52 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டடித்த ‘அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்’ பாட்டு!

- சிவாஜியும் லட்சுமியும் நடிப்பில் உருகிய ‘தங்கைக்காக!’
தங்கைக்காக
தங்கைக்காக

தமிழ் சினிமாவில் ‘அண்ணன் - தங்கை’ கதைக்கு எப்போதுமே மவுசு உண்டு. அண்ணனாக பல படங்களில் நடித்தாலும் தங்கையாக பல படங்களில் நடித்தாலும் அவர்களுக்கும் அலுப்பதில்லை. நமக்கும் சலிப்பதில்லை. அந்த வகையில், ஒருகாலத்தில் சாவித்திரியைத் தங்கையாகக் கொண்ட அண்ணன் சிவாஜி, எழுபதுகளில், நடிகை லட்சுமியின் மீது அன்பையும் பாசத்தையும் கொடுத்து உருகியதுதான் ‘தங்கைக்காக!’

காலையில் எழுந்ததும் தங்கை ராதாவின் முகத்தில் கண்விழிக்கிற வழக்கம் கொண்ட பாசக்கார அண்ணன் ராமு. கார் டிரைவராக மூர்த்தியிடம் வேலை செய்வார். இந்த மூர்த்திக்கு இந்த வியாபாரத்தைத் தவிர்த்து, இல்லீகல் விஷயங்களும் உண்டு. போதாக்குறைக்கு, பெண்களைக் குறிவைத்து தூண்டில் போடும் குணம் கொண்டவன் மூர்த்தி. அப்படித்தான், ராதா ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, மூர்த்தி தூண்டில் போட்டு ஜாடைமாடையாகப் பேச, அவரிடம் ‘பளார்’ அறைகளைப் பரிசாக வாங்கிக் கொண்டு, சோகத்துடனும் கோபத்துடனும் கிளம்பிச் செல்வான்.

அந்த மூர்த்திக்கு அல்லக்கை தாஸ். ‘ஆல் இன் ஆல்’ மூர்த்திக்கு இவனே எல்லாமும். ராமுவின் நண்பன் பஞ்சாட்சரம் என்கிற பஞ்சம். அவனுடைய தங்கை சாரதா. தன்னிடம் வேலை பார்க்கிற ராமுவின் தங்கைதான் தான் விரும்பும் ராதா என்பதை அறிந்து, வெளியூருக்கு ஒருவரை கார் ஓட்டிச் சென்று இறக்கிவிடும்படியான வேலையைக் கொடுப்பான் மூர்த்தி. ராமுவும் செல்ல, அன்றிரவு, வீட்டுக்குள் புகுந்து, ராதாவிடம் சில்மிஷம் செய்ய, அங்கே தங்கியிருக்கும் நண்பன் பஞ்சம், அடித்து உதைக்க, அலறியடித்துக் கொண்டு ஓடிவிடுவான்.

பிறகு இந்த விஷயமெல்லாம் தெரியவரும்போது, ராதாவை பிடித்துவைத்துக் கொண்டு துன்புறுத்துவான் மூர்த்தி. அவனை அடித்து உதைக்கும் போது, செத்துவிட்டதாக நாடகமாடுவான் மூர்த்தி. அதை நம்பி, ஊரை விட்டு ஓடி, வேறு பெயருடன், டாக்ஸி டிரைவராக வேலை பார்த்துக் கொண்டே, தன் தங்கையைத் தேடிக் கொண்டிருப்பான் ராமு. இந்த சமயத்தில் தன் பெயரை ரவி என்று மாற்றிக் கொண்டிருப்பான்.

அதேபோல், மூர்த்தியும் தன் பெயரை பிரகாஷ் என்று மாற்றிக்கொண்டு, தன் கடத்தல் தொழிலைச் செய்துகொண்டிருப்பான். அவனுக்கு மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொரு பெயர் இருக்கும். இந்த நிலையில், சாரதாவின் வீட்டில் அடைக்கலமாவான் ரவி. இருவருக்கும் காதல் மலரும். தன் நண்பனின் தங்கையைத்தான் காதலிக்கிறோம் என்பது தெரியவரும்.

ராமு (ரவி) ஓட்டுகிற கார் முதலாளி வீட்டில் ராமுவின் நண்பன் பஞ்சம், சோளம்பட்டி ஜமீன்தார் என்றும் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு ஓடிவந்து விட்டதாகவும் சொல்ல, அங்கே பஞ்சத்துக்கு ஏகத்துக்கும் தடபுடல் வரவேற்பு, கவனிப்பு. அந்த வீட்டுப் பெண்ணைக் காதலிப்பதால் இந்த பொய்யாட்டத்தைச் சொல்லி நாடகம் போட்டிருப்பான் பஞ்சம்.

ஒருமுறை சாலையில் விபத்து. போய்ப்பார்த்தால்... தன் தங்கை கார் ஓட்டிய நிலையில் அடிபட்டு மயங்கிக் கிடப்பார். இதைப் பார்த்த ராமு, ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று, ரத்தம் கொடுத்து, காப்பாற்றுவார். பிறகு அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தால், அங்கே அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகியிருக்கும்.

கணவர், நாத்தனார், மாமனார் எல்லாம் இருப்பார்கள். தங்கை என்று சொல்லி வந்த ராமுவை, விரட்டுவார்கள். ஆனால், ‘அண்ணா அண்ணா’ என பொய்யாக நடித்து பாசம் காட்டுவார் அந்தப் பெண். அந்தப் பெண்ணின் கணவர், போலீஸ் அதிகாரி. ஒருகட்டத்தில், அண்ணன் அண்ணன் என்று சொல்லிக் கொண்டு வருபவனை ஊர் தப்பாகப் பேசும். இதைக் கேட்டு கொந்தளிக்கும் கணவர், ‘இனி வீட்டுக்கு வராதே’ என்று விரட்டுவார்.

இந்த நிலையில், மூர்த்தியாக இருக்கும் போது ராதாவிடம் வம்பு பண்ணி, இப்போது பிரகாஷாக இருப்பவன், அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு பதறுவான். அதேபோல, ராமுவைப் பார்த்துவிட்டு கோபமாவான்.

அந்தப் பெண்ணுக்கு உடல்நலமில்லை எனும் தகவல் ராமுவுக்குத் தெரியவரும். உடனே சாமியாரிடம் சென்று விபூதி வாங்கிக் கொண்டு, இரவில் யாருக்கும் தெரியாமல் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்து அந்தப் பெண்ணுக்கு விபூதி பூசிவிட்டு கொடுப்பார். இதைப் பார்த்த போலீஸ் கணவர், சாட்டையால் ராமுவை விளாசித்தள்ளுவார். அடுத்தகட்டமாக, வைர வியாபாரி மூர்த்தியைக் கொலை செய்த ராமுவின் புகைப்படம், போலீஸ்காரர் கைக்குக் கிடைக்கும். பார்த்தால், தன் மனைவி மீது தங்கை உறவு கொண்டாடும் ரவிதான் இது என்பதை அறிந்து அவனைக் கைது செய்வார் போலீஸ்.

ராமுவின் காதலி சாரதா, மூர்த்தி என்று சொல்லப்படும் பிரகாஷிடம் கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்ந்திருப்பார். அங்கே, போலீஸ்காரரின் மனைவியை கடத்திக் கொண்டு வந்திருப்பதைப் பார்த்துவிடுவாள். தன் அண்ணனுக்கு தகவல் கொடுக்க, நண்பன் பஞ்சம், கைதாகியிருக்கும் ராமுவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, தப்பி வந்து, தங்கையைக் காப்பாற்ற காதலியுடனும் நண்பனுடனும் முனைவார். போலீஸ்காரர் வருவார். ‘இவன் பிரகாஷ் இல்லை. நான் கொன்றதாகச் சொல்லப்படும் மூர்த்தி இவன்தான்’ என்று அவனுடைய வேடத்தைக் கலைத்துக் காட்டிக் கொடுப்பார் ராமு.

அப்போது, போலீஸ்காரரின் மாமனார் ஒரு பெண்ணுடன் வருவார். பார்த்தால்... இருவருமே ஒரே உருவத்துடன் இருப்பார்கள். ‘’இந்த இரண்டுபேருமே உன் தங்கைகள்தாம்பா’’ என்கிற உண்மையை ராமுவுக்குச் சொல்லுவார். அந்த தங்கைகளுடனும் தன் காதலியுடனும் சேருவார் ராமு. ஒருவழியாக, தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக படமும் முடியும்.

ராமுவாகவும் ரவியாகவும் சிவாஜி. ராதாவாகவும் அமுதாவாகவும் நடிகை லட்சுமி. இவர்தான் சிவாஜியின் தங்கை. சாரதாவாக வெண்ணிற ஆடை நிர்மலா. சிவாஜிக்கு ஜோடி. நண்பன் பஞ்சமாக நாகேஷ். அவர் காதலிக்கும் பெண்ணாக சச்சு. அவர்களின் பெற்றோராக, டி.எஸ்.பாலையா - சுந்தரிபாய். போலீஸாக முத்துராமன் நடித்திருக்க, மூர்த்தியாகவும் பிரகாஷாகவும் வில்லத்தனம் செய்பவர் வேறு யார்... நம்பியார்தான்! அவருக்கு கையாளாக எஸ்.வி.ராமதாஸ்.

தங்கைகள் கதையைச் சொல்லுபவராக டி.கே.பகவதி. மாஸ்டர் பிரபாகரும் பேபி சுமதியும் நிஜ வாழ்விலும் அண்ணன், தங்கைகள்தான். இருவருமே, இதில் அண்ணன், தங்கையாக, சிறுவயது சிவாஜி - லட்சுமியாக நடித்திருந்தார்கள். வி.நாகையா சாமியாராக நடித்தார். முத்துராமனின் அக்காவாக காந்திமதி நடித்தார்.

படத்தின் பெரும்பகுதியை சோளம்பட்டி ஜமீன் மகன் என்று சொல்லப்படுகிற நாகேஷ், டி.எஸ்.பாலையா, சுந்தரிபாய், டைப்பிஸ்ட் கோபு முதலானோரின் காட்சிகளே ஆக்கிரமித்திருக்கும். படத்தில், ‘டபுள் ஆக்ட்’ லட்சுமி என்பதும் மிகப்பெரிய திருப்பத்தையோ சுவாரஸ்யத்தையோ ஏற்படுத்தாமல் தேமே என்று வந்துபோகும். சிவாஜியின் வழக்கமான நடிப்பும் லட்சுமியின் வழக்கமான உணர்வுபூர்வ முகபாவங்களும் பிரமாதமாக இருக்கும். வெண்ணிற ஆடை நிர்மலா நாயகிதான் என்றபோதும் பெரிய வேலைகள் இருக்காது. ஆனால், படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், அவரையும் இணைத்துக் கண்டுபிடிக்க உதவுவது போல் காட்டியிருப்பார்கள்.

இந்தப் படத்தில் வரும் ‘அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்/ தண்ணிக்குடத்தை கீழே வச்சி எங்கிட்ட வந்தாளாம்’ என்ற பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட்டானது.

நாகேஷ்க்கு இந்தப் பாடல். சொல்லப்போனால், நாகேஷுக்கு எண்ட்ரி பாடலாக அமைந்தது இது. இந்தப் பாடலை ஏ.எல்.ராகவன் பாடி ஜாலம் காட்டியிருப்பார். எனினும் சிவாஜி என்கிற நடிப்பு யானைக்கும் லட்சுமி என்கிற நடிப்புப் புலிக்குமான படமாக இது அமையவில்லை என்பதுதான் நிஜம்.

வி.சி.குகநாதன் வசனத்தில் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, டி.யோகானந்த் இயக்கினார்.

1971-ம் ஆண்டு, பிப்ரவரி 6-ம் தேதி வெளியானது ‘தங்கைக்காக’ திரைப்படம். படம் வெளியாகி, 52 ஆண்டுகளானாலும் ‘அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்’ என்கிற காமெடிப் பாடலையும் ‘எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக’ என்கிற சென்டிமென்ட் பாடலையும் இன்றைக்கும் மறக்கவில்லை ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in