அஜித்தே மறுத்தாலும் அவர் ‘தல’ தான்!

அஜித் ரசிகர்களின் பாசமழை
அஜித்குமார்
அஜித்குமார்

இனிமேல் என்னை தல என அழைக்க வேண்டாம் என அஜித் அறிவித்ததை கூட ‘தல போல வருமா?’ என்று வாசகத்தோடே பாராட்டியும், பகிர்ந்தும் வருகின்றனர் அஜித் ரசிகர்கள். அஜித்தே அணை போட்டால்கூட, அவர் தல... தான் அவரது ரசிகர்களுக்கு!

மகேஸ்வரன்
மகேஸ்வரன்

இனிவரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதும், என்னைக் குறிப்பிட்டுப் பேசும்போதும் என் இயற்பெயரான அஜித்குமார் என்றோ, அஜித் என்றோ குறிப்பிட்டால் போதும். தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்ட பெயர்களைக் குறிப்பிட்டோ அழைக்கவேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளார் அஜித்குமார். இதைப்பற்றி அஜித் ரசிகர்கள் சிலரிடம் பேசினோம்.

நாகர்கோவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் கூறும்போது, ‘‘தல எப்போதுமே எதிலுமே முன்னோடிதான். இப்போது பாருங்கள். தனது பட்டத்தையே வேண்டாம் என்கிறார். பொதுவாக யாரை நாம் தல என்போம். யார் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறாரோ, அவரைத்தான் ‘தல’ என்போம். அந்தவகையில் அஜித்குமார் பல இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அவரை தல எனச் சொல்வதே பொருத்தமானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தீனா படத்தில், மகாநதி சங்கர் தான் அஜித்தைப் பார்த்து ‘தல தல’ என படம் நெடுகிலும் அழைப்பார். அதில் இருந்துதான் அஜித்துக்கு தல எனப் பெயர் வந்தது. அதேநேரம் படத்தில் வரும் காட்சிக்காக மட்டுமே நாங்கள் அஜித்தை 'தல' என அழைக்கவில்லை. அவரது உதவும் குணம், எளிமை அனைத்தையும் வைத்துதான் ‘தல’ என்கிறோம். இது அன்பால் கட்டி எழுப்பிய வார்த்தை. இதை ரசிகர்கள் தவிர்க்க முடியாது’’ என்கிறார்.

ரஞ்சித்
ரஞ்சித்

பொறியியல் பட்டதாரியான ரஞ்சித் இதுகுறித்துக் கூறும்போது, “ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகரே தல அஜித் தான். அந்த அறிவிப்பெல்லாம் வெளியானதற்குப் பின்பு பிறந்தவர்கள்கூட இன்று அஜித் ரசிகராக இருக்கிறார்கள். அவர்களே ரசிகர் மன்றங்களும் வைத்துள்ளனர். அதேபோல் என் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்க வாசலில் கட் அவுட், பேனர் வைக்காதீர்கள். அதற்குப் பதிலாக மரம் நடுங்கள் என அஜித் அறிவித்திருந்தார். மரம் நடுவது ஒருபக்கம் இருந்தாலும் இப்போதும் அஜித் மீதான ப்ரியத்தால் பேனர் வைத்துதான் வருகிறோம். 'தல'யின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, சினிமா தியேட்டரிலேயே அதிகமாக வைக்காமல் ஊருக்கு, ஊர் இப்போது தல படம் வரும் நாள்களில் பிளக்ஸ் வைத்துக் கொண்டாடுகிறோம். தமிழகத்தில் வேட்டி தினத்துக்கு என தனியாக ஒருநாள் இருக்கிறது. ஆனால் அதற்கு வேட்டி கட்டியவர்களை விட, அஜித்தின் வீரம் படம் பார்த்துவிட்டு வேட்டி கட்டிய இளைஞர்கள் அதிகம். அட்டகாசம், வீரம் படங்களில் அந்த அளவுக்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியின் பெருமையை சொல்லியிருப்பார். தன் படத்தின் ஆடியோ வெளியீட்டைக் கூட வியாபாரமாக்கும் மற்றவர்களுக்கு மத்தியில், ரசிகர்களை விசிலடித்தான் கூட்டமாக பார்க்காதவர் தான் அஜித்.

அதேநேரத்தில் இந்த எளிமையும், ரசிகர்களின் மீதான ப்ரியமுமே அவரை இன்னும், இன்னும் எங்களுக்கு நெருக்கமாக்குகிறது. இப்படிப்பட்ட மனிதரை தல என கூப்பிடாமல் எப்படி இருப்பது? அவரே சொல்லிவிட்டாலும் கூட ‘ரைட்டு தல’ என தலையாட்டும் அளவுக்கு அஜித் என்றால் தல...தல என்றால் அஜித்” என உருகுகிறார்.

தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களுக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் தொடங்குகிற பெருமைக்குரிய ஊர் மதுரை. ‘ஜேம்ஸ் பாண்ட்’ நடிகர் சீன் கேனரி முதல் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் வரையில் அத்தனை நடிகர்களுக்கும் ரசிகர் மன்றம் தொடங்கிய ஊர் இது. இப்போதும்கூட மறைந்த நடிகர் முரளிக்கு இங்கே ரசிகர் மன்றம் இருக்கிறது. குறிப்பாக அஜித் மற்றும் விஜய் ரசிகர் மன்றங்கள் ரொம்ப உக்கிரமாகவே செயல்படுகின்றன. ‘தல’ படம் வெளியாகும் நாளே எங்களுக்குத் ‘தல தீபாவளி‘ என்றெல்லாம் பிரம்மாண்ட போஸ்டர் ஒட்டி அமர்க்களப்படுத்துவார்கள் 'டெம்பிள் சிட்டி அஜித் ரசிகர்கள்'.

தன்னை இனி தல என்று அழைக்க வேண்டாம் என்று நடிகர் அஜித், தனது ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து இந்த ரசிகர் அமைப்பினரிடம் கேட்டபோது, “தல சொன்னால், சொன்னதுதான். தலயின் தன்னம்பிக்கை அப்படி” என்றார்கள். 'டெம்பிள் சிட்டி அஜித் பேன்ஸ்' என்ற முகநூல் பக்கத்தில், அஜித்தின் இந்த அறிவிப்பை குரூப் அட்மின் பதிவிட்டபோது, “நிறைய பேர் ஓகே தல” என்றே பதிலிட்டார்கள். சரவணகுமார் என்ற ரசிகரோ, “தல, இது உங்கள் தன்னடக்கமாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயர் தானாக அமைந்தது, நாங்கள் என்ன செய்ய?” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in