
சினிமா விநியோகஸ்தர் அலுவலகத்தில் புகுந்து கத்தி முனையில் இரண்டு ஊழியர்களைக் கடத்திச் சென்று 70 ஆயிரம் பறித்துச் சென்றதாக 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் மதுராஜ் (39). இவர் விருகம்பாக்கம் ஏவி.எம் அவென்யூ 2வது தெருவில் கடந்த 2 மாதங்களாக ஏடிஎம் என்ற பெயரில் சினிமா விநியோகம் செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அக்.14ம் தேதி, நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ’ஷூ’ திரைப்படத்தின் விநியோகம் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் உரிமத்திற்காக தயாரிப்பாளர் கார்த்திக் என்பவரிடம் 1.10 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்து அதில் 17லட்சம் ரூபாயை முதல் தவணையாக மதுராஜ் கொடுத்துள்ளார். மீதம் தரவேண்டிய தொகையை இரண்டு தவணைகளாகக் கொடுத்து விடுவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் மனைவியின் பிரசவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி மதுராஜ் மதுரை மாவட்டத்திற்கு அவசரமாகச் சென்றதால் பணம் கொடுக்க காலதாமதமானதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி தயாரிப்பாளர் கார்த்திக், அடியாட்கள் 10 பேருடன் சென்று மதுராஜின் அலுவலகத்தில் புகுந்து ஊழியர்கள் கோபி மற்றும் பென்சர் ஆகிய இருவரையும் தாக்கி கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்றனர்.
பின்னர் தாம்பரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்துவைத்து பணம் கேட்டு மிரட்டி, அவர்களது செல்போன்களைப் பறித்ததுடன் ஏடிஎம் கார்டிலிருந்து 70 ஆயிரம் ரூபாய் எடுத்துகொண்டனர். மேலும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், கொன்று விடுவோம் என மிரட்டி இருவரையும் தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த மதுராஜிக்கு நடந்த விஷயம் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கோபி மற்றும் பென்சரை தொடர்பு கொண்டதில் பென்சர் மட்டும் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து மதுராஜ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் அலுவலகத்திற்குள் புகுந்து கடத்தலில் ஈடுபட்ட வண்டலூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நாகராஜ், வினோத்ராஜ், கல்லூரி மாணவர் சொக்கலிங்கம், ரவுடி பிரசாந்த் ஆகிய 4 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காணாமல் போனதாக கூறப்பட்ட பென்சரின் செல்போன் எண்ணை வைத்து அவரைத் தீவிரமாக தேடிவருகின்றனர்.