சமூகநீதி நாடகமும்... குமரியின் முதல் சேனலும் தந்தவர்!- திரைப்பட இயக்குநர் மோகன ராஜன் மறைவு

மோகன ராஜன்
மோகன ராஜன்

1979-ம் ஆண்டு வெளியான அதிசய ராகம் திரைப்படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.மோகன ராஜன் வயோதிகத்தால், நாகர்கோவிலில் நேற்று நள்ளிரவு உயிர் இழந்தார். இயக்குநர் ஆர்.எஸ்.மோகன ராஜன் குமரி மாவட்டத்தில் முதல் சேனலை நிறுவியவர். அதுமட்டும் இல்லாமல் தன் வயோதிகத்திலும் வரவேற்பு விஷன்ஸ் என்னும் யூடியூப் சேனலின் வழியே குமரியின் அரிய விசயங்களை, ஆளுமைகளைத் தொகுக்கும் முனைப்பில் ஈடுபட்டவர் ஆவார்.

அவர் குறித்து எழுத்தாளரும், அவரது உறவினருமான இராஜேஷ் சங்கரப்பிள்ளை காமதேனுவிடம் கூறுகையில், “சிறுவயதிலே, புகைப்படக்கலையின் மீது அவருக்கு அலாதி ஆர்வம். தனது சொந்த ஊரான இராசாக்கமங்கலத்தில் பல வித நாடகங்களை நடத்தியுள்ளார். அவற்றில் சமூகநீதியும், சமத்துவமும் அடிநாதமாக இருக்கும். கல்லூரி பருவத்தின் போதே திரைப்பட ஈர்ப்பால், அஸ்தமனம் என்கிற திரைப்படத்தை 16 எம்.எம் பிலிம் மூலம் திரைக்கு கொண்டு வந்தார். சிவகங்கையில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவருக்கு சினிமாவின் மீதே நாட்டம் இருந்தது.

தன் சொந்த முயற்சியால், 1974-ல் அதிசய ராகம் என்கிற திரைப்படத்தின் மூலம், தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் என வெளிப்பட்டார். இதில் டெல்லி கணேஷ், விஜய் ஆனந்த் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அதிசய ராகம் என்னும் பாடலை பாடகி வாணிஜெயராம் தாமாக முன்வந்து சம்பளமே பெறாமல் பாடினார். இப்படம், யாருமே கால்படாத குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் படமாக்கப்பட்டது. முதன் முதலில், முட்டம் கடற்கரைக் கிராமத்தைக் கேமரா மூலம் வெளி உலகுக்கு கொண்டுவந்தவர் இவர்தான். பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் முட்டத்தின் அழகை பின்னாட்களில் இன்னும் கூடுதலாகக் காட்டியது.

1992 -ம் ஆண்டு, விழுப்புரம் மாவட்டம், கூவாகத்தில் நடைபெறும் திருநங்கைகளின் திருவிழாவை, கண்ணீர் பூக்களின் காதல் திருவிழா என்கிற ஆவணப்படத்தை எடுத்து தன் சமூக பங்களிப்பைக் காட்டினார். இன்று திருநங்கைகள் குறித்துப் பொதுவெளியில் புரிதல் அதிகரித்துள்ளது. அப்படி உருவாகாத நேரத்திலேயே அவர்களின் உணர்வினை காட்சிப்படுத்தியிருந்தார்.

குமரி வீடியோ விஷன்ஸ் என்னும் பெயரில் குமரிக்கு முதல் மாவட்டத் தொலைக்காட்சியைத் தந்தவரும் இவர்தான். 76 வயதான நிலையில் அவருக்குள் இருந்த இயக்கும் ஆர்வம் குறையவே இல்லை. வரவேற்பு விஷன்ஸ் என்கிற யூடியூப் சேனல் மூலம், ஆன்மிகம், நூல் திறனாய்வு, சமையல் கலை, செய்திகள், பேட்டி எடுத்தல் போன்றவற்றை தனி ஒருவனாக செய்துவந்தார். அவரது இறுதிசடங்கு நாகர்கோவில் இல்லத்தில் நாளை நடக்கிறது” என்றார்.

இதுமட்டும் இல்லாமல் குமரி மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த பொதுவுடமை தலைவர் ஜீவானந்தத்தின் இல்லம், அவர்களின் வாரிசுகளின் இப்போதைய நிலையையும் குணச்சித்திர நடிகர் ராஜேஷை அழைத்துவந்து காட்டினார் இயக்குநர் மோகன ராஜன். கலை ஆர்வம் கொண்டே இயங்கி, குமரியின் பல அரிய விசயங்களை வெளிக்கொண்டுவந்த மோகனராஜனின் மறைவு குமரிக்கும் பெரும் இழப்பே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in