
திரைப்படத் தயாரிப்பாளரும் ஏக்நாத் வீடியோஸ் உரிமையாளருமான ஏக்நாத் காலமானார்.
சென்னையில் ஏக்நாத் வீடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஏக்நாத். வீடியோ பிரபலமாக இருந்த காலகட்டத்தில் இந்த நிறுவனமும் புகழ்பெற்றிருந்தது. இவர், ஏக்நாத் மூவி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் சில படங்களைத் தயாரித்துள்ளார்.
1991-ம் ஆண்டு கே.பாக்யராஜ் எழுதிய இயக்கி, இசை அமைத்த ’பவுனு பவுனுதான்’என்ற படத்தைத் தயாரித்தார். இதில், ரோகிணி நாயகியாக நடித்திருந்தார். இதையடுத்து, ராம்கி, கனகா, ஜனகராஜ் உட்பட பலர் நடித்த ’வெள்ளையத்தேவன்’, கஸ்தூரி ராஜா இயக்கிய ’மெளன மொழி’ உட்பட 10 படங்களை தயாரித்துள்ளார். கமல்ஹாசனின் இந்திரன் சந்திரன் உட்பட பல்வேறு படங்களை டப்பிங் செய்தும் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக சென்னை அருகே திருமால்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 78. அவருடைய இறுதிச் சடங்கு புதன்கிழமை நடக்கிறது.
மறைந்த ஏக்நாத்திற்கு கவுரி என்ற மனைவியும் சுரேஷ் என்ற மகன், அனுராதா என்ற மகள் உள்ளனர். அனுராதா அமெரிக்காவில் இருப்பதால் அவர் வருகைக்குப் பின் ஏக்நாத்தின் இறுதிச் சடங்கு நடைபெற இருக்கிறது.