'மாஸ்டர் பீஸ், பாகுபலியைவிட 10 மடங்கு மிரட்டல்’

ஆர்ஆர்ஆர் ட்விட்டர் விமர்சனம்
'மாஸ்டர் பீஸ், பாகுபலியைவிட 10 மடங்கு மிரட்டல்’

``ஆர்ஆர்ஆர் படம் பாகுபலியைவிட பத்து மடங்கு சிறப்பான படம்'' என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகை ஆலியா பட், ராம் சரணின் காதலியாக நடித்துள்ளார். மற்றும் இந்தி நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. இன்று வெளியான இந்தப் படம் உலகம் முழுவது பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் பலர் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

திரைப்பட வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ், ’ஒற்றை வரியில் சொல்வதென்றால், இந்தப் படம் மிரட்டல். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் சிறப்பாக படத்தை தாங்குகின்றனர். ஆக்‌ஷன் காட்சிகள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆர்ஆர்ஆர் மகத்தான வெற்றி பெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர், பாகுபலியைவிட பத்து மடங்கு சிறப்பான படமாக ஆர்ஆர்ஆர் படத்தை ராஜமவுலி தந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

ஒரு ரசிகர், தெலுங்கு சினிமா இதுவரை உருவாக்கிய சிறந்த கமர்சியல் படங்களில் ஒன்று ’ஆர்ஆர்ஆர்’. முழு திருப்தியான படம். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.

இன்னொருவர், ’இந்தப் படம் மாஸ்டர் பீஸ். படக்குழுவின் நம்ப முடியாத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவருமே படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் சிலர், இதுவரை திரையில் கண்டிராத சிறந்த அறிமுக காட்சியை ராம் சரணுக்கும் ஜூனியர் என்.டி.ஆருக்கு ராஜமவுலி படைத்திருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். பலர் படத்துக்கு ஐந்துக்கு நான்கு மதிப்பெண்களும் சிலர் ஐந்துக்கு ஐந்து மதிப்பெண்களும் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.