`யார் இப்படி கிளப்பிவிட்டது; இது ஆதாரமற்றது'- மறுக்கும் பிரபல நடிகரின் குடும்பம்

`யார் இப்படி கிளப்பிவிட்டது; இது ஆதாரமற்றது'- மறுக்கும் பிரபல நடிகரின் குடும்பம்

பழம்பெரும் நடிகர் வீட்டை விற்கப் போவதாக வந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

பழம்பெரும் மலையாள நடிகர் பிரேம் நஸீர். சுமார் 750-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில், தந்தை, மந்திரவாதி, நல்ல இடத்து சம்மந்தம், பாலும் பழமும், முரடன் முத்து, பாவை விளக்கு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 542 படங்களில் ஹீரோவாக நடித்ததற்காகவும் ஒரே ஹீரோயினுடன் (ஷீலா)110 படங்களில் நடித்ததற்காகவும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவர், 1989-ம் ஆண்டு சென்னையில் காலமானார்.

பிரேம் நஸீர்
பிரேம் நஸீர்

இவர் வாழ்ந்த வீடு, திருவனந்தபுரம் சிரயின்கீழு பகுதியில் இருக்கிறது. லைலா காட்டேஜ் என்ற அந்த வீடு, பிரேம் நஸீரின் மறைவுக்குப் பிறகு அவருடைய இளைய மகள் ரீட்டாவுக்குப் பாகபிரிவினையில் சென்றது. பின்னர் ரீட்டா இதை தனது மகள் ரேஷ்மாவுக்குக் கொடுத்தார். அவர் இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதால், இந்த வீட்டைப் பராமரிக்க ஆளில்லை என்றும் அதனால் அதை விற்க முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது. இதற்கு பிரேம் நஸீரின் ரசிகர்களும் அந்தப் பகுதியை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரேம் நஸீர்
பிரேம் நஸீர்

இந்நிலையில் பிரேம் நஸீரின் மகள் ரீட்டாவின் கணவர் ரஷீத் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். யார் இப்படி கிளப்பிவிட்டது என்று தெரியவில்லை என்ற அவர், இந்தச் செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று கூறியுள்ளார்.

இதுபற்றி ரீட்டா கூறும்போது, ‘அப்பா இந்த வீட்டைக் கட்டியபோதுதான் நான் பிறந்தேன். பெரும்பாலும் அவர் சென்னையில் இருந்தாலும் கேரளா வந்தால் இந்த வீட்டில்தான் தங்குவார். இந்த வீட்டை நாங்கள் விற்கவில்லை. அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் வீட்டைப் புதுப்பித்து அதை விடுமுறை இல்லமாக வைத்திருப்போம். கண்டிப்பாக நாங்கள் விற்கவில்லை’' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.