சினிமாவில் 10 வருடங்கள்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி

சினிமாவில் 10 வருடங்கள்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் நன்றி
நடிகர் சிவகார்த்திகேயன்

சினிமாவில் பத்தாண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ‘மெரினா’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘3’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ’எதிர்நீச்சல்’, ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ உட்பட பல படங்களில் தொடர்ந்து நடித்தார். இப்போது முன்னணி நடிகராக இருக்கிறார். தயாரிப்பாளராகவும் மாறி திரைப்படங்கள் தயாரித்து வருகிறார். தற்போது அனுதீப் இயக்கத்தில் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார்.

அவர் அறிமுகமான ’மெரினா’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆனதை ஒட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள். நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தொடங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்துக்கூட பார்த்திராத நிஜம்.

இத் தருணத்தில், எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குநர் பாண்டிராஜ், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குநர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த சக கலைஞர்களுக்கும் என் படங்களின் பணியாற்றிய அத்தனைத் தொழிலாளர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என் தாய்த் தமிழுக்கும் என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும் அன் ஆரம்பகாலம் முதல் என் வெற்றி தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள். எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம், இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே”.

இவ்வாறு நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in