பிரபல நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நடிகர் இன்னொசென்ட்
நடிகர் இன்னொசென்ட்பிரபல நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புற்றுநோய் பாதிப்பால் நேற்று இரவு உடல்நிலை மோசமடைந்த பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட்டிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். தமிழ், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 750 படங்களுக்கு மேல், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கேரளாவில் உள்ள சாலக்குடி தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இன்னொசென்ட் மூன்று முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் இன்னொசென்ட் புற்றுநோயை புன்னகையுடன் எதிர்கொண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர். புற்றுநோய் வார்டில் சிரிப்பு உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எம்.பியான சாலக்குடி, ஆலுவா, பெரும்பாலூர், அங்கமாலி உள்பட ஐந்து இடங்களில் மேமோகிராம் சிகிச்சை மையங்களை அமைத்து பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in