53 ஆண்டுகளாகியும் ‘ஒரு பக்கம் பாக்குறா; ஒரு கண்ணைச் சாய்க்கறா!’

- 16 தியேட்டர்களில் 100 நாள் கடந்து ஓடிய ‘மாட்டுக்கார வேலன்’
53 ஆண்டுகளாகியும் ‘ஒரு பக்கம் பாக்குறா; ஒரு கண்ணைச் சாய்க்கறா!’

எத்தனையோ இயக்குநர்களின் படங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். ஆனால், எம்ஜிஆருக்கு ஸ்பெஷல் இயக்குநர் இருப்பார். அதேபோல் எத்தனையோ இயக்குநர்கள் ஹீரோக்கள் பலரையும் வைத்து இயக்கியிருப்பார்கள். ஆனால், எம்ஜிஆர்தான் நமக்கு ஸ்பெஷல் என்று நினைக்கிற இயக்குநர்களும் உண்டு. அப்படி, எம்ஜிஆருக்கு ஸ்பெஷல் இயக்குநராக இருந்தவர் இயக்குநர் ப.நீலகண்டன். அதேபோல், ப.நீலகண்டனுக்கு ஸ்பெஷல் நாயகனாக இருந்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் நடித்த எத்தனையோ படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால், இயக்குநர் ப.நீலகண்டனுடன் இணைகிறாரென்றால், படத்துக்கு பூஜை போடும்போதே, வெற்றிவிழாவை எங்கே வைத்துக்கொள்வது என்கிற டிஸ்கஷன் நடைபெறுகிற அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பாராம் எம்ஜிஆர். அப்படியொரு படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். அப்படியொரு படத்தில் எம்ஜிஆர் நடித்தார். அந்தப் படம், காலங்கள் கடந்து பேசக்கூடிய, பார்க்கக் கூடிய, ரசிக்கக் கூடிய படமாக இன்றைக்கும் இருக்கிறது. அந்தப் படம்... ‘மாட்டுக்கார வேலன்.’

ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவானது ‘மாட்டுக்கார வேலன்’. ப.நீலகண்டன் இயக்கினார். எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்தாலே, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இதிலும் இரட்டை வேடங்களில் நடித்தார். ஜெயித்தார். அவரின் அற்புதமான படங்களின் பட்டியலில், ‘மாட்டுக்கார வேலன்’ தனியிடம் பிடித்து கம்பீரமாக நிற்கிறான்.

நாகலிங்கம் எனும் கேரக்டரில் அசோகன். அவரின் மகள் கமலாவாக லட்சுமி. தோழிகளுடன் காரில் வரும் போது, குறுக்கே மாடுகள் நிற்கின்றன. அவையெல்லாம் வேலனின் மாடுகள். அப்போது ஏற்படும் தகராறை, அப்பாவிடம் சொல்லுகிறார் லட்சுமி. உடனே ஆளனுப்பி எம்ஜிஆரை அடிக்கச் சொல்லுகிறார் அசோகன்.

அசோகன் எத்தனை ஆட்களை அனுப்பினால் என்ன? சண்டையை விளையாட்டாகச் செய்து ஜெயிக்கிற எம்ஜிஆர், எல்லோரையும் விளாசித் தள்ளுகிறார். இதில் இன்னும் ஆத்திரம் அடைந்த அசோகனின் ஆட்கள், வேலன் எம்ஜிஆரின் வீட்டுக்குத் தீ வைக்கிறார்கள். அந்த தீ விபத்தில் இருந்து அசோகனின் மகனான சோ, எம்ஜிஆரைக் காப்பாற்றுகிறார். அப்பாவின் ஆட்கள் வேலனைத் தேடி வருகிறார்கள். ஒரு சலூன் கடைக்கு அழைத்துச் சென்று, எம்ஜிஆரின் குடுமியைக் ‘கட்’ செய்து, கிராப்புக்கு மாற்றி, வேட்டியில் இருந்து கோட் சூட்டுக்கு முழுவதுமாக அடையாளமே தெரியாமல் மாற்றுகிறார்.

மேலும், வக்கீல் சட்டநாதனைச் சந்தித்து, வீட்டுக்குத் தீ வைத்த விவரம் சொல்லும்படி சோ வழிகாட்டுகிறார். வக்கீல் சட்டநாதன் தான் வி.கே.ராமசாமி. அவரின் மனைவி எஸ்.வரலட்சுமி. அவர்களுக்கு ஒரு மகள். அவர்தான் ஜெயலலிதா.

இந்த நிலையில்தான், வி.கே.ராமசாமியின் நண்பரின் மகன் ரகு ஊரில் இருந்து வருவதாக கடிதம் வருகிறது. அவரும் வக்கீலுக்குப் படித்தவர்தான். அந்த ரகு வேறு யார்? இன்னொரு எம்ஜிஆர்தான்! தன் நண்பர் மகனின் புகைப்படத்தை ஜெயலலிதாவிடம் காட்டி, ‘’என் நண்பரின் மகன் இவன். இவனைத்தான் உனக்குக் கல்யாணம் செய்து கொடுக்க முடிவு செய்திருக்கிறேன்’’ என்று வி.கே.ஆர் சொல்ல, அவரும் புகைப்படம் பார்த்து குதூகலமாகிறார்.

இப்போது, வி.கே.ராமசாமி வீட்டுக்கு வருகிறார் எம்ஜிஆர். எந்த எம்ஜிஆர்? மாட்டுக்கார வேலனான எம்ஜிஆர் வருகிறார். ஆள் டிப்டாப்புடன், கோட்சூட்டெல்லாம் போட்டிருப்பதையும் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு, ‘மாப்பிள்ளை வந்தாச்சு’ என வீடு திமிலோகப்படுகிறது. ஆரத்தி எடுக்காத குறையாக அவரை வரவேற்கிறது. தடபுடலென விருந்துகள் அமர்க்களப்படுகின்றன.

அதேசமயத்தில், அசோகனின் ஆட்கள் வேலனைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தசமயம் பார்த்து வக்கீல் எம்ஜிஆர் அவர்கள் கண்களில் படுகிறார். பாவம் எம்ஜிஆர்... அடி பின்னியெடுக்கிறார்கள். அந்தக் காயங்களுடன் வி.கே.ராமசாமி வீட்டுக்கு வருகிறார். அவரை ஓய்வு எடுக்கச் சொல்லி மாடியறைக்கு அனுப்பிவைக்கிறார்கள். அங்கேதான்... இரண்டு எம்ஜிஆரும் சந்தித்துக் கொள்கிறார்கள். வேலனுக்கும் முழு விவரங்கள் தெரியவருகின்றன.

ஆனால், இரண்டு எம்ஜிஆர்களும் ஒரே வீட்டில், ஒரே அறையில் இருந்தபடி சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாட்டுக்கார வேலன் எம்ஜிஆரை, ஜெயலலிதா காதலிக்கிறார். அங்கே வக்கீல் எம்ஜிஆரை, அசோகனின் மகள் லட்சுமி விரும்புகிறார்.

எம்ஜிஆரும் லட்சுமியும் ஒன்றாக சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை ஜெயலலிதா பார்த்து, பொருமுகிறார். அழுகிறார். ஆதங்கப்படுகிறார். தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கலங்குகிறார்.

வக்கீல் எம்ஜிஆர், நடந்த உண்மைகளையெல்லாம் சொல்லுகிறார். இதில் ஆத்திரமாகும் வி.கே.ராமசாமி, மாட்டுக்கார வேலனை அடித்துத் துரத்துகிறார். மேலும், வக்கீல் எம்ஜிஆரிடம், ‘’நீ என் மகளைக் கல்யாணம் பண்ணிக்குவேனு நினைச்சேன். பரவாயில்ல... ஆனா, அந்த நாகலிங்கத்தின் மகளைக் கல்யாணம் பண்ணிக்காதே. ஏன்னா... உங்க அப்பாவைக் கொன்னவன் வேற யாருமில்லை... நாகலிங்கம்தான்’’ என்கிற உண்மையைச் சொல்லுகிறார் வி.கே.ஆர்.

பிறகென்ன... அப்பாவைக் கொன்ற அசோகனைப் பழிவாங்கத் துடிக்கிறார் எம்ஜிஆர். அதற்கு உறுதுணையாக இருக்கிறார் இன்னொரு எம்ஜிஆர். இதனிடையே வி.கே.ராமசாமியிடம் ரகசியக் குறிப்பு ஒன்று இருக்கிறது. அந்தக் குறிப்பைக் கொண்டு, ஆளுயரக் கடிகாரத்தில் டைரி இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அதை ஒளிந்திருந்து கேட்கும் அசோகன், அந்த டைரியைக் கைப்பற்றிவிடுகிறார். விடுவாரா எம்ஜிஆர்? ஆனால், டைரியைக் கொண்டே க்ளைமாக்ஸில் பரபரப்பு கிளப்புகிறார் அசோகன். அந்தச் சமயத்தில் மாட்டுக்கார வேலன் வந்து, எல்லோரையும் அடித்துவீழ்த்தி, எல்லோரையும் காப்பாற்றுகிறார்.

டைரி கிடைக்க, அசோகனை போலீஸார் கைது செய்ய, இரண்டு எம்ஜிஆரும் அவரவர் ஜோடியுடன் இணைய... ‘சுபம்’ கார்டு போட்டு கலகலவென படத்தை முடிக்கிறார்கள்.

கதை, ஹைவேஸ் சாலை மாதிரி நேர்க்கோட்டில் பயணிக்கும். திரைக்கதையோ, சும்மா கலகலவென, ஜகஜகவென போய்க்கொண்டே இருக்கும்.

படத்துக்கு இசை கே.வி.மகாதேவன். படத்தின் ஒளிப்பதிவு, வண்ணம், எடிட்டிங் எல்லாமே பக்காவாக இருக்கும். ஜெயலலிதா வீடு ஒரு செட், அசோகனின் வீடு ஒரு செட், அந்த கொள்ளைக்கூட்ட ரகசிய பங்களா ஒரு செட்... அவ்வளவுதான். அநேகமாக, ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்திருப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது. கோர்ட் விஷயத்துக்கும் மாடு விஷயத்துக்குமாக எம்ஜிஆர்கள் மாறி மாறி பதில் சொல்லும் இடம் செம ரகளைக்குரிய இடம்!

1966-ம் ஆண்டு வெளியான ’எம்மே தம்மன்னா’ என்ற கன்னடப் படத்தின் ரீமேக் இது. கவிஞர் கண்ணதாசனும் வாலியும் பாடல்களை எழுதினார்கள். ’சத்தியம் நீயே, தர்மத்தாயே’ என்ற பாடலுடன் படம் தொடங்கும். இந்தப் பாடலையும் எம்ஜிஆரின் அறிமுகக் காட்சியையும் தவறவிடக்கூடாது என்பதற்காகவே, காட்சி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே தியேட்டருக்கு படையெடுத்து வந்து கால்கடுக்க நின்ற ரசிகர்கள் ஏராளம்!

’ஒரு பக்கம் பாக்குறா, ஒரு கண்ணைச் சாய்க்கறா’ என்ற பாடலும் பாடலில் எம்ஜிஆரின் ஆக்‌ஷனும் கரவொலி எழுப்பச் செய்தன. ‘பட்டிக்காடா பட்டணமா’ என்ற பாடலும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. பாடல்களின் வரிகளைக் கொண்டு தலைப்பு வைக்கும் பழக்கம் கொண்ட இயக்குநர் பி.மாதவன், சிவாஜியை வைத்து அதிக படங்களை இயக்கினார். சிவாஜியையும் ஜெயலலிதாவையும் வைத்து இயக்கிய படத்துக்கு ‘பட்டிக்காடா பட்டணமா’ என்று டைட்டில் வைத்தார். அதேபோல், ‘மாட்டுக்கார வேலன்’ என்ற டைட்டிலை எங்கே பிடித்தார்கள்?

1959-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வண்ணக்கிளி’ படத்தில் ‘காட்டுமல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க...’ என்ற பாடலில், ‘மாட்டுக்கார வேலா... உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா’ எனும் பாடலில் வரியில் இருந்து ‘மாட்டுக்கார வேலன்’ என்கிற டைட்டில் எடுக்கப்பட்டது.

பொதுவாக, எம்ஜிஆர் படங்களாகட்டும், தமிழ் சினிமாவின் டபுள் ஆக்ட் படங்களாகட்டும். இந்த டபுள் ஆக்ட் என்பதை ஆரம்பத்திலேயே அண்ணன் தம்பி என்று காட்டுவார்கள். அல்லது கடைசியில் அண்ணன், தம்பி என்று காட்டுவார்கள். இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆறுதல்... அந்த எம்ஜிஆர் யாரோ, இந்த எம்ஜிஆர் யாரோ எனக் காட்டியிருப்பார்கள்.

மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், சோ, சச்சு, விகேஆர், எஸ்.வரலட்சுமி, எஸ்.என்.லட்சுமி அவ்வளவுதான் படத்தின் கதாபாத்திரங்களே! அதிலும் சச்சுவை, உளவு பார்க்கும் போலீஸாக கடைசியில் சொல்லுவது அசத்தலாக பண்ணப்பட்டிருக்கும்! எடுத்துக்கொண்ட கதையும் கதைக்குத் தக்கதான திரைக்கதையும் ஏ.எல்.நாராயணனின் அற்புதமான வசனங்களும் மாட்டைக் கட்டிப் போட்டதோ இல்லையோ... படம் பார்த்த ரசிகர்கள் அனைவரையும் கட்டித்தான் போட்டன!

எம்ஜிஆரின் படங்களில், நல்ல தரமான, சிறப்பான படங்களின் பட்டியலொன்றை எடுத்தால், அதில் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட்டடித்த மாட்டுக்கார வேலனுக்கு முக்கியமானதொரு இடம் உண்டு. அதைவிட முக்கியமாக, எம்ஜிஆருக்கு மக்கள் மனங்களில் நீங்காத இடம் எப்போதும் உண்டு! அப்படி இருப்பதற்கான அஸ்திவாரமாக அமைந்த படங்களில் மாட்டுக்கார வேலனும் ஒருவன்!

1970-ம் ஆண்டு, ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருநாளுக்கு வெளியானான் ‘மாட்டுக்கார வேலன்’. இந்தப் படம் 16 தியேட்டர்களுக்கும் மேலாக நூறு நாட்களைக் கடந்து ஓடி, மிகப்பெரிய வசூலைக் குவித்தது. சில தியேட்டர்களில் வெள்ளிவிழாவைக் கடந்தும் ஓடி சக்கைப்போடுபோட்டது.

படம் வெளியாகி 53 ஆண்டுகளாகிவிட்டன. ‘சத்தியம் நீயே தருமத்தாயே’ என்ற பாடல் மூலமாகவும் ‘ஒரு பக்கம் பாக்குறா’ பாடல் வழியாகவும் எம்ஜிஆர் இன்றைக்கும் நம்மையெல்லாம் உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in