சிலம்பரசனின் ‘பத்துதல’ தோற்றம் குறித்து நேர்ந்த சங்கடத்தை இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘பத்துதல’ திரைப்படம் அடுத்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது. இதன் இசைவெளியீட்டு விழாவும் அடுத்த மாதம் 18-ம் தேதி நடக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா படம் தொடர்பாக சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்துள்ள பேட்டியில் ‘வெந்து தணிந்தது காடு’ பட க்ளைமாக்ஸில் நடிகர் சிலம்பரசன் ‘பத்துதல’ கெட்டப்பில் வந்தது சங்கடமாகவும் வருத்தமாகவும்தான் இருந்தது எனக் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் பகிர்ந்திருப்பதாவது, “சிம்பு எனக்கு நல்ல நண்பர். மேலும், கெளதம் மேனனும் நல்ல நண்பரே. அவரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அதனால், பரவாயில்லை என நினைத்துக் கொண்டேன். மேலும், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் ‘பத்துதல’ தோற்றத்தை ரசிகர்கள் கவனித்து ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியே’ எனவும் சொல்லி இருக்கிறார். இந்தப் படத்தில் மணல் மாஃபியா கிங்காக சிம்பு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.