முடிவடைந்தது சூர்யா - பாலா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு!

முடிவடைந்தது சூர்யா - பாலா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு!

நடிகர் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவை பாலா இயக்கிய ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்கள். அதற்கு முன்புவரை பெரிதாக சோபிக்காத சூர்யா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகராக முத்திரை பதித்தது பாலாவுடன் இணைந்த பின்னர்தான். இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றுவது எப்போது என கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதைப் பூர்த்திசெய்யும் வகையில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணியாற்றிவருகிறார்கள்.

இந்தப் படம் குறித்த அறிவிப்பை, கடந்த அக்டோபர் 28-ம் தேதி, தனது தந்தை சிவக்குமாரின் பிறந்தநாள் அன்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். ‘என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்து, எனக்குப் புதிய உலகை அறிமுகம் செய்து அடையாளத்தைக் கொடுத்தவர். 20 வருடங்களுக்குப் பிறகு அதே ஆர்வத்துடன் அவர் முன் இருக்கிறேன். அப்பாவின் ஆசியுடன் பாலா அண்ணனுடன் இந்தப் பயணம்’ என அதில் சூர்யா நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் மாதம் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு அதிகாரபூர்வமாக படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கியது.

சூர்யாவின் 41-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் கன்னியாகுமரியில் 34 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மொத்தம் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் படப்பிடிப்பிற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகின்றன. படத்தின் இந்த அப்டேட்டை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாலா படத்திற்கு பிறகு சூர்யா இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ , ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கில் சிறப்புத் தோற்றம், அந்தப் படத்தின் தயாரிப்பு, மீண்டும் தமிழில் சுதா கொங்கராவின் இயக்கத்திலேயே இன்னொரு படம், ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமாருடன் ஒரு படம், மீண்டும் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேலுடன் இன்னொரு படம் சூர்யா பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் பாலாவுடனான அவரது படம் விரைவில் வெளிவரும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in