
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இதில் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் மார்ச் 10-ம் தேதியன்று உலகம் முழுதும் திரை அரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், வினய், சூரி, நடிகை பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் டி. இமான், படத்தொகுப்பாளர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினருடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்துகொண்டனர்.
நடிகை பிரியங்கா மோகன் பேசுகையில், “படப்பிடிப்பின் முதல் நாளே காதல் காட்சி என்பதால் மிகுந்த தயக்கத்துடன் இருந்தேன். சூர்யா இயல்பாகப் பேசி அந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க உதவினார். அவர் ‘நடிப்பு நாயகன்’ என்பதால், நெருக்கமான காட்சிகளிலும் எளிதாக நடிக்க கற்றுக் கொடுத்தார்” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், ''எனக்குத் தெரிந்து எந்த நாயகனுக்கும், படத்தின் நாயகி பட்டம் வழங்கியதில்லை. ஆனால் சூர்யா போன்ற அழகான நாயகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை பிரியங்கா மோகன், ‘நடிப்பு நாயகன்’ எனப் பட்டம் கொடுத்திருக்கிறார். ஏராளமான சுவர்களில் 'வள்ளல் சூர்யா' என்று எழுதி இருப்பார்கள். ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ சூர்யாவிற்கு ‘புரட்சி நாயகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறேன்” என்றார்.
மேலும் பேசிய சத்யராஜ், “நான் பெரியாரின் தொண்டன் என்பதால், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் தொடர்பான ஒரு விழாவிற்குக் கலந்துகொள்ளச் சென்றேன். அப்போது நான் நடித்துக்கொண்டிருந்த படத்தின் இயக்குநர், ‘சார் இதெல்லாம் ரிஸ்க். நீங்கள் மேடையேறி ஏதாவது பேச, அது படத்தின் வியாபாரத்துக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்திவிடும். அது மட்டுமல்ல உங்கள் மார்க்கெட்டே போய்விடும்' என்றார். அப்போது அவரிடம், ‘மார்க்கெட் போனாலும் பரவாயில்லை. நான் பெரியாரின் தொண்டன் என்பதை ஒருபோதும் மறுக்க மாட்டேன். மறக்க மாட்டேன். நிச்சயம் அந்த விழாவில் கலந்துகொள்வேன்’ என்றேன். இன்று சூர்யாவின் படங்களில் தொடர்ச்சியாக பெரியாரின் புகைப்படங்களும், அம்பேத்கரின் புகைப்படங்களும் இடம்பெறுகின்றன. 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' போன்ற படங்களில் பெரியார், அம்பேத்கர் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இங்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஆனால் உக்ரைனில் எதுவுமே அறியாத அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் என பலர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்குக் கூட்டுப் பிரார்த்தனை என் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்னும் அங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கலில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அங்குள்ள இந்தியர்களும், இந்திய மாணவர்களும் பாதுகாப்பாகத் தாயகத்திற்குத் திரும்ப வேண்டுமென ஒரு சில நிமிடங்கள் நாம் அனைவரும் கூட்டாக பிரார்த்திப்போம்” என்றார்.
தொடர்ந்து, “இந்தப் படத்தில் யாரும் பேசாத ஒரு விஷயத்தை, இயக்குநர் பாண்டிராஜ் பொறுப்புணர்வுடன் அற்புதமான கதையாக விவரித்திருக்கிறார்” என்று பேசிய சூர்யா, ’ஜெய்பீம்’ படம் குறித்த சர்ச்சை பற்றியும் குறிப்பிட்டார்.
“அப்படத்தின் வெளியீட்டின்போது சில எதிர்பாராத சின்னச் சின்ன சம்பவங்கள் நடைபெற்றன. சில தவறுகளும், சில தர்ம சங்கடங்களும் ஏற்பட்டன. அனைவரும் அனைத்து விஷயங்களையும் புரிந்துகொண்டனர். ஆனால் அந்த நேரத்தில் சில இடங்களில் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள் பல நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனை ரசிகர் மன்றத்தினர் மிகவும் பக்குவப்பட்ட மனநிலையில் கையாண்டனர். இந்த இளம் வயதில் உங்களிடம் இருந்த பக்குவத்தை கண்டு நான் வியந்தேன். அதற்கு நான் தலை வணங்குகிறேன். கடந்த 25 ஆண்டு காலமாக என் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களை கடவுளாக தான் காண்கிறேன். மார்ச் 10-ம் தேதி முதல் மாற்றத்திற்குத் தயாராக இருங்கள்'' என்று சூர்யா கூறினார்.