நண்பர் சிம்பு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்: 'மஹா' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஹன்சிகா நெகிழ்ச்சி!

நண்பர் சிம்பு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்: 'மஹா' திரைப்பட இசை  வெளியீட்டு விழாவில் ஹன்சிகா நெகிழ்ச்சி!

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் மற்றும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்ஸ் சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்சிகா
மோத்வானி நடிப்பில் உருவான படம் ‘மஹா’. இது ஹன்சிகாவின் 50-வது படமாகும்.

இயக்குநர் ஜமீல் இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ஶ்ரீகாந்த் உள்பட பலர் நடிப்பில் பரபரப்பு திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் சீனுராமசாமி பேசுகையில், “படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தைகளுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது. இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது. ஹன்சிகாவின் நடிப்பு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேசுகையில், “ஹன்சிகா பிரமாதமாக நடித்துள்ளார். படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது, படம் புதுமையாக இருப்பது தெரிகிறது” என்று கூறினார்.

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில்,” சினிமாவின் மேல் பெரிய காதல் கொண்டவர் மதியழகன். அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் டிரைலர் எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது. ஹன்சிகா இந்த படத்திற்காக முழு அர்பணிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளருடைய பணி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நடிகை ஹன்சிகா பேசுகையில்,” ‘மஹா’ எனது 50-வது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50-வது படமாக 'மஹா' திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படத்திற்கு உங்களுக்கு ஆதரவு தேவை” என்றார்.

நடிகர் தம்பி ராமையா, படத்தின் தயாரிப்பாளர் மதியழகன், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஆரி, நடிகர் கருணாகரன், கலை இயக்குனர் அப்பு, ஒளிப்பதிவாளர் லக்‌ஷ்மணன் உள்பட பலர் பேசினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in