’வலிமை பிரியாணி’ வழங்கிய புதுச்சேரி அஜித் ரசிகர்கள்

வலிமை திரைப்படம் வெற்றிபெற விநோத வேண்டுதல்
வலிமை பிரியாணி
வலிமை பிரியாணி

மலபார் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, பேம்பூ பிரியாணி, மந்தி பிரியாணி, பக்கெட் பிரியாணி வரிசையில் இனி வலிமை பிரியாணியையும் சேர்த்துவிடலாம். நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெற்றியடைவதற்காக புதுச்சேரி அஜீத் ரசிகர்கள் இன்று ’வலிமை பிரியாணி’ செய்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு வழங்கி அசத்தியிருக்கிறார்கள்.

அஜீத்தின் வலிமை திரைப்படத்தை பற்றிய தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அவரது ரசிகர்கள் வித்தியாசமான பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வலிமை அப்டேட் கேட்கும் தகவல்கள் எப்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது வலிமை பிரியாணியும் சேர்ந்திருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள ’பிரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள்’ என்ற அமைப்பில் 80 பேர் அங்கத்தினர்கள். 2017-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் அமைப்பாக இயங்கி இவர்கள் அஜித்தின் பெயரால் புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு விதங்களில் சேவைகளைச் செய்து வருகிறார்கள். போதைக்கு எதிரான விழிப்புணர்வு, ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அஜித்தின் பிறந்தநாள், படம் ரிலீஸ் ஆகும் தினங்களில் அன்னதானம் உள்ளிட்ட விஷயங்களையும் செய்து வருகிறார்கள்.

பிரெஞ்ச் சிட்டி அஜீத் ரசிகர்கள்
பிரெஞ்ச் சிட்டி அஜீத் ரசிகர்கள்

அஜித்தின் 50-வது பிறந்த நாளின்போது, புதுவையில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 200 பேருக்கு அன்னதானம் வழங்கி, பாதுகாப்புக் கவச உடைகள் உள்ளிட்ட சாதனங்களையும் வழங்கினார்கள். திரையுலகில் அஜித்தின் 29 -வது ஆண்டை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சிக்கன் ரைஸ் வழங்கினார்கள். தீபாவளிக்கு இனிப்பு பொட்டலங்களோடு உடைகளையும் வழங்கினார்கள்.

கரோனா ஊரடங்கு காலத்தில் புதுச்சேரியில் சானிடைசர் இலவசமாக வழங்கினார்கள். ’பசித்தால் எடுத்துக்கொள்’ என்கிற வாசகத்தோடு தினமும் 100 பேருக்கான உணவைத் தயார் செய்து ரயில்வே நிலையம் அருகில் ஒரு தள்ளுவண்டியில் வைத்திருந்தார்கள். பசியால் வாடும் ஏழை மக்கள் அதனை தயக்கமின்றி எடுத்துச்சென்று பசியாறினார்கள். இப்படி ஒரு மாதம் முழுவதும் தினமும்100 பேருக்கு பசியாற்றினார்கள்.

பசித்தால் எடுத்துக்கொள்
பசித்தால் எடுத்துக்கொள்

அஜீத் பிறந்தநாள், திருமண நாள் உட்பட எதாவது ஒரு காரணத்தை முன்வைத்து மாதத்தில் ஓரிரு நாட்களுக்காவது கிருஷ்ணா நகரிலுள்ள ஜாலி ஹோம் என்ற ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு சென்று உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் இவர்கள். அங்கு 3 முதல் 18 வயதுவரையுள்ள 100 குழந்தைகள் இருக்கிறார்கள்.

“ நகரிலுள்ள மற்ற ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தேவையான உணவு எப்படியாவது கிடைத்துவிடுகிறது. இது மிகவும் உள்ளடங்கிய பகுதியில் இருப்பதால் பலரின் கவனம் இதன்மேல் போகவில்லை. அதனால் தான் அந்த இல்லத்தை தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் பிரெஞ்ச் சிட்டி அஜீத் ரசிகர்கள் அமைப்பைச் சேர்ந்த மோகன்குமார்.

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

வலிமை பிரியாணி குறித்தும் அவரே தொடர்ந்தார். ’’இரண்டுநாள் முன்பாக வலிமை பாடல் வெளியானபோதும் இந்த இல்லத்துக்குச் சென்று குழந்தைகளுக்குச் சிக்கன் ரைஸ் கொடுத்தோம். இன்று (டிச- 27) எங்கள் அமைப்பைச் சேர்ந்த யூசுப் என்ற ரசிகருக்கு பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துச் சொல்லும் விதமாகவும், வலிமை திரைப்படம் வெற்றியடைய வேண்டியும் புதுச்சேரியின் வலிமையான அதாவது பிரபலமான பிரியாணி மாஸ்டரை வைத்து 100 பேருக்கான வலிமை பிரியாணி செய்து ஜாலி ஹோமில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கினோம்” என்று விளக்கமாகச் சொன்னார்.

ஜாலி ஹோம் இல்லக் குழந்தைகள்
ஜாலி ஹோம் இல்லக் குழந்தைகள்

வலிமை பிரியாணி அண்டா, வலிமை பட போஸ்டர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஜாலி ஹோம் குழந்தைகள் இல்லத்துக்கு வழங்கப்பட்டது.

தங்களின் ஆதர்ச நாயகனின் படம் வரும் நாளில் கிடாவெட்டுவது, பாலபிஷேகம் செய்வது என்று வெறித்தனம் காட்டும் ரசிகர்களின் மத்தியில் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு அன்னமிடும் இந்த அஜித் ரசிகர்களின் செயல் பாராட்டுதலுக்கு உரியதுதான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in