`சல்யூட்’ விவகாரம்: துல்கர் சல்மானுக்குத் தடை இல்லை

`சல்யூட்’ விவகாரம்: துல்கர் சல்மானுக்குத் தடை இல்லை

துல்கர் சல்மானுக்கு விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தடையை கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது.

துல்கர் சல்மான் தயாரித்து, நடித்த மலையாளப் படம் ‘சல்யூட்’. இந்தி நடிகை டயா பென்டி நாயகியாக நடித்திருக்கிறார். ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்தப் படம் பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கரோனா பரவல் அதிகமானதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியானது.

தியேட்டர்களுக்கு தருவதாகச் சொல்லிவிட்டு கடைசி நேரத்தில் ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்த துல்கர் சல்மானுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் படங்களுக்குத் தடை விதிக்கவும் கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்தது. பொதுக்குழுவில் கூடி அதுபற்றி முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films ) ஓடிடியில் வெளியிட்டது ஏன்? என்று விளக்கம் அளித்தது. தியேட்டரில் வெளியிடாததற்கு கரோனாதான் காரணம் என்றும் அதன் காரணமாக, ஓடிடி தளத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி வெளியிட்டோம் என்று கூறியது.

அதை ஏற்றுக்கொண்ட தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர், துல்கர் சல்மானுக்கு விதிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தடையை திரும்பப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.