
நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் ’பரோஸ்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
பிரபல நடிகர் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ’பரோஸ்’. போர்ச்சுகல், ஸ்பெய்ன், ஆப்பிரிக்கா மற்றும் இந்திய நாடுகளின் கடல் வாணிபம் நடைபெற்ற வரலாற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. போர்ச்சுகீசிய ஆய்வாளர் வாஸ்கோட காமாவின் புதையல்களை வைத்திருக்கும் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையை, இந்தியாவின் முதல் 3டி படமான ’மைடியர் குட்டிச்சாத்தானை’ இயக்கிய ஜிஜோ புன்னூஸ் எழுதியுள்ளார்.
இந்தப் படம் 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கரோனா காரணமாக இதில் நடிக்க இருந்த பிருத்விராஜ் உட்பட பலர் மாற்றப்பட்டனர். இதில் குரு சோமசுந்தரம், மிரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா (Paz Vega), ரபேல் அமர்கோ உட்பட பலர் நடிக்கின்றனர். ரபேல் அமர்கோ, வாஸ்கோட கமாவாக நடிக்கிறார். நடிகை பாஸ் வேகா, செக்ஸ் அண்ட் லூசியா, ஆல் ரோட்ஸ் லீட்ஸ் டு ஹெவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளனர்.
அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் பரோஸ், அதிக பட்ஜெட்டில் உருவாகும் மலையாள திரைப்படம் என்கிறார்கள். இது பான் இந்தியா முறையில் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவடைந்துள்ளது. இதை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.