
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'பென்சில்' படத்தை இயக்கிய மணி நாகராஜ் அடுத்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் வெளியிட்ட நிலையில் இன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பென்சில்'. இந்தப் படத்தை மணி நாகராஜ் இயக்கியிருந்தார்.
இதையடுத்து கோபிநாத், அனிகா சுரேந்திரா, வனிதா விஜய்குமார், லீனா குமார், சீதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் 'வாசுவின் கர்ப்பிணிகள்' படத்தை இயக்கினார்.
கடந்த ஜூலை 7-ம் தேதியன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், இன்று மதியம் மணி நாகராஜீக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணி நாகராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த மணி நாகராஜ் திருச்சியைச் சேர்ந்தவர்.