
போலி டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கி லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளேவிட மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில் போலி டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கிய ரசிகர்கள் தியேட்டருக்குள் படம் பார்க்க முயன்றிருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் நிர்வாகத்தினர் வெளியேற்றிய சம்பவம் கடலூரில் நடந்திருக்கிறது.
இதையடுத்து அங்கு வந்து இருந்த ரசிகர்களிடம் டிக்கெட்டுகளை தியேட்டர் ஊழியர்கள் சோதனை செய்தபோது பெரும்பாலான டிக்கெட்டுகள் போலியானது என தெரியவந்தது. அவர்களை தியேட்டருக்குள் செல்ல அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தனர். அப்போது, நாங்கள் பணம் கொடுத்து தான் டிக்கெட் வாங்கியதாக ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தங்களையும் படம் பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து காவல்துறையின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலி டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் போலி டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கிய ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.