
கேரள மாநிலத்தில் நடிகை தமன்னா பங்கேற்ற பொதுநிகழ்வு ஒன்றில், தனது வெறித்தனமான ரசிகரை அவர் எதிர்கொண்ட விதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகைகள் சன்னி லியோன் முதல் அபர்ணா பாலமுரளி வரை கேரள ரசிகர்களிடையே சிக்கிய நடிகைகள் பலரின் பின்னணியில் சுவாரசியமான சம்பவங்கள் உண்டு. அந்தளவுக்கு நட்சத்திரங்கள் மீது வெறித்தனமான அபிமானத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு நிகரில்லை. அப்படியொரு அனுபவம் அண்மையில் அங்கே தமன்னாவுக்கு வாய்த்திருக்கிறது.
’லஸ்ட் ஸ்டோரீஸ்’ வலைத்தொடர் வாயிலாக பால்மேனி அழகால் ரசிகர்களை சூடேற்றிய தமன்னா, அடுத்து வெளியாகவிருக்கும் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் ’காவாலா’ பாட்டுக்கான இடுப்பை வெட்டிய ஆட்டத்தால் இணையத்தில் வெகுவாய் பிரபலமாகிவிட்டார். இடையில் தனது காதலரை ரசிக சமூகத்துக்கு வெளிப்படையாக தமன்னா அறிமுகம் செய்த போதும், அவர் மீதான ஈர்ப்பு ரசிகக் கண்மணிகளுக்கு தணிந்தபாடில்லை.
ஞாயிறு அன்று கேரளத்தின் கொல்லம் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்க தமன்னா சென்றிருந்தார். அவரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாதியாய் திரண்டிருந்தனர். இரட்டைத் தடுப்பு பாதுகாப்பு வளையங்கள், போலீஸார் மட்டுமன்றி பிரத்யேக பவுன்ஸர்கள் புடைசூழ வருகை தந்த தமன்னாவை நெருங்கி செல்ஃபி எடுத்தேயாக வேண்டும் என்பது ஏராளமான ’செல்ஃபி பாய்ஸ்’களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்போது தான், யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது.
அத்தனை பாதுகாப்பையும் மீறி எங்கிருந்தோ எகிறி குதித்து தமன்னாவை நெருங்கியிருந்தார் அந்த ரசிகர். அருகே சென்ற வேகத்தில் தமன்னாவின் கைகளையும் வலுவாக பற்றினார். இளங்கன்றின் வேகமும், கைப்பற்றிய வலுவுமாக தமன்னா ஒரு கணம் திக்குமுக்காடிப்போனார். அதற்குள் பாதுகாப்புக்கு நின்றிருந்த பவுன்ஸர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த ரசிகரைப் பிரித்து மேய தயாரானார்கள்.
ஆனால், தமன்னா அதற்கு அனுமதி அளிக்கவில்லை. எவரும் பலப்பிரயேகம் நடத்திடாதபடி அனைவரையும் சமாதானப்படுத்தி, ஆர்வத்தில் எகிறி குதித்து வந்த ரசிகரை இயல்புக்கு வரவழைத்து, அவரின் விருப்பப்படியே கரம் பற்றி குலுக்கினார். அடுத்த ஆசையான செல்ஃபிக்கும் சிரித்த முகத்தோடு ஒத்துழைத்தார். அதன் பிறகே அங்கிருந்து நகர்ந்தார்.
வரம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த ரசிகன் போட்ட துள்ளாட்டமும், பவுன்ஸர்கள் இருவருடன் சவலாடல் விட்டதும், தடுப்புக்கு வெளியே காதில் புகையோடு தவமிருக்கும் இதர ரசிகர்கள் முன்பாக சலம்பல் விட்டதும்... தனி சினிமா!
இந்தக் காட்சிகளோடு, ரசிகர்களால் மட்டுமே திரை நட்சத்திரங்களாய் நாம் ஜொலிக்க முடியும் என்ற நிதர்சனத்தை உணர்ந்த தமன்னாவின் ரியாக்ஷனும் அடங்கிய வீடியோத் துணுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது.