`என்றும் 16’ குஷ்புவுக்கு `டபுள்’ வாழ்த்துகள்!

குஷ்பு பிறந்தநாள் - தமிழில் அறிமுகமான நாள்: சிறப்புப் பகிர்வு
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு

நடிகைகளுக்கு ரசிகர்மன்றம் வைப்பார்கள். புடவைக்கும் ஜிமிக்கிக்கும் கம்மலுக்கும் மாடர்ன் உடைகளுக்கு நடிகைகளின் பெயர் சூட்டுவார்கள். முதல் நாள் முதல் ஷோ, ஹீரோவுக்காகப் பார்ப்பது போலவே, ஹீரோயினுக்காகவே பார்ப்பார்கள். ஆனால் அதுவரை இல்லாத அதிசயமாக, நடிகை குஷ்புவுக்குத்தான் கோயில் கட்டினார்கள். தமிழ் சினிமாவில் அப்படியொரு புகழையும் மரியாதையையும் பெற்றவராக தனித்துத் தெரிந்தார் குஷ்பு.

மும்பை தான் பூர்விகம். குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்து வந்தவருக்கு, தமிழ் சினிமாப் பக்கம் போகலாம் என்று யாராவது ஐடியா கொடுத்தார்களா, அல்லது எஸ்.பி.முத்துராமன் கண்களில் இவரின் புகைப்படம் பட்டதா என்று தெரியவில்லை. ரஜினியும் பிரபுவும் இணைந்து நடித்த ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானார் குஷ்பு.

படம் ஹிட்டானது. பாடல்கள் ஹிட்டாகின. குஷ்புவும் கவனிக்கப்பட்டார். ஆனால், குஷ்புவை ரசிகர்கள் இப்போதைய அளவுக்கெல்லாம் முதல் படத்தில் கொண்டாடவில்லை. அடுத்த வருடமே இயக்குநர் பாசிலின் ‘வருஷம் 16’ படம் வெளியானது. கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். எல்லா வயதுக்காரர்களாலும் அப்படம் கொண்டாடப்பட்டது. அழகும் இளமையும் கொண்ட நாயகியாக, மிகவும் கனமானதொரு, பொறுப்புமிக்கதொரு கதாபாத்திரத்தில் நடிப்பிலும் அசத்தியெடுத்தார் குஷ்பு. படத்தில் இவர் பெயர் ராதிகா. இவர் வருகிற காட்சிகளிலெல்லாம் ரசிகர்கள் கரவொலி எழுப்பிக் கொண்டே இருந்தார்கள். விசில் பறந்துகொண்டே இருந்தது. தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடியதற்கு, படமும் கதையும் எல்லோரின் நடிப்பும் முக்கியமாக குஷ்புவும் காரணம் என்று பேசப்பட்டது.

அந்த வருடம் இன்னொரு ஜாக்பாட்டும் அடித்தது குஷ்புவுக்கு. சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் கமலும் பிரபுவும் இந்த முறை இணைந்தார்கள். பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிவிழா’ தீபாவளி வெளியீடாக வந்தது. அமலா, சசிகலா, குஷ்பு மூவரும் நடித்திருந்தார்கள். கூடுதலாக, பிரபு - குஷ்பு ஜோடி பேசப்பட்டது!

எவருடன் நடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டு கால்ஷீட் கொடுக்கவில்லை. எவரிடம் வேண்டுமானாலும் நடிக்கலாம். அதில் நம் கதாபாத்திரம் முக்கியமாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனித்து ஒப்புக்கொண்டார். இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ‘கிழக்கு வாசல்’ படத்தில் கார்த்திக்குடன் நடிக்கவைத்தார். இதிலும் ரேவதி, குஷ்பு இருவரும் நாயகியராக நடித்தார்கள். பாவாடையும் தாவணியுமாக வந்து ரசிகர்களை கவர்ந்திழுத்தார் குஷ்பு. துறுதுறுசுறுசுறு பெண்ணாக படம் முழுக்க வலம் வந்து எல்லோரையும் ஈர்த்தார்.

பிரபு - குஷ்பு ஜோடி
பிரபு - குஷ்பு ஜோடி

1990-ம் ஆண்டு குஷ்புவின் திரை வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு. கிட்டத்தட்ட அப்போது முக்கியமான ஹீரோக்களின் படங்களில் குஷ்புவே நாயகியாக நடித்தார். முரளியுடன் ‘நானும் இந்த ஊருதான்’ என்ற படத்தில் நடித்தார். சத்யராஜுடன் ‘நடிகன்’ என்ற படத்தில் இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் நடித்து கலகலக்க வைத்தார். பார்த்திபனுடன் ‘தாலாட்டு பாடவா’ வில் சேர்ந்து நடித்தார். ராமராஜனுடன் ‘பாட்டுக்கு நான் அடிமை’ படத்தில் இணைந்து நடித்தார்.

மீண்டும் பிரபுவுடன் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘மை டியர் மார்த்தாண்டன்’ படத்தில் நடித்தார். வரிசையாக படங்களும் ஹிட்டாகின. அத்தனை படங்களிலும் கவனிக்கப்பட்டார். அதே வருடத்தில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில், பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், கமல் நான்கு வேடங்களில் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் குஷ்பு நடித்தார். ‘ரம்பம்பம் ஆரம்பம்’ பாடலுக்கும் ‘பேர் வச்சாலும் வைக்காமப் போனாலும் மல்லிவாசம்’ பாடலுக்கும் கமலுடன் இணைந்து ஆடிய ஆட்டம், வெகுவாகக் கவர்ந்தது. ஒரே வருடத்தில், மளமளவென உயர்ந்தார் குஷ்பு. ’மார்க்கெட் வேல்யூ’ நடிகையானார்.

குஷ்பு தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சி
குஷ்பு தொகுத்து வழங்கிய டிவி நிகழ்ச்சி

ரஜினி நடித்த ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’, கார்த்திக்குடன் ‘விக்னேஷ்வர்’ என்று நடித்தவருக்கு 1991-ம் ஆண்டு, இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில், பிரபுவுடன் இணைந்து நடித்த ‘சின்னதம்பி’ மிகப் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்தது. அழகு மட்டுமின்றி, குஷ்புவின் நடிப்பும் பேசப்பட்டது. ஜாலியாகப் பாடுகிற ‘போவோமா ஊர்கோலம்’ பாட்டு நம்மைக் குதூகலப்படுத்தியதென்றால், சோகமாகப் பாடுகிற ‘நீ எங்கே...’ பாட்டு நம்மைக் கதறடித்தது. ‘நாங்கதான் சொன்னோம்ல... பிரபுவுக்கு ஏத்த ஜோடி குஷ்புதாம்பா’ என்று ரசிகர்கள் உறுதியிட்டுச் சொன்னது இந்தப் படத்திலிருந்துதான்!

இளையராஜா தயாரித்து ஆர்.வி.உதயகுமார் இயக்கி, கமல் நடித்த ‘சிங்காரவேலன்’ படத்தில் ஜாலியும் கேலியுமாக வலம் வந்த குஷ்புவை ரசித்துக்கொண்டே இருக்கலாம். அதிலும் ஒரு காட்சியில் புடவை அணிந்துகொண்டு வரும்போது, குஷ்புவுக்கு திருஷ்டி வளித்த ரசிகர் ரசிகையரெல்லாம் கூட உண்டு!

ரஜினியுடன்...
ரஜினியுடன்...

சத்யராஜுடன் நடித்த ‘பிரம்மா’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டரை, அற்புதமாகப் பண்ணியிருந்தார். அதே வருடத்தில் ரஜினியுடன் ‘பாண்டியன்’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’ என்றெல்லாம் வரிசையாகப் படங்கள் வந்தன. ‘மன்னன்’ படத்தில் விஜயசாந்திதான் நாயகி என்றபோதும் குஷ்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. ‘அண்ணாமலை’யில் பாத்ரூம் காட்சி, பாம்புக் காட்சி என்றெல்லாம் கலகலக்க வைத்தாலும் வயதான நிலையிலும் நடித்து அசத்தினார் குஷ்பு. இந்தப் படத்தில் இன்னொரு கூடுதல் தகவல்... கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில், ‘கூடையில் என்ன பூ குஷ்பு... ‘என்று எழுதுகிற அளவுக்கு குஷ்புவுக்கு ரசிகர்கள் எகிறிக்கொண்டே போனார்கள்.

கார்த்திக், பிரபு என அவர்களுடன் நிறையவே படங்கள் பண்ணினார் குஷ்பு. அர்ஜுன் இயக்கி நடித்த ‘சேவகன்’ படத்தில் அவருக்கு ஜோடியானார். சத்யராஜுடன் பி.வாசு இயக்கத்தில் இவர் நடித்த ‘ரிக்‌ஷா மாமா’ படமும் இவரின் கதாபாத்திரமும் ரொம்பவே பேசப்பட்டது. ‘பாண்டித்துரை’, ‘மறவன்’, ‘தர்மசீலன்’, ‘உத்தமராசா’ என வரிசையாக பிரபுவுடன் படங்களில் நடித்தார். ’புருஷ லட்சணம்’ படத்தில் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கி பத்திரிகைகளின் பாராட்டுகளைப் பெற்றார்.

கமலுடன்...
கமலுடன்...

இயக்குநர் பாரதிராஜாவின் ‘கேப்டன் மகள்’ படத்திலும் இயக்குநர் கே.பாலசந்தரின் ‘ஜாதிமல்லி’ படத்திலும் அருமையான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. அவற்றை மிக அழகாக நடித்து, தான் சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்தார் குஷ்பு. ஜெயராமுடன் நடித்த ‘மனசு ரெண்டும் புதுசு’ குஷ்புவின் நடிப்பாற்றலைக் காட்டியது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வந்த ‘நாட்டாமை’யில் குஷ்பு பல இடங்களில் கரவொலிகளை அள்ளினார். சரத்குமாருடன் ‘வேடன்’ படத்திலும் நடித்தார்.

ஜெயராமுடன் ‘கோலங்கள்’, கரணுக்கு சகோதரியாக நடித்த ‘துள்ளித்திரிந்த காலம்’, நெப்போலியனுடன் நடித்த ‘எட்டுபட்டி ராசா’ என வலம் வந்தவர், இயக்குநர் வி.சேகர் படங்களிலும் தனி முத்திரையைக் காட்டத்தவறவில்லை.

இருபது வருடங்கள் திரைத்துறையில் நடித்துக்கொண்டிருந்தவர், தடக்கென்று ’நம்ம வீட்டு மகாலட்சுமி’, ‘நந்தினி’ என சீரியல்களிலும் நடித்தார். டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வந்து நம் வீட்டு ஹாலிலும் மனதிலும் உட்கார்ந்துகொண்டார். நிகழ்ச்சித் தொகுப்பாளராக குஷ்புவையும் குஷ்பு அணிந்து வருகிற ஜாக்கெட்டையும் பெண்களே கூட ரசித்து, குறிப்பெடுத்துக் கொண்டார்கள். இயக்குநர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில், சத்யராஜ் நடித்த ‘பெரியார்’ படத்தில் மணியம்மையாகவே வாழ்ந்திருப்பார் குஷ்பு.

’பெரியார்’ படத்தில்
’பெரியார்’ படத்தில்

இயக்குநர் சுந்தர்.சி.யுடன் காதல் திருமணம். குடும்பம், குழந்தைகள் என்றிருந்தாலும் தயாரிப்புப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்குள்ளும் இறங்கி செயல்பட்டு வருகிறார். கிடைக்கிற படங்களில் நடித்தும் அசத்தி வருகிறார்.

திடீரென, பழைய குஷ்புவாக, எடையெல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக மாறி, இவர் வெளியிட்ட புகைப்படங்கள், இன்ஸ்டாவிலும் ட்விட்டரிலும் டிரெண்டிங்கையே உருவாக்கியிருக்கின்றன.

1970 செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தார் குஷ்பு. 1988 செப்டம்பர் மாதம் 29-ம் தேதி குஷ்பு தமிழில் அறிமுகமான ‘தர்மத்தின் தலைவன்’ படமும் வெளியானது. ஆக, பிறந்தநாளுக்காகவும் தமிழ்த்திரையில் மலர்ந்த நாளுக்காகவும் சேர்த்து ‘டபுள்’ வாழ்த்துகளைச் சொல்லுவோம் குஷ்புவுக்கு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in