`லவ் டுடே’, ‘காந்தாரா’ போன்ற படங்களை பாலிவுட்டிலும் எதிர்பார்க்கிறார்கள்- நடிகர் நட்ராஜ்!

`லவ் டுடே’, ‘காந்தாரா’ போன்ற படங்களை பாலிவுட்டிலும் எதிர்பார்க்கிறார்கள்- நடிகர் நட்ராஜ்!

‘லவ் டுடே’, ‘காந்தாரா’ போன்றப் படங்களை பாலிவுட் ரசிகர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் காமதேனு யூடியூப் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

கோலிவுட் திறமைகளை பாலிவுட் நிராகரிக்கிறது என்ற ரீதியிலான பல குற்றச்சாட்டுகள் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பல பிரபலங்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. கோலிவுட்டில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ். இந்த கேள்வியை அவரிடம் முன் வைத்தோம். “நான் அப்படி கருதவில்லை. இப்போதும் எனக்கு மாதம் பிறந்தால் இரண்டு படங்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. திறமையானவர்கள் எங்கிருந்தாலும் நிச்சயம் அவர்களுக்கு அங்கீகாரம் உண்டு.

ஏ.ஆர். ரஹ்மான், கமல்ஹாசன் போன்ற பெரிய ஆட்கள் சொல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பல பார்வைகள் உண்டு. கமல் போன்ற பெரிய ஆட்கள் தங்கள் சம்பாதித்தையே சினிமாவில் கொட்டி தங்களுடைய திறமையையும் பார்வையையும் பெரிதாக்குவார்கள்.

அது பாலிவுட் கலாச்சாரத்திற்கு பொருந்தாமல் போயிருக்கலாம். இப்படி பல காரணங்கள் உண்டு. விஜய்சேதுபதி, சமந்தா என பல திறமைகள் இப்போது பாலிவுட்டில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

சமீபத்தில் பான் இந்தியா என்ற டேக்குடன் வந்த பல பாலிவுட் படங்கள் தோல்வியையேத் தழுவியது. ஆனால், தென்னிந்தியாவில் இருந்து வெளியாகி வெற்றிப் பெற்ற பல படங்கள் குறித்தும் கேட்டேன், “’காந்தாரா’, ‘கேஜிஎஃப்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றியடைந்த பான் இந்தியா திரைப்படங்கள் அந்தந்த மண்ணிற்கு ஏற்றதுபோல அமைந்திருந்தது.

அதை இப்போது உலகம் முழுவதும் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்திப் படங்களில் ஒரு காலத்தில் சினிமாட்டிக்காக இருந்தது. அது இனிமேல் மாற ஆரம்பித்துவிட்டது. அவர்களும் நம் கோலிவுட் திறமைகளையும் பார்வையாளர்களையும் வியந்து பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி அங்கும் ‘காந்தாரா’, ‘லவ் டுடே’ போன்ற படங்களைப் போல எடுப்பார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in