தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் ரசிகர்கள் மலரஞ்சலி

தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்
தியாகராஜ பாகவதரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்

தமிழகத் திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டவரும், பொதுவாழ்க்கையில் மிகச்சிறந்த மனிதராக வாழ்ந்து காட்டியவருமான எம்.கே.தியாகராஜ பாகவதரின் 113-பிறந்த தினம் இன்று அவரது ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. திருச்சியில் உள்ள அவரது நினைவிடத்தில் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தியாகராஜ பாகவதர்
தியாகராஜ பாகவதர்

1910-ம் ஆண்டு மார்ச் 01-ம் தேதி மாயவரம் கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரி-மாணிக்கத்தம்மாள் தம்பதியருக்கு பிறந்த தியாகராஜபாகவதர் மேடை நாடகங்களில் புகழ் பெற்று விளங்கினார். மரியாதை கருதி அவரது பெயரை மக்கள் எம்.கே.டி என சுருக்கி அன்புடன் அழைத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமா உலகத்திற்கு சென்ற தியாகராஜபாகவதருக்கு அங்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் அவரை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

தமது பாடல்திறனால், நடிப்பாற்றலால் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 1934-ல் பவளக்கொடி, சாரங்கதா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ராஜமுக்தி, அமரகவி, சிவகாமி என 14 படங்கள் நடித்தாலும் 1944-ல் ஏம்.கே.டி நடிப்பில் வெளியான ஹரிதால் 3 தீபாவளியை தாண்டி வெற்றிகரமாக ஓடியும், அந்தக்கால கட்டத்திலேயே ரூ.10 லட்சத்தை தாண்டி வசூலித்தும் சரித்திர சாதனைப்படைத்தது.

இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான எம்.கே.தியாகராஜ பாகவதரின் 113-வது பிறந்தநாள் இன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் அவரது ரசிகர்கள், விஸ்வகர்மா மகாஜனசபை நிர்வாகிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.

அவரது நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களில் பலரும் தீபமேற்றி வழிபட்டு, மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சித்திரை 1ஆம் தேதி தியாகராஜ பாகவதர் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கடந்த ஆட்சியில் 16/06/2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் மணிமண்டப பணிகளை திமுக அரசு விரைவில் முடித்து திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in