக்கும் பலராலும் முணுமுணுக்கப்படுகிறது. இந்தப் பாடலை தியாகராஜ பாகவதர் யாரைப் பார்த்துப் பாடினார் என்பதுதான் விஷயமே! ‘உன்னைப் பார்த்துவிட்டால், உன் அழகைக் கண்டுவிட்டால், எவராலும் வெல்ல முடியாது’ என்கிற பொருள்படுகிற பாடலைப் பாட வேண்டுமென்றால், அங்கே, அந்த நாயகி, எப்பேர்ப்பட்ட அழகியாக இருக்க வேண்டும்? பேரழகியாக அல்லவா இருக்க வேண்டும்? தமிழ் சினிமாவின் அப்பேர்ப்பட்ட பேரழகியாக முதலில் பட்டம் பெற்றவர்... டி.ஆர்.ராஜகுமாரி.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் என்று பேரெடுத்த, தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோருடன் ஜோடியாக நடித்து, அந்தக் காலத்திலேயே, ‘கனவுக்கன்னி’ என்கிற பட்டத்தை ரசிகர்களால் பெற்றவர் ராஜகுமாரி.

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜாயியின் அப்பா பெயர் ராதாகிருஷ்ணன். அம்மா ரங்கநாயகி. குடும்பத்தில் ராஜாயிதான் மூத்த மகள். இவரின் பாட்டி மிகப்பெரிய பாடகி. தஞ்சாவூர் குசலாம்பாள் என்றால், அந்தக் காலத்தில் வெகு பிரபலம். 1922 மே மாதம் 5-ம் தேதி பிறந்த ராஜாயி, சிறுவயதிலேயே இசையும் நடனமுமாக வளர்ந்தார். இளம் வயதிலேயே பெற்றோரைப் பறிகொடுத்த நிலையில், குடும்பத்தின் மூத்தவரான ராஜாயி தலையில் எல்லோரையும் காப்பாற்றுகிற பொறுப்பு வந்தது.

அந்தச் சமயத்தில்தான் 1939-ம் ஆண்டு டெக்கான் சினிடோன் தயாரிப்பில், ‘குமார குலோத்துங்கன்’ என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து ‘மந்தாரவதி’ என்ற படத்தில் நடித்தார். பிறகு, ‘சூர்யபுத்ரி’ என்ற படத்தில் நடித்தார்.

மூன்று படங்களில் நடித்து என்ன பயன்? மூன்றுமே படுதோல்வியைச் சந்தித்தன. குடும்ப பாரம் ஒருபக்கம், ஜெயிக்கவில்லையே என்கிற மனபாரம் இன்னொரு பக்கம். வேதனையில் குமைந்துபோனார் ராஜாயி. இந்த ராஜாயி பெயரை சினிமாவுக்காக மாற்றினர். அந்தப் பெயர்தான் ராஜகுமாரி. டி.ஆர்.ராஜகுமாரி.

தமிழ்த் திரையுலகில் பல சாதனைகளையும் புதுமைகளையும் செய்தவர் என்று அந்தக் காலத்திலேயே பேரும்புகழும் சம்பாதித்தவர் கே.சுப்ரமணியம். பத்மா சுப்ரமணியத்தின் தந்தை இவர். யதேச்சையாக அவரின் கண்ணில் ராஜகுமாரி பட்டார். தன்னுடைய படத்தின் நாயகி இவளே என முடிவு செய்தார். ‘கச்சதேவயானி’ படத்தின் நாயகியாக்கினார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தில்தான், நான்காவது படத்தில்தான் நானிலம் போற்றும் நாயகியாக, எல்லோரையும் தன் அழகாலும் வசீகரச் சிரிப்பாலும் கவர்ந்திழுத்தார் ராஜகுமாரி.

டி.ஆர்.ராஜகுமாரி
டி.ஆர்.ராஜகுமாரி

ஒரு தீபாவளிக்கு வெளியாகி, மூன்று தீபாவளிகள் வரை தமிழ் சினிமாவில் முதல் ரெக்கார்டு சாதனை செய்த படம் என்று ‘ஹரிதாஸ்’ படத்தை இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் படத்தின் நாயகியும் ராஜகுமாரிதான். அடுத்து பாகவதருடன் நடித்த ‘சிவகவி’யும் இமாலய வெற்றியைக் கொடுத்தது. பி.யு.சின்னப்பாவுடன் நடித்த ’மனோன்மணி’ படத்தில், ராஜகுமாரியின் நடையையும் அலட்சியமாகப் பார்க்கிற பார்வைக்கும் மயங்கி, திரும்பத்திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள்.

இன்றைக்கு பிரம்மாண்டம் என்பது எளிமையான வார்த்தையாகிவிட்டது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடன் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது.

ஆனால், தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டப் படமாக வந்த ஜெமினியின் ‘சந்திரலேகா’வில் ராஜகுமாரியின் நடிப்பு ரொம்பவே பேசப்பட்டது.

நாளுக்குநாள் என்பது போல, படத்துக்குப் படம், ராஜகுமாரிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது. இந்தப் படத்தில் இவரின் ‘ஜிப்ஸி’ நடனமும் இறுதிக்காட்சியில் ஏராளமான டிரம்ஸுகள் இருக்க ஆடியதையும் கண்டு வியந்துபோனார்கள். இதை இந்தியில் எடுக்க, அங்கேயும் ராஜகுமாரிதான் நாயகி.

டி.ஆர்.ராஜகுமாரி
டி.ஆர்.ராஜகுமாரி

கலைஞரின் வசனத்தில், இயக்குநர் எல்.வி.பிரசாத் இயக்கத்தில், ‘பொறுத்தது போதும் மனோகரா’ என்ற அனல் தெறிக்கும் வசனங்களும் காட்சிகளும் நடிப்பும் கொண்ட ‘மனோகரா’ படத்தில் சிவாஜியையும் கண்ணாம்பாளையும் மட்டுமல்ல... ‘வசந்தசேனை’யாக நடித்த டி.ஆர்.ராஜகுமாரியையும் மறக்கவே முடியாது.

தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். எதுகுறித்தும் யோசிக்காமல் நடித்துக்கொண்டே இருந்தார். தன்னைப் பற்றி யோசிக்காமல், தன் ஆசாபாசங்கள் குறித்து நினைக்காமல் நடித்துக்கொண்டே இருந்தார். இப்படித்தான் தன் தம்பியை ஆளாக்கினார். தானே தயாரிப்பாளரானார். தம்பியை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஆக்கினார். அந்தத் தம்பியும் அக்காவின் பேர் சொல்லும்படி ஏராளமான படங்களை, இயக்கினார். அவர் டி.ஆர்.ராமண்ணா.

‘ஆர்.ஆர்.பிக்சர்ஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி படங்கள் தயாரித்தார். ‘ஆர்.ஆர்.’ என்றால், ‘ராஜகுமாரி, ராமண்ணா’ என்று அக்கா தம்பியின் ஆரம்ப ஆங்கிலச் சொற்கள்.

சிவாஜியுடன் ‘தங்கப்பதுமை’ படத்தில் நடித்தார். எம்ஜிஆருடன் ’பெரிய இடத்துப் பெண்’ முதலான படங்களில் நடித்தார். ’குலேபகாவலி’யில் நடித்தார். யாருடன் நடித்தாலும் ராஜகுமாரியின் கண்கள் மட்டுமே நடித்தாலே போதும். நூறு நடிகையரின் நடிப்புக்கு இணையானவை ராஜகுமாரியின் கண்கள்.

அந்த இரண்டு கண்களும்தான் மொத்த தமிழ் சினிமாவையும் ரசிகப்பெருமக்களையும் கட்டியாண்டது. 22 ரீல் கொண்ட படத்தில், மூன்று அல்லது மூன்றரை மணி நேரம் ஓடுகின்ற படத்தில், ராஜகுமாரியையே வைத்த கண் வாங்காமல் பார்த்த ரசிகத் தாத்தாக்களெல்லாம் இப்போது இருந்தால், இன்னமும் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள். ’அந்தக் காலத்துல... ‘ என்று ராஜகுமாரியின் பெருமையைச் சொல்லிக்கொண்டே மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள்.

டி.ஆர்.மகாலிங்கத்துடன் இவர் நடித்த படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அவருடன் இணைந்து, ’வானுலாவும் தாரை என் இதயகீதமே’ என்ற பாடலைச் சொந்தக் குரலில் பாடவும் செய்திருந்தார். ‘மனோகரா’ படத்தில் வில்லியாக இவர் வருகின்ற ஒவ்வொரு காட்சிக்கும் பார்வைக்கும் அலட்சியமான சிரிப்புக்கும் ஸ்டைலான நடைக்கும் என கைதட்டிக்கொண்டே ரசித்துப் பார்த்தார்கள் தமிழக மக்கள்.

எம்ஜிஆர், சிவாஜி என இருபெரும் இமயங்கள் இணைந்து நடித்த ஒரேயொரு படம்’கூண்டுக்கிளி’ இந்தப் படத்தை அக்காவும் தம்பியும் தயாரிக்க, தம்பி டி.ஆர்.ராமண்ணாதான் இயக்கினார். டி.ஆர்.ராஜகுமாரி, தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி என்கிற சாதனையுடன் எம்ஜிஆர் சிவாஜியை இணைத்துவைத்து படமெடுத்தவர் என்கிற சாதனைக்கும் உரியவரானார்.

அதுமட்டுமா? தமிழ்த் திரையுலகிலேயே ஒரு நடிகை தியேட்டர் கட்டினாரென்றால், அது டி.ஆர்.ராஜகுமாரிதான். சென்னை பாண்டிபஜாரில் இருந்த தியேட்டரை, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் திறந்துவைத்தார். பின்னர் பல வருடங்களுக்கு முன்பு அந்தத் தியேட்டர் மூடப்பட்டது. ஆனாலும் கூட, இன்றைக்கும் பாண்டிபஜாரில் தியேட்டர் இருந்த இடத்தை, வேறு கட்டிடம் வந்துவிட்டாலும் கூட, ‘ராஜகுமாரி தியேட்டர்’ என்று அழைப்பவர்களும் வழி சொல்லுபவர்களும் உண்டு.

கவியரசர் கண்ணதாசன் தயாரிக்க, எஸ்.எஸ்.ஆர்., தேவிகா, மாஸ்டர் கமல் நடிக்க, எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட் பாடல்களாக அமைந்த ‘வானம்பாடி’ திரைப்படம் 1963-ம் ஆண்டில் வெளியானது. துதான் ராஜகுமாரி நடித்த கடைசிப்படம். 1999 செப்டம்பர் மாதம் 20-ம் தேதி, தனது 77-வது வயதில் ராஜகுமாரி மறைந்தார்.

1922-ல் பிறந்த டி.ஆர்.ராஜகுமாரிக்கு இது நூற்றாண்டு வருடம். இன்னும் எத்தனை நூறாண்டுகளானாலும் டி.ஆர்.ராஜகுமாரி எனும் சிறந்த நடிகையை, போதைக் கண்களில் ரசிகர்களைச் சுண்டி இழுத்து அசத்திய, தமிழ் சினிமாவின் ‘முதல் கனவுக்கன்னி’யை, ‘காந்தக்கண்ணழகி’யை தமிழ் சினிமா சரித்திரமும் ரசிகர்களும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in